Thursday, December 4, 2014

கிரிவல மஹிமை


எங்களுக்கு மஹா பெரியவா தான் எல்லாம். வேறு எங்கும் போகவேண்டும் என்று விசேஷமாக தோன்றியது இல்லை. எப்போது காஞ்சீபுரம் சென்றாலும் பெரியவா தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிடுவோம். காமாக்ஷி அம்மன் கோவிலுக்குகூட எப்போதாவதுதான் செல்வோம். காமாக்ஷியும் பெரியவாளும் வேறில்லை. எங்கள் மகள் மதுமதி உயிர் பிழைத்து அவளுக்கு ஒரு மகன் இருப்பது சத்தியமாக அவர் க்ருபயால்தான். எங்கள் இண்டெர்வியூ மஹா பெரியவா வேர்ட்பிரஸ்.காம் சைட்டில் இருக்கிறது.
இப்படி இருக்கையில் அவளுக்கு 6 வயது இருக்கும்போது என் மனைவி நாம் ஏன் திருவண்ணாமலை சென்று கிரிப்பிரதக்ஷணம் செய்து வரக்கூடாது என்று கேட்டாள். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்ச நாள் சென்று மறுபடியும் அதைக் கூறினாள். அப்போது நான் திருவண்ணாமலையை பற்றி நினைத்தாலே முக்தி என்பார்களே அதனால் நினைத்தாலே போதும் என்று கிண்டலாக சொல்லிவிடுவேன். அவள் விடாமல் கிரிவலம் சென்றால் நம் கர்மா கழியும் என்று சொல்வார்கள். அப்படியாவது நம் குழந்தையின் வேதனை குறையட்டுமே என்றாள். 

நாட்கள் செல்லச் செல்ல  எனக்கும் போய்வந்தால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. சரி சென்று முடிவாகி ஒரு நாள் குறித்தாகிவிட்டது. இப்போது நான் ஒன்று சொல்லியாகவேண்டும். அந்த சமயத்தில் அவள் சைனஸ் நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். அடிக்கடி ஜுரம் தலைவலி என்று வந்துவிடும். மருந்து மாத்திரைகள் என்று போய்க்கொண்டிருந்தது. நாங்கள் கிளம்பவேண்டிய நாள் வந்தது. முதல் நாள் அவளுக்கு ஜுரம். ராத்திரியெல்லாம் தூங்கவில்லை. எப்படியிருந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்று பெரியவா மேல் பாரத்தைப் போட்டு கிளம்பினோம். 

நாங்கள் மூவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வாசலுக்கு வந்தோம். அப்போது வாசலில் ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. ஆட்டோகாரர் பஸ்ஸ்டாண்டுக்கா என்று கேட்டார். அவர் எங்களை ஏற்றிக்கொண்டு மயிலாப்பூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்று வேறொரு ஆட்டோ பிடித்துக் கொடுத்தார். பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். ஆச்சரியமாக இருந்தது. அவர் எங்களுக்காக வீட்டு வாசலில் காத்திருந்தமாதிரி இருந்தது.

வேறு ஆட்டோவில் பஸ் ஸ்டாண்ட் சென்று திருவண்ணாமலை பஸ் பிடித்து ஊர் வந்தடைந்தோம். ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினோம். அன்று மாலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ரமணாஸ்ரமத்தில் மலை வல மகிமை என்று ஒரு புத்தகம் வாங்கி படித்தோம். மலையே சிவன் நாம் பய பக்தியாக சுற்ற வேண்டும் நிறைய யோகிகள் ரிஷிகள் எல்லோரும் அருபமாக இன்றும் கிரிவலம் சென்றுகொண்டிருக்கிரார்கள். அவர்களை தொந்திரவு செய்யாமல் அடக்க ஒடுக்கமாக நேர் கோட்டில் குறுக்கும் நெடுக்கும் போகாமல் நாம் சிவ சிந்தனையோடு கிரிவலம் செல்லவேண்டும் என்று போட்டிருந்தது. மேலும் கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு திசைகளில் என்னென்ன சந்நிதிகள் விசேஷங்கள் இருக்கின்றன என்றும் அறிந்துகொண்டோம். அதன்படி செய்வதாக சங்கல்ப்பம் செய்துகொண்டோம்.

மறுநாள் விடிகாலை அவளுக்கு உடம்பு ரொம்ப முடியவில்லை. இருந்தாலும் பெரியவா துணை இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஸ்நானம் செய்து 4 மணிக்கு கிரிவலம் கிளம்பினோம். கோவில் வாசலில் அவளுக்கு நமஸ்காரம் செய்யக்கூட முடியவில்லை. கீழே குனிந்தால் தலைவலி கொல்கிறது. எனினும் பக்தியுடம் காயத்ரி மந்திரம் ஜெபித்துக்கொண்டு நாங்கள் மூவரும் கிளம்பிவிட்டோம். அப்போதெல்லாம் திருட்டு பயம் கிடையாது. சரியான பாதை கிடையாது. மண்ணும் கல்லும்தான். கூட்டமும் கிடையாது. அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு அப்போது கவலையும் கிடையாது பயமும் கிடையாது. ப்ரத்யக்ஷ சிவனை பிரதக்ஷிணம் செய்யவேண்டும் பெரியவா துணை வரவேண்டும் என்கிற ஒரே சிந்தனைதான். வேறு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.

இப்படியாக 4 மணி நேரத்தில் நிறைவு செய்தோம். விடியுமுன் வேளையில் கிரிவலம் செய்வது ஆனந்தமாக இருந்தது. விபூதி வாசனை, மூலிகை வாசனை தெய்வீக சிந்தனை, மௌனம், காயத்ரி ஜபம் என்று செய்து முடித்தோம். கிரிவலம் முடித்து கோவில் வாசலில் நமஸ்காரம் செய்து விட்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினோம். வரும் வழியில் என் மனைவி நாம் எதோ ஒன்றை விட்டுவிட்டோமோ என்று கேட்டாள். நான் எல்லாம் சரிபார்த்துவிட்டு  ஒன்றையும் விடவில்லை எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னேன்.

வீடு வந்து சேர்ந்தோம். சற்று நேரத்தில் அவள் முகத்தை (சைனஸ்) அழுத்திப் பார்த்துவிட்டு என்னங்க எனக்கு தலை வலி இல்லை என்று சொன்னாள். ஆமாங்க அதைத்தான் திருவண்ணமலையில் விட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்றாள். என்னால் நம்பமுடியவில்லை. அன்று போன சைனஸ் நோய் தலைவலி போயே போய்விட்டது. 25 ஆண்டுகள் கழித்து அதன் சுவடே இல்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதன்பிறகு மலை என்னை ஈர்த்தது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் செய்யலானேன். இன்று பொர்ணமியா ரவி திருவண்ணாமலை போயிருப்பான் என்று என் உறவினர்கள் நண்பர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். தாம்பரத்தில் கிளினிக் வைத்திருந்தேன். முடிந்ததும் இரவு 10 மணிக்கு கிளம்பி பஸ் பிடித்து 2 மணிக்கு சேர்ந்து, செருப்பை ஒரு கடையில் வைத்துவிட்டு கிரிவலம் முடித்துவிட்டு 5,6 மணிக்கு கிளம்பி 10 மணிக்கு சென்னை அடைந்து ஆஸ்பத்திரி கிளம்பிவிடுவேன். சில நாட்கள் பஸ்ஸில் உட்கார இடம் இருக்காது. நின்றுகொண்டே சென்று கிரிவலம் முடித்து விட்டு நின்றுகொண்டே திரும்பி வந்த நாட்களும் உண்டு.

என் மனைவியும் மகளும் நிறைய தடவை என்னுடன் கிரிவலம் செய்துள்ளனர். ஒரு சமயம் கார்த்திகை மாதம். நாங்கள் ஆரம்பித்தவுடன் மழை பிடித்துவிட்டது. கொட்டுகிற மழையில் நனைந்துகொண்டே முடித்திருக்கிறோம். என் மகள் அவளுக்கு இருந்த உடல் உபாதையிலும் அவளுக்கு இருந்த பக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. ஒரு தடவை ஒரு சந்நியாசி கையில் விசிறியுடன் கோவிலில் அமர்ந்திருந்தார். அவரிடம் ஆசி பெற்றோம். அவர்தான் விசிறி சாமியார் என்கிற யோகி ராம்சூரத்குமார் என்கிற ஞானி என்று பின்னாளில் தெரிந்தது.

பிறகு நான் மலேசியா வந்ததும் அடிக்கடி கிரிவலம் செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. இப்போதெல்லாம் நிறைய மாறிவிட்டது. ரோடு போட்டுவிட்டார்கள். லைட் இருக்கிறது. ரொம்ப இருட்டில் போக பயமாக இருக்கிறது. காலம் மாறிவிட்டது. அப்படியும் ஒருதடவை ஒரு சுவையான அனுபவம்… ஒரு நாள் விடிந்தும் விடியாத நேரம். நாங்கள் மூவரும் கோவில் முன்பு நமஸ்காரம் செய்துவிட்டு கிரிவலம் ஆரம்பித்தோம். நான் முன்னே சென்றுகொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் 10 அடி பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். நான் நடக்க ஆரம்பித்ததும் கோவில் வாசலில் படுத்திருந்த ஒரு நாய் (முழுவதும் கருப்பு) துள்ளிகுதித்து எழுந்தது. இது என் மனைவி மகள் சொல்லி எனக்குத் தெரியும். பிறகு அது எங்கள் கூடவே ஆதி அண்ணாமலை கோவில் வரை எங்களுக்கு பாதுகாப்பாக அப்பப்போது எங்கள் காலில் உரசிக்கொண்டு வந்தது. விடிந்ததும் அதைக் காணவில்லை. அந்த நாய் யார்? ஒரு சித்தரா? தெரியவில்லை. அது ஒரு தெய்வீக அனுபவம்.

இப்படி திருவண்ணாமலையைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இப்பவும் நான் மானசீகமாக தினமும் நித்ய சஹச்ர காயத்ரி ஜபம் செய்யும்போது கிரிவலம் செய்துகொண்டுதான் இருக்கிறேன் மானசீகமாக என் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு. சில மாதங்கள் முன்பு நான் மஹா பெரியவாளின் 3 கட்டளைகள் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் மூச்சு பயிற்சி பற்றி எழுதியிருந்தேன். மூச்சு இழுத்து அடக்கி வெளியே விடுவதுக்குள் 10 காயத்ரி செய்யலாம் என்று கூறியிருந்தேன். அப்படியில்லாமல் 5 காயத்ரி செய்தால் சுலபமாக இருக்கும். இது என் அனுபவத்தில் கண்டது.

அப்டாமினல் ப்ரீதிங் – மூச்சு வெளிவிடும்போது வயிறு உள்ளே போகவேண்டும். பிறகு உள்ளே இழுங்கள். அப்போது வயிறு வெளியே வரவேண்டும். பிறகு மூச்சைப் பிடிக்கவும். மெதுவாக வெளி விடவும். உள்ளிழுத்து பிடிக்கும்போது 3 காயத்ரி மனசுக்குள் சொல்லவும். வெளிவிடும்போது 2 சொல்லவும். இழுத்தல்,பிடித்தல், விடுதல் விகிதம் 1:3:2 என்று இருக்கவேண்டும். இப்படி 20 காயத்ரிக்கு 4 தடவை மூச்சு விட்டுவிடுவீர்கள். ஒரு தடவை கிரிவலம் வந்துவிடுவீர்கள். என் அனுபவத்தில் இப்படி செய்வதால் நம் கவனம் சிதறாமல் இருக்கிறது. நீங்களும் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

நான் திருவண்ணாமலையினால் ஈர்க்கப் பட்டதிற்கு என் மனைவி முக்கிய காரணம். இந்த தருணத்தில் அவளைப் பற்றி சொல்லவேண்டுமென்று நினைக்கிறேன். அவள் என் வாழ்வில் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவளிடம் ஒரு தெய்வவீகத் தன்மை இருக்கிறது. அவள் ஒரு ஸ்படிகம் மாதிரி. அவளிடம் பழகுகிறவர்கள் அந்த ஸ்படிகதினால் பிரதிபலித்து விடுகிறார்கள். அவர்கள் அவர்களையே பார்கிறார்கள். அவர்கள் கள்ளம் கபடு இல்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு பிடிக்கிறது. இல்லையேல் பிடிக்காது. இதுதான் உண்மை. அதனால்தான் அவ்வளவு மோசமாக இருந்த குழந்தையை மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தால் காப்பாற்றி ஆளாக்க முடிந்தது.

இத்துடன் என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நீங்களும் முடிந்தபோது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பக்தியுடன் தகுந்த நேரத்தில் ஜபம் செய்துகொண்டு அமைதியாக கிரி பிரதக்ஷிணம் செய்து எல்லா நன்மைகளையும் பெற்று ஆன்மீகத்தில் முன்னேறி வழ வேண்டும் என்று மஹா பெரியவாளை வேண்டி பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
Ravichandran.

No comments:

Post a Comment