Thursday, December 18, 2014

மார்கழி விருந்து...... 3ம் நாள்

ஆண்டாள் காட்டும் அருட்பாதை (3)


பாசுரம்  3 ;

ஓங்கி  உலகளந்த  உத்தமன்  பேர்  பாடி

நாங்கள்  நம்  பாவைக்கு ச்   சாற்றி  நீராடினால்

தீங்கின்றி  நாடெல்லாம்  திங்கள்  மும் மாரி  பெய்து

ஓங்கு  பெறும்  செந்நெல்   ஊடு  கயலுகள ப்

பூங்குவளை (ப்) போதில்  பொறி  வண்டு  கண்  படுப்ப (த்)

தேங்காதே  புக்கிருந்து  சீர்த்த  முலை  பற்றி

வாங்க  குடம்  நிறைக்கும்  வள்ளல்  பெரும்  பசுக்கள்

நீங்காத  செல்வம்  நிறைந்தேலோர்  எம்பாவாய் 


சென்ற ஆண்டு காலனிடமிருந்து என்னை காப்பாற்றி உயிர் கொடுத்தான் கண்ணன் .அதற்காக அவன் புகழைப் பாடுவதை தவிர்த்து வேறு என்ன முக்கியமான வேலை இவனுக்கு இருக்கப் போகிறது ?உயிர் நீங்கினால் சடமாகப் போகும் இவ்வுடலை காத்து ரக்ஷித்தவன் அந்த சடகோபனன்றி வேறு யாராகஇருக்க  முடியும்?அவனல்லவோ அஹோபில மடத்தை நிறுவி அங்கேயே கோயில் கொண்டு பக்தர்கள் இருக்குமிடம் நாடி சென்று 
அருள் செய்கின்றான் ! 
அவனை நம்பியவர்களின் வாழ்வில் எத்தனையோ 
பக்தர்களுக்கும் அவன் அருள் செய்துள்ளான். அவரவர் மனம் அதை அறியும். 
அதை நன்றியுடன் நினைத்து அவனை வணங்குவது ஒவ்வொரு பக்தரின் கடமையாகும். 
அதை விடுத்து அகந்தையுடன் அந்த கருணை தெய்வத்தை நினையாது 
உலக போகங்களில் மூழ்கி திரிவதுநன்றி மறந்த செயலாகும்.  
இறைவன் இல்லை என்பவர்களின் பிதற்றலை  செவி மடுத்து 
கேட்காதீர்கள். தெய்வம் என்றால் அது தெய்வம் ,வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்றான் நாத்திகனாயிருந்த கண்ணதாசன்  நாராயணனை உணர்ந்த பின் தெய்வத்தை காட்டு என்பார்கள் நாத்திகர்கள் ஹிரண்யகசிபு போல. காட்டினால் மட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ளவா  போகிறார்கள்.?
அப்போதும் இவர் நாராயணன் என்பதற்கு என்ன சாட்சி என்பார்கள் ?
அவர்களின் ஆணவம் அப்படித்தான் அவர்களை பேச வைக்கும்.நாம்தாம் அவர்களின் பேச்சை சட்டை செய்யாமல் இறைவனை அடைவதிலே உறுதியாக இருக்கவேண்டும். 

இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஆயுளும் முடிந்துபோகும் அரிதாய்க் கிடைத்த இந்த மனிதப் பிறவியும் மண்ணுக்குள் போய்விடும் எனவே உறக்கத்தை விட்டொழியுங்கள். 

ஒரு மலர் காயாய் ,கனியாய் ஆவதற்கு   நன்றாக மலர்ந்து மணம் வீசிக்கொண்டு மற்றொரு பூவின் மகரந்தத்தை  சுமந்து வரும் வண்டின் திருவடிகள் தன்  மேல் படுவதற்கு காத்திருப்பதைப் போல நாமும் இறைவனின் திருவடிகள் நம் உள்ளத்தில் படுவதற்காக கவனத்துடன், இன்பமாக அவன் புகழைப் பாடிக்  கொண்டு காத்திருக்கவேண்டும். 

அப்படி இருந்தால் பகவானின் கண்ணனின்  அருள் கிடைப்பது உறுதி உறுதி. 
அப்படி ஒரு கணம் அவன் அற கிட்டிவிட்டால் போதும் பல கோடி பிறவிகளில் நாம் செய்த தவம் பலித்து நாம் விடுதலையாகிடுவோம். 

இதை எழுதும் போது பல்லி பலமுறை ஒலிஎழுப்பி ஆமோதித்தது.
பல்லி சொல்லுக்கு பலன் உண்டு. காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வரதராஜர் சன்னதிக்கருகே பல்லி வடிவத்தை வணங்க ஆயிரமாயிரம் பக்தர்கள் வருகிறார்கள். 

இறைவனை விட இறைவனின் அடியார்களுக்கு பகவானே மதிப்பு அளிக்கிறான்,அதனால்தான் இறையடியார்களுக்கு இறைவனுக்கு சமமமான 
மரியாதைகள் அளிக்கப்படுகின்றன. காரணம் இறையடியார்கள்அனைத்தையும் அவன் வடிவமாக பார்ப்பதுதான். 

அந்த உயரிய நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். 
வணங்குவதர்க்கென்றே இந்த புனிதமான மாதத்திலாவது மற்ற எண்ணங்களைவிட்டொழித்து அவன்  நினைவாக இருப்பது அவசியம்.
மற்றவர்களின் வாழ்வை பறித்து ஆதிக்கத்தை நிலை நாட்டி பிறரை அடிமை செய்வதை அவன் என்றும் ஏற்றுக்கொண்டதில்லை. 

அது அவன் பக்தனாக இருந்தாலும் கூட.அவர்களை தண்டிக்காமல் விட்டதில்லை அவர்களின் அகந்தை குணத்தை வேரறுத்து அருள் செய்வது அவனின் தலையான குணம். 
தன்  தேவைக்கு போக மீதமுள்ள மற்ற உலகங்களை 
தன்  ஆளுமையில் கொண்டுவந்த மகாபலியின் அகந்தையை அழித்து அவனுக்கு அருள் செய்து உலகம் முழுவதும் அதைப் படைத்த அந்த உலகளந்த உத்தமனுக்குதான்  சொந்தம் என்கின்ற உண்மையை நிலைநாட்டிய உலகளந்த உத்தமனின் பெருமையை நினைந்து
நாமும் அகந்தை  கொள்ளாமல் இருக்க பழகவேண்டும். அப்போதுதான் அவன் அருளைப் பெற்று ஆனந்தத்தில் திளைக்க முடியும். 

அன்னை பராசக்திக்கு நாம் சாற்றும் பூமாலைகளை விட அரங்கனின் பாமாலைகள் பிடிக்கும் என்கிறாள் ஆண்டாள் இந்த பாசுரத்தில் 
அவ்வாறு செய்தால்  நாட்டில் வெள்ளம் ,புயல், மழை இவற்றால் சேதம் ஏற்பாடாத வகையில் மழை பெய்ய  வேண்டிய காலத்தில் பெய்து சுபிட்சம் நிலவும், பயிர்கள் செழிக்கும், ஆனினங்கள் பெருகி மக்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்கும் என்கிறாள்.கோதை 

பசுக்கள் என்றால் ஜீவான்மாக்கள்  என்று பொருள் .பசுக்களின் தலைவனாக சிவபெருமான் விளங்குவதால் அவருக்கு பசுபதி என்று பெயர். தெய்வங்களுக்கும் ஜீவன்களுக்கும் அந்தராத்மாவாக கண்ணன் விளங்குகிறான். பசு தன் கன்றை  நினைத்தவுடனேயே அதன் மடியில் பால் சுரந்து வருவதைப்போல உண்மையான பக்தன்  கண்ணனை நினைக்கையில் அவன் அருள் தானே சுரந்து வந்து நன்மை அளிக்கும் என்கிறாள் ஆண்டாள். 

நாமும் அத்தகைய தூய பக்தியை நமக்கு அருளுமாறு கண்ணனிடம் பிரார்த்திப்போமாக. 
நாம் அரங்கனை உள்ளன்புடன் வழி படாமையினால் மனதில்   பொறாமை,  வெறுப்பு, வஞ்சகம் ,ஆதிக்க மனப்பான்மை போன்ற தீய குணங்களுக்கு ஆட்பட்டு நாள்தோறும் துன்பங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். 

அரங்கனின் பாதங்களை  பணிவோம். ஆனந்த நிலையில் நம் மனத்தை 
வைத்திருப்போமாக

No comments:

Post a Comment