04. அறிவுரையில் நகைச்சுவை
(பலவிகற்பக் கலித்துறை)
காஞ்சிமகா பெரியவர் கால்நீட்டி சயனித்த காலை
காய்ந்த முகத்துடன் கிழவர் ஒருவர் வந்தார்.
பிரபோ! எதுவுமே முடியலை ஜுரம்வருது அடிக்கடி
பெரியவாதான் காக்கணுமென் இதயமும் பழுதென அங்கலாய்த்தார்.
பெரியவர் முனகிக் கொண்டே பேசினார் அவரிடம்
அருகில் உட்கார் உனக்கோர் சிறுகதை சொல்கிறேன்.
கிழவர் அமர்ந்தார் குழந்தையின் ஆர்வத்துடன் கதைகேட்க.
முனிவர் கதைசொன்னார் கனிவுடன் சன்னக் குரலிலே.
குறிசொல்லும் பூசாரி ஒருவர் கிராமத்தில் இருந்தார்
அறிவித்த தெல்லாம் பலித்திடும் ஆற்றல் உள்ளவரவர்
ஒருநாள் கோவிலைத் திறந்தபோது பொருட்கள் பலவும்
திருடுபோ னதுகண்டு தோழனைத் தேடி விரைந்தார்.
அந்தப் போலீஸ் தோழனோ இவரைத்தேடி விரைந்தோடி
வந்ததால் இருவரும் வழியில் சந்தித்தது விந்தை!
தேடிப்போன மூலிகை காலிலகப் பட்டதென்றார் பூசாரி.
கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென்றார் காவலர்.
என்சைக்கிள் திருடு போய்விட்டது நீதான் குறிசொல்லணும்
உன்னைத் தேடிவரக் காரணம் இதுவென்றார் காவலர்.
அடராமா! கோயில் திருட்டை உன்னிடம் சொல்லவே
படபடத்து நான்வந்தேன் உன்னிடம் என்றார் பூசாரி.
உனக்கு குணமாக வந்தாய்நீ என்னிடம் இவ்வயதில்!
எனக்கே இங்கு மூன்று தினம்போலக் காய்ச்சல்!
பூசாரியும் போலீஸும் சந்தித்தது போலில்லை யாஇது?
ஆசாரியர் சிரிக்க சிரித்துவிட்டார் அந்தக் கிழவருமே.
No comments:
Post a Comment