Wednesday, March 27, 2013

காஞ்சிமகா பெரியவர்


காஞ்சிமடம் அருனிகிலோர் பூக்காரி. காமாட்சி என்பதவள் பெயராகும்.
காஞ்சிமகா பெரியவரை வணங்கிடுவாள் வாஞ்சையுடன் அப்பாவென் றேவிளித்து.

அனுதினமும் பெரியவரை அர்ச்சிப்பாள் விநயமுடன் ஒருகூடைப் பூக்கொணர்ந்து.
வினவுவார் பெரியவர் அவளிடம்: வீணாக்கு கிறாயம்மா பூவினை!

வீணாகும் பூவிற்றுன் பிழைப்பினைப் பேணுதல் வேண்டாமா என்பாரவர்.
காசென்ன பெரியது சாமீயுன் ஆசிதான் வேண்டும் என்பாளவள்.

மடத்திலோர் நியதியுண்டு: இரவினில் மாமுனிவர் துயில்கொள்ளச் சென்றபின்
இடமில்லை அவரை எழுப்புதற்கு. இதற்கோர் விதிவிலக்கு காமாட்சி.

பெரியவர் கட்டளை அவளுக்கு: பூவிற்றல் முடிந்தபின் தரிசனம்.
கருணையுளம் ஒப்புமோ அவள்கொண்ட கனிபக்தி பிழைப்பினைக் கெடுக்கவே?

ஓரிரவு நாகராஜனைப் பணித்தார் ஒன்பதுமணி செய்திகேட்டுச் சொல்ல.
பாரினில் நடப்பது குறித்துப் பரிவுடன் கேட்டார் பெரியவர்.

இகமறுத்த ஜகத்குரு என்றாலும் இன்னல்கள் தீர்க்க உலகியலும்
உகந்தவர் கேட்டு அலசி உன்னதத் தீர்வுகள் சொல்வார்.

பெரியவர் கால்களில் வெல்வெட்டுப் பாதுகை. புதுக்கோட்டை ஜானாவெனும்
பெண்மணியின் அன்புக் காணிக்கை. பாதுகை வேண்டினார் நாகராஜன்.

பெரியவர் அன்று முழுவதும் பாதுகையைக் கழற்றாமல் அணிந்திருந்தார்.
பரிவுடன் அளித்தார் பாதுகையைப் பூக்காரி தரிசனம் செய்தபோது.

’இந்தாஇது உனக்குத்தான், எடுத்துக்கோ!’ விந்தையில் உறைந்த காமாட்சி
வந்தனையுடன் பெற்றுக் கொண்டாள் அந்தமில் கருணைப் பரிசினை!

எத்தனைபேர் பாதுகை விழைந்தனர் அவளிடம்! ’வட்சரூபாய் தருகிறோம்
அத்தனையும் உனக்கே’ என்றபோதும் அசையவில்லை அவளது அசலபக்தி.

பெரியவர் அவள்தேவை அத்தனையும் பரிவுடன் நிறைவேறச் செய்தார்
திருமணம் அவள்வீட்டில் நிகழ்ந்த தருணம் பொருளுதவி பலசெய்தார்.

பெரியவர் சித்தியான பின்னரும் பூக்காரியின் அர்ச்சனையவர் சமாதிக்கு.
ஒரேஒரு வித்தியாசம் பெரியவர் இருந்தபோது வெறுமனே அனுப்பமாட்டார்.

அப்பா நீயிருந்தால் எனக்குத் தப்பாமல் பிரசாதம் அளிப்பாயே
இப்போதுநான் வெறுங்கூடை யுடனே! என்றவள் உட்கார்ந்து புலம்பினாள்.

புலம்பியவள் கூடையில் அதிட்டானம் உள்ளிருந்து யாரோ எறிந்ததுபோல்
மலரொன்று விழுந்தது செம்பருத்திப் பூவின் பிரசாதம் என்றே!

பெரியவர் மறைந்ததுநம் விழிகளில் இருந்தே. இதுபோன்ற நிகழ்வுகளால்
பிரத்தியட்ச மாகநின்று அவரென்றும் அருள்பாலித்தல் பலரது அனுபவம்.

No comments:

Post a Comment