Wednesday, December 17, 2014

வீட்டுக்கு வீடு வாசப் படி.

கோமதிக்கும், சகுந்தலாவிற்கும் நடுவே நடக்கும் உரையாடல்கள். இதில் அவர்கள் கலந்துரையாடுவது சிலருக்கு தங்கள் கதைப் போலத் தெரியலாம். தெரியாமலா சொன்னார்கள், '' வீட்டுக்கு வீடு வாசப் படி'ன்னு ?

கோமதிக்கும், சகுந்தலாவிற்கும் வயசு வித்யாசம் என்னவோ பனிரெண்டு  ,ஆனால் இருவர் வீட்டிலும் நடப்பது என்னவோ ஒரு வித்யாசமுமே இல்லை என்று தான் சொல்லத் தோணும். இருவருடைய கணவனுமே பிறந்தது வளர்ந்தது தமிழ் நாட்டில் என்றாலும் வேலை நிமித்தம் சில மாநிலங்களில் இருக்க நேர்ந்தது.

நாயைக் குளிப்பாட்டி நடுத்தெருவில் வைத்தாலும் அதுக் குப்பை மேட்டை நோக்கித் தான் போகுமாம்.

அதைப் போலத்தான் பயணம் ஒருவனுக்கு அனுபவத்தைக் கொடுக்கும்னு சொல்வார்கள், ஆனால் இவர்கள் அங்கும் இங்கும் இருந்தாலும் ,தங்களுடைய கொள்கையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு குறுகிய மனப்பான்மையோடே வாழ்க்கையின் முடிவை எட்டி கொண்டிருக்கும் வயதில் கூட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோ, மனிதாபிமானமோ இல்லாமலே வாழ்க்கையின் சக்கரத்தைத் தள்ளிக் கொண்டிருகிறார்கள், சகல  தர்மத்துக்கு இருக்கும்  சகதர்மபத்தினியுடன்!

சரி கதைக்கு வருவோம்.

கோமதி வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம்.கணவர் கோதண்டராமன். கணவனுக்கு ரொம்பவே மதிப்பு மரியாதைக் கொடுக்கணும் என்கிற கொள்கையுடன் வளர்க்கப்பட்டவள். அதனால், அதிகம் வாயாடாமலேயே வாழ்ந்துக் கொண்டிருந்தாள் .குழந்தைகள் பெரியவர்கள் ஆகி கல்யாணம் அவர்கள் குழந்தைகள் என்று ஆகும் வரை.

ஆனால், மருமகள், மருமகன் எதிரில் தன்னைத் தரக் குறைவாக கணவன் பேசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை, போறாதக் கொறைக்கு மகள்களுக்கு தர்ம சங்கடமாகப் போயி, அவர்கள் தன்னையே கொறை சொல்லும்போதுதான் பொறுக்க முடியாமல், கணவனை எதிர்த்துப் பேசத் தொடங்கினாள் .பிள்ளைகளும் இதுநாள் வரை பொறுமையாக இருந்ததுப் போறும்னு  மனைவிகள் எதிரில் அப்பாவை நேருக்கு நேர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். இது எல்லாம் தாங்க முடியாமல், மனைவி  கோமதியை ஒரு பஞ்சிங் பில்லோ வாக ( punching pillow ) எதற்கெடுத்தாலும் தன ஆத்திரத்தை அடக்க முடியாமல் திட்டிக் கொட்டித் தீர்த்துவிடுவார் கணவர் கோதண்டராமன்.

எழுபதைத் தாண்டியும் கூட இன்னும் குடும்பப் பொறுப்பை தன்  கையில் இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார் , எங்கே தன் கையை விட்டுப் போனால் தன்னுடைய கவுரமும் மதிப்பும் போய்டுமோன்னு பயம். வீட்டிலே நடுக் கூடத்திலே உட்கார்ந்துக் கொண்டு யார் வருகிறார்கள், என்ன செய்கிறாகள் என்று ஒரு பெண் மாதிரி கண்காணிக்க வேண்டியது. இவர் குணாதிசயங்களைப் பார்த்து ஒரு டிவி சீரியல் கூடப் பண்ணலாம்.

கோமதி அவளுண்டு அவள் வேலையுண்டு என்று, ஒரு பண்டிகை விடாமல் நாளுக் கிழமைக்கு பலதினுசு பலகாரம் செய்து பசங்களுக்கும் ,அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கும் தாராளமாகக் கொடுப்பாள், இதில் கொஞ்சம் பெருமைதான் தன மனைவி சகலகலா வல்லவி என்று. நன்றாக ருசிச்சி அனுபவித்து சாப்பிடுவார்.

 ஏன் கோமதி மனச்சோர்வுடன் இருக்கிறாள் என்று தான் பார்ப்போமே!

 கோமதியே சொல்கிறாள் கேளுங்கள்......................

என் வீட்டுக் காரருக்கு, நரி வலம்  போனால் என்ன இடம் போனால் என்ன, என் மேல் விழாமல் இருந்தால் சரின்னு இருப்பவர், நான் எதற்கும் அவரிடம் காசுக் கேட்கக் கூடாது, அவர் வீட்டுச் சிலவிற்குக் கொடுப்பதிலேயே காலத்தைத் தள்ளனும்னு எதிர்ப்பார்க்கிறார்.அது  எப்படி முடியும்?

அவருக்கு என்னப் பிடிக்குமோ அதயே தான் நான் செய்யணும் மொதலில். மற்றவை அப்புறம். ஒரு நாள் கூட எனக்கு என்னப் பிடிக்குமோ அதை செய்துக் கொள் என சொன்னதில்லை.

வேலைக்காரி எதற்கு?  மாலாதான் வேலைக்குப் போகிறாள், நீ சும்மா தானே இருக்கிறாய், !? மாலா என் மருமகள்.

எனக்கு  BP இருக்கு, அதனாலே என்னால அவ்ளோவேலையும் தனியாக செய்ய முடியாது,  ஒத்தையில முடியவில்லை, அதனாலேயே வேலைக்கு ஆள் வேண்டுமாக இருக்கு.

காய்களை அறிந்து, தேங்காய் துருவிக் கொடுத்து பாத்திரம் தேய்க்க ,வீடுக் கூட்ட மட்டுமே வேலைக்காரி .என் மருமகள் தினமும் ஆபிஸ் போவதற்கு முன்னாள் வாஷிங் மஷினில் துணிப் போட்டுப் போய்டுவாள் நான் அதை உலர்த்தி விடுகிறேன்.

துணி இஸ்திரிக்குக் கொடுத்தாலோப் போச்சு,வீட்டுல ஒரு பூகம்பமே வந்துடும்.

எதுக்காக இஸ்திரிக்கு பணம் கொடுக்கணும், நீ என்ன வேலைக்குப் போறியா? ஒன புடவையை இஸ்திரிப் பண்ணாமக் கட்ட முடியாதா?  மாலாக்குத்தான் சனி ஞாயிறு லீவ்  ஆச்சே ஏன் அவ செய்யக் கூடாதா? பணத்தை கரியாக்குறீங்க, மாமியாளும் மருமகளும்'

அடுத்தது  யாரும் வீட்டுல போன் பேசக் கூடாது, பேசினால் வெட்டு ஒன்னு துண்டுஒன்னுனு பேசணும். மணிக்கணக்கா பேசினாலே அவ்ளோதான். போன் பில் ஏறதோ  இல்லையோ இவரோட கேல்குலேடர் எகிறுடும்.

எதுக்கு வளவளன்னு மணிக் கணக்காப் பேச்சு, என்னவாம், எதுக்காக காலைலேயே போனு, அவ கணவன் என்ன கோடீஸ்வரனா, இப்டி பேசறதுக்கு?
உப்பு சப்பில்லாம ஒரு போனு, இதுங்கல் எல்லாம் தலைதெரிக்காம இருக்குங்க. கேப்பாரே இல்ல,

நடுவிலே சகுந்தலா,  " இதெல்லாம் ஒன்னுமே இல்லைங்க,கோமதியம்மா , எங்க வீட்டுல நான் யாருக்கூட பேசினாலும் முணுமுணுப்பாருங்க. ''

அப்றமா என்னவாம் ஒன்   அக்காளுக்கு அப்டின்னு கேப்பாருங்க. '' ''அதுகூட தேவலை, பக்கத்துலே ஒக்காந்து ஒட்டுக் கேட்டுட்டு,'யாரு போன்ல' அப்டின்னு கேப்பாருங்க.''

அவருக்கு யாரும் பேசக்கூடாது யார் பேசினாலும் ரொம்பக் கறாராப் பேசி வச்சுடுவாருங்க. அவரு வெளியேப் போயிட்டுவரப்போ யாராவது போனில் பேசிக் கொண்டு இருந்தாப் பொறுக்காது.

பில்லு வந்தா எல்லா டீடைலையும் பாப்பாருங்க, அப்புறம் ஒன் பொண்ணுக் கூடப் பேசினது தான் ஜாஸ்தி,' எங்க பொண்ணுக் கூடப் பேசினா என்னங்க, இவங்களை மாதிரி, நீ சவுக்கியமா புள்ளன்னு கேட்டுட்டுவச்சிடமுடியுன்களா?

ஒரு பொம்பளைக்கு சமைக்கத் தெரியலன்னா அதவிட கேடு வேற ஒண்ணுமேஇல்லை.மணிக்கணக்கா  பேசத்தெரியறது, வம்பளக்கத்தெரியறது சமைக்கத் தெரியலாயான்னு' கேப்பாருங்க,என்  மருமகளை.
அதுக் கூட அவ  இவரு இல்லாத சமயமா பாத்து என் மகன் கேட்டாணுட்டு ஏதாவது பொரியலோ சட்னியோ எப்படி செய்யறதுன்னு கேக்குமுங்க.
........................

சகுந்தலா சண்டப் போட்டு வீட்டுக்காரனிடம் இருந்து மாசம் ஆயிரம் ரூபா வாங்குறா ஏன்னால் அவள் வீட்டுக் காரர் சடகோபனுக்கு வேலைக் காரிகள் வீட்டிலே நடமாடினால் பிடிக்காது, . இவள் அவருக்கு பயந்து தானே கஷ்டமோ நஷ்டமோ வேலை  செய்கிறாள், அதற்கு அவள் கணவன் சடகோபன் கொஞ்சம் கூட உதவுவது இல்லை, ரொம்ப சுயநல வாதியாகத் தான் இருப்பார்.

ரெண்டு வாரிசுகளுமே பையன்கள் . பெரியவன் கல்யாணம் ஆனப்பக் கூட ஒன்றாகத்தான் இருந்தார்கள், இரண்டாவது மகனுக்கு கல்யாணம் கட்டியதும், அவர்கள் கூட்டுக் குடும்பத்துக்கு ரெடியாக இருந்து ரெண்டு மாடி, க்ரவுண்ட் ப்ளோர்னு வீடு பாத்தபோது, சடகோபனின் புத்தி தெரிந்து, ' இவள், தனி வலையானாலும் எலி வலையே நல்லதுன்னு ரெண்டு பேரையும் தனிக் குடித்தனம் வைத்து விட்டாள் . என்னதான் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் ஆனாலும் வாயும் வயிறும் வேறே இல்லையா?

கணவருக்கு கூட்டுக் குடித்தனம் ஒத்துக் கொள்ளாது என்றுத் தெரிந்து தான் சொன்னாள் .

ஏங்க ,புள்ளை க ரெடியா இருக்கும் போது நீங்க ஏங்க பிரிச்சு வச்சீங்க? .இது கோமதி

அடப்போங்க , ''ஒன்றாக இருந்தால் இவர் கையில் தான் ரிமோட் இருக்கும், இவர் நினைச்ச போது பிள்ளைகள், , மருமகள்கள், பேரக்குழந்தைகள் வெளியே போகவோ வரவோ வேணு ம் .அவர்களுக்குன்னு  ஒரு சுதந்திரம் கிடையாது. அவர்கள் இஷ்டத்திற்குப் போவது ஒருக்காலும் பிடிக்காது, அவங்க வெளியேப் போய் விட்டு வந்தால் மூஞ்சியைத் தூக்கி வச்சிப்பாரு ,என்னவோ சொத்தே பறி  போய்ட்டா மாதிரி!. ரெண்டு மூணுநாள் பேச மாட்டாருங்கோ.  இப்ப 'ஹும்' னு சொன்னா கூட பிள்ளைங்க  ரெடியா இருக்கானுங்க ''

அவருக்கு மனுசங்களே வேண்டாமுங்க, கூடப் பொறந்தவங்கக் கூட ரொம்ப பேச்சு வார்த்தை இல்லைங்க விஷேச நாளுக்கு புள்ளைக வீட்டில் மிஞ்சிப் போனால் ரெண்டு மணி நேரம் தான் அதற்கு மேல்  குட்டிப் போட்டப் பூனைதான், பொறுமையோ, பெற்றக் குழந்தைகளுடன் கொஞ்சம் இருப்போமேன்னேக் கிடையாதுங்க .அவங்களுக்கும் தாத்தாவோட  அதிகம் இருக்கப் பிடிக்காது, ரொம்பக் கஞ்சூஸ் பேச்சிலும் செயலிலும். இருக்கும் இருவரும் வீட்டில் எலிப் புலியாகத்தான் இருப்பார்கள், அவ்ளோ ஒத்துமை !

 சடகோபனுக்கு எந்தப் பொருளையுமே  வைத்த இடத்தில வைக்கத் தெரியாது, எங்கேவெனுமானாலும் வைப்பார் அப்புறம் காணோம் என்று ஒரு சிவ தாண்டவம் ஆடுவார், பாவம் சகுந்தலா தான் தனியாக மாட்டிக்கொண்டு எப்பப் பாரு அவர் அங்கேயும் இங்கேயும் வைத்தவைகளை எடுத்து கையில் கொடுக்க வேண்டி வரும். அவளுக்கும் வயசாகிறதில்லையா ?

'என்னங்க ஒங்கக் கூட இதேப் பொழப்பா போயிடுச்சு, அதை அதை ஒரு இடத்துல வைக்க மாட்டீங்களா?'

என்ன, ரொம்ப பலமா இருக்கு?, உனக்கு கஷ்டமா இருந்திச்சுன்னா பேசாம வீட்டை விட்டுட்டு ஒன் பையன்கக் கூட போய் இருந்துக்க, நான் தனியா நிம்மதியா இருந்துப்பேன், ஒன்னோட இதே தலைவலியாப் போச்சு"

அய்யயோ , இதெப்டிங்க எங்க வூட்டுக்காரரும் அதே மாதிரிப் பேசுறாக. ஒரு நாளு  அப்டிதான் நானும் நீங்களே எடுத்துக் கொள்ளக் கூடாதான்னு கேட்டேனுங்க, அவ்ளோதான்,' நானே எடுத்துக்கணுமுணா நீ எதுக்கு இருக்கீங்களாம்? பேசாம வீட்டை விட்டுப் போவவேண்டியது தானே''  ன்னு சொல்லிட்டாருங்க, எனக்குக் கோவ  கோவமா வந்திச்சு,

 'அப்ப எனக்கு கொடுக்கறதை கொடுங்க நானுப் போயிக்கிறேன் ன்னு சொல்லிப் புட்டங்க, அதுக்கு பதிலு சொல்றாரு,'' நீ என்னாத்தை பெருசாக் கொண்டாதுட்டே' ன்னு ! ,

வேடிக்கையா இல்லீங்க சகுந்தலா  ,ரெண்டுப் பேருமே சொல்லி வச்சாமாதிரிப் பேசுறாங்க!..

அவருக்கு பணம் செலவழைக் கூடாதுங்க , எப்பவாவது கோயம்பத்தூர் போவனும்னா, புள்ளைக ஏசில புக் செய்யறேன்னுவாங்க, இவரு அதுக்கு,,எங்களுக்கு ஒண்ணும் சொகுசு தேவையில்லை, சாதாரண சிட்டிங் செய்யுன்னு சொல்வாருங்க, புள்ளைகளும் ஒரு மொற வேணுமுன்னே எனக்கு எசியிலயும் இவருக்கு சாதாரண டிக்கட்டை வாங்கிக் கொடுத்தாருங்க, அப்பறம் ட்ரைன் ஏ றினப்பொரம் வந்துப் பாத்துட்டு,பேசாம இருந்தாருங்கோ, அடுத்த மொறை மதுரைப் போறப்ப, தானே போய்  ரெண்டு பேருக்கும் ஏசியில வாங்கினாருங்க, மனசுக்குள்ளே இருக்குங்க சொகமா இருக்கணும்னு, ஆனால் வறட்டு ஜம்பம் கூடவே நெழலாட்டம் வருதுங்க.

இது எவ்ளவோ பரவாயில்லைங்க, கோமதியம்மா, எங்க வீட்டுக் காரரு தரைல துண்டு போட்டு சீட்டுக் கொடுக்கராங்கன்னா அதையே வாங்கிடுவாருங்க.அவ்ளோ பிசினாரி ...
எங்க இதுக்கெல்லாம் என்னதான் முடிவுங்க, நாம இப்டியே பேசிட்டே இருக்கவேண்டியது தானுங்களா?
பொறுமையா இருங்க, காலம் வரும்போது அவுகளே தெரிஞ்சிக்குவாங்க !

.......................................................
என்ன நீங்களும் அப்டியே நினைக்கிரீங்களா ?






No comments:

Post a Comment