Wednesday, December 17, 2014

மார்கழி விருந்து...... 2ம் நாள்

 பாற்கடலுள்  துயின்ற  பரமன் 

 குளிர்ந்த  காற்று  வீசி  உடம்பை  ஊசி முனையால் குத்துவது  போல்  துளைத்தது.   மேல் அங்கவஸ்தரத்தை   விரித்து முழுதுமாகத்தன்   உடலைப் போற்றியபடி  ஒரு  கையில்  அகல் விளக்குடன்  விஷ்ணு சித்தர்  வழக்கமாக  ரங்கன்  பூஜை செய்யும்  இடத்தில் உட்கார்ந்து இருந்தார்.  அவர்  கண்கள்  கோதையைத்  தேடின.  அவள்  நடமாடும்  சத்தம் கேட்டது.  சற்று நேரத்தில்  அவர்  எழுந்து  உட்கார்ந்ததைக்  கவனித்த  கோதை அவர்   அருகில் வந்தாள் .  அவர்  கால்களில் விழுந்து  வழக்கம் போல்  வணங்கினாள் .

 ''அப்பா எதாவது  வேண்டுமா?''
''எப்போ பொழுது விடியும்னு  காத்திண்டிருக்கேன்  கொழந்தே.  இன்னிக்கு என்ன  பாசுரம்  எழுதியிருக்கே படி ''

''இதோ  முடிச்சுட்டேன்  பா''   சுடர் விளக்கை  தூண்டி  விட்டு  கடைசி  வார்த்தையை  திருத்தி  எழுதிவிட்டு   தனக்குள் ஒரு தடவை பாடிப்  பார்த்துக்கொண்டே தனது கையில் உள்ள  ஓலைச்சுவடியை   கோதை. படிக்கிறாள்

''வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
                    செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
                   நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
                  செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
 ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
                    உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்''

''ரங்கநாதா'' என்று  சாஷ்டாங்கமாக  பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார்  விஷ்ணு சித்தர்.

''அம்மா தாயே,   எவ்வளவு  சுலபமாக  ஒன்றுமறியாத  குக்கிராமத்து இடைப்பெண்கள் கூட புரிந்து கொள்ளும்படியாக  எளிய  வார்த்தையில்  எப்படி  விரதம்  அனுஷ்டிக்க வேண்டும்  என்று  சொல்லியிருக்கிராயே.  எவ்வளவு  நேர்த்தி  எவ்வளவு  அழகு?''.    சிரிக்கிறார்  கிழவர்.

என்னப்பா  சிரிக்கிறீர்கள்?

இல்லையம்மா.  நான்   நேற்று  இரவெல்லாம்  தூக்கமின்றி   நீ இன்று  என்ன  பாசுரம்  எழுதுவாய் என்று  எனக்குள்ளேயே  கற்பனை பண்ணிக்கொண்டு  இப்படி  இருக்குமோ  அப்படி இருக்கலாமோ  என்று  வித விதமாக  சிந்தித்து  சில  பாசுரங்களை  என்  மனதில்  புனைந்து கொண்டிருந்தேன்.  அவை  அத்தனையும்  நீ  எழுதியதற்கு  முன்  உரை போடக் கூட  காணாது  என்று  அறிந்து  என்  மடமையை   எண்ணி சிரித்தேன்.  நீ   அரங்கன் அருள்  கொண்டவள். நான் எப்படி  உன் எண்ணங்களை என்னுள்  உருவாக்கிக் கொண்டு  செயல்பட  முடியும்? 

பூரித்துப் போனார்  விஷ்ணுசித்தர்


இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைச் சொல்லுகிறாள் கோதை நாச்சியார், (இதையே பின்னால் 27வது பாசுரத்தில், இந்த  பெண்களின் நோன்பை சிறந்த விதமாக  முடித்தால் அதன் பயனாக‌, நல்ல ஆடை, அணிமணிகள் அணிந்து கொள்வோம், நெய் மற்றும் அதோடு கலந்து நிறைய பால் சாதம் உண்ணுவோம். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் விட்டுக்கொடுத்தோமோ அதையெல்லாம்  மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள்.).

நோன்பு நோற்கும்போது   மனத்தில் திடமான  பக்தியும்   நம்பிக்கையும்  முழுதுமாக  கலந்து   வேண்டியது  அவசியம். அழகு சாதனங்கள், உடலுக்கு  நல்ல அலங்காரங்கள், ருசியான உணவு வகைகளை எல்லாம்  தேடாமல்,  தொடாமல்,   சிறந்த எண்ணத்தோடு,  திறந்த  உள்ளத்தோடு,  உறுதியாக  'செய்யாதன   செய்யோம்,தீக்குறளைச் சென்றோதோம்' அதாவது, செய்யக்கூடாதவற்றைச் செய்ய  மாட்டோம்,  தீமையானவற்றை, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச்
செய்யாமல்   நல்லனவற்றையே நினைப்போம், நல்லனவற்றை மட்டுமே எண்ணிப்   பேசுவோம் என்று தீர்மானமாக  இருக்கவேண்டும்  என்று கோதை கூறுகிறாள்.

 இது எவ்வாறு ஆயர்பாடியில்  நடந்தது  என்று பார்ப்போமா?   உடனே வில்லிப்புத்தூரை  விட்டு  ஆயர்பாடிக்கு பயணம் செய்வோம்.

 "'இதென்னடி  புதுசா இத்தனை நாள் இல்லாமல்  இப்போ   "பாவை நோன்பு?   நாமெல்லாம் இதை பண்ணினதே  இல்லையே ?. அதை எப்படி பண்ணுவது, எதற்காக என்று சொன்னால் தானே   புரிந்து கொண்டு ' சாஸ்திரம் என்ன சொல்கிறதோ, சம்ப்ரதாயம் எப்படியோ  அப்படியே   பண்ணலாம் , ஆண்டாள் நீயே  சொல்லு?''

"கேளுங்க சொல்றேன்,

 ''திருப்பாற்கடல்  என்று  ஒன்று  இருக்கிறதே  தெரியுமா?  கேள்வியாவது பட்டிருப்பீர்களே?    அந்த  பாற்கடலில்  நாராயணன் பாம்பு மேலே படுத்துக்கொண்டு  உலகத்தில்  நம்  எல்லோரையும்  ரட்சிக்கிறான் என்று  உங்களுக்கே தெரியும்.  நாம் செய்யும் பாவை நோன்பு   அவனைப்  பாடிப்  போற்றி வேண்டுவது. எப்படியென்றால், நாம் விடிகாலையில்  எழுந்து   யமுனை  தான்  நம்  வீட்டுக்கு அருகேயே  ஓடுகிறதே   அதில் குளித்து  தலையை  வாராமல்  அள்ளி முடிந்துகொண்டு, மை  சாந்து, வண்ணப்பொடிகள்  எல்லாம்  உபயோகிக்காமல்  ஆகாரம் ஒன்றும்  உண்ணாமல்  விரதம் இருக்கணும்..அப்போ  பால், பழம், தயிர், வெண்ணை  இதெல்லாம்  வயிற்றில் ரொப்ப கூடாது. உள்ளே மட்டும் ஒன்றும்  இல்லாமல்  சுத்தமாக  ருந்தால்  போதாது.  வெளியேயும், பொய், பித்தலாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் யார் கிட்டே யும் கூடாது.   அமைதியாக மாரியாதையாக  அன்போடு  பழக வேண்டும்.  உதவ வேண்டும்.''

"ஏண்டீ,  நாம  இவ்வளவு  கஷ்டப்படணுமா? என்றாள்  ஒரு சிறுமி. 

"எனக்கு  தெரியலையே '' என்றாள்   மற்றொரு சிறுமி.

''ஆண்டாளையே  கேட்போம்''  என்று   அவர்கள் ஒன்றாக  ஆண்டாள்  நீ  சொல்கிறாயே  அந்த  நாராயணன்  அப்படி யென்ன ஒரு  பெரிய கடவுள்,  நீயே சொல்லேன்.  அப்போது  தான்  எங்களால்  புரிந்து கொள்ள முடியும்.  உன்னளவு நாங்கள் எல்லாம்  அறிந்தவர்கள் இல்லையே''

 பேசிக்கொண்டே என்ற  அவர்கள்  அதற்குள் யமுனைக்கு சென்று குளித்து விட்டு  மணலில் அம்மன் பதுமை  செய்து பூஜை செய்து விட்டு  பிரார்த்தித்துக்கொண்டு  நாராயணன்மேல்  பாடிகொண்டே  தத்தம்   வீடுதிரும்பினர்.

“என்னடி  நான்  கேட்டேன்  நீ  ஒன்றும் சொல்லவே இல்லை? என்று   ஒருவள் கேட்டாள்.

“நாளைக்கு  விடியற்காலை  நாம்  மீண்டும்  சந்திப்போம்  இல்லையா,  அப்போது   உங்களுக்கு விவரமா சொல்றேன் நேரமாச்சு இப்போது.  . கன்னுக்குட்டி  காத்திண்டிருக்கும் பசியா  அதுக்கு  பால்  ஊட்டணும்   முதல்லே'.  பசு மடி நிறைய  பால்  வைத்துக்கொண்டு  பால் கறக்க காத்திருக்கும் ' என்றாள் ஆண்டாள்.

No comments:

Post a Comment