Monday, April 18, 2016

உயர்வை அடைவது நம் கடமை!



நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில், நாம் மிகவும் சாமர்த்தியசாலிகள்! யாராவது நம்மை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகள் கூறினால், 'அடப்போங்கய்யா...' என அலட்சியப்படுத்துவோம். ஆனால், பிரச்னை வந்தால், 'அடடா... அன்னிக்கே பெரியவர் சொன்னாரே... கேக்காம தப்பு செய்துட்டோமே...' என, புலம்புவோம். மாடுகள் ஓடியபின், பட்டியை மூடுவதிலும், காலம் போன பின், கண்ணீர் விடுவதிலும் என்ன பலன்!
பெரும் செல்வந்தர் ஒருவர், கப்பல் நிறைய பொருட்களை ஏற்றி, வியாபாரத்திற்காக கடலில் பயணப்பட்டார். எதிர்பாராத விதமாக, பெரும் புயலில் சிக்கி, உடைந்து சின்னா பின்னமானது கப்பல். அதன் உடைந்த பாகத்தை பற்றியபடி, நீந்தி, ஒரு தீவின் கரையில் ஒதுங்கினார் செல்வந்தர். 
அவரைக் கண்டதும், கைகளில் மாலைகளுடன் ஓடி வந்த அத்தீவு மக்கள், 'எங்கள் மன்னரே, வருக... வருக...' என்று கூறி, மாலை அணிவித்து, பட்டத்து யானையின் மீது ஏற்றி, அரண்மனைக்கு அழைத்து சென்று, அவருக்கு முடி சூட்டினர்.
செல்வந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த முதியவர் ஒருவரிடம் அது குறித்து விவரம் கேட்டார். அதற்கு அவர், 'இது, இத்தீவின் வழக்கம். இங்கு யார் புதிதாக வந்தாலும், அவன் ஒரு ஆண்டு அரசனாக இருப்பான்; ஒரு ஆண்டு முடிந்ததும், அவனை பதவியிலிருந்து இறக்கி, தூரத்தில் மனித நடமாட்டமேயில்லாத ஒரு தீவில் விட்டு விடுவர். உயிர் வாழ அடிப்படை வசதி இல்லாத அத்தீவில் எப்படி உயிர் வாழ முடியும்... அரசன் இறந்து விடுவான். பின், இப்படிப் புதிதாக வருபவரை மன்னராக்குவர்...' என்றார்.
இதைக் கேட்ட செல்வந்தருக்கு, வேர்த்துக் கொட்டியது. 'பெரியவரே... ஒரு ஆண்டு ஆகிவிட்டால், என் கதையும் அதுதானா, தப்பிக்க வழியே இல்லையா?' என்றார்.
'வழி உண்டு; நீ அரசனாக இருக்கும்போதே, இங்கிருந்து ஆட்களை அனுப்பி அத்தீவைப் பண்படுத்தி, பாதைகள் போடச் செய்; விளை நிலங்களை உருவாக்கு; வீடுகளையும், உனக்கான மாளிகையையும் உருவாக்கு. இப்படிச் செய்தால், நீ அங்கு போகும் போது, துயரப்பட மாட்டாய்; நலம் பெறுவாய்...' என்றார்.
பெரியவர் கூறியதைக் கேட்ட செல்வந்தர், 'நீங்கள் இதுவரை இருந்த அரசர்களுக்கு, இதைக் கூறவில்லையா...' எனக் கேட்டார்.
'கூறினேன்; பதவி சுகத்தில் களியாட்டம் ஆடினரே தவிர, நான் கூறியதைச் செய்யவில்லை...' என்றார்.
அன்றிலிருந்து, முதியவர் வழிகாட்டுதலின்படி, ஆள் அரவமற்ற அந்த தீவில், புது நகரத்தை உருவாக்கினார் செல்வந்தரான அந்த மன்னர்.
ஓராண்டு காலம் முடிந்ததும், தங்கள் வழக்கப்படி, அரசரை தீவில் விட்டனர் மக்கள். அரசரோ, தனக்கு வழிகாட்டிய பெரியவரையும் தீவிற்கு அழைத்து வந்து விட்டார்.
இதற்கு முன், இங்கு வந்து இறந்த போன அரசர்களைப் போல இல்லாமல் நலமாக வாழ்ந்தார். அதற்கு வழிகாட்டிய பெரியவர், 'மன்னா... பழைய தீவில் இருந்து, இந்தத்தீவிற்குப் பொருட்களை அனுப்பி உன்னை பாதுகாத்துக் கொண்டது போல், புண்ணியங்கள் செய்து, அதை மேலுலகத்திற்கு அனுப்பி வை. அங்கு போனதும், நீ நலமாக வாழ்வாய்...' என்று கூறி, மறைந்தார்.
அரசருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. பெரியவராக வந்து வழிகாட்டி, தன்னைக் காப்பாற்றியது தெய்வம் என! அதன்படியே, புண்ணியங்களைச் செய்து, நற்கதி பெற்றார்.
இது கதை அல்ல, நம் அன்றாட வாழ்வில், யாரோ ஒருவர் மூலம், உபதேசித்து வழிகாட்டுகிறது தெய்வம். அதை உணர்ந்து செயல்பட்டு, உயர்வை அடைவது நம் கடமை! 


No comments:

Post a Comment