Saturday, October 11, 2014

தேன் பற்றிய மருத்துவ உண்மைகள்


தேன் மருந்து பொருளாகவும், உணவுப் பொருளாகவும் பண்டைய காலம் தொட்டு நம் உணவுக் கலாசாரத்தில் இடம் பிடித்திருப்பதால், மக்கள் மனதில் தேன் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டது. ஆனால், உண்மையில், தேன் பற்றிய மருத்துவ உண்மைகள் தேனாக இனிக்காது. 
நாம் நினைக்கும் அளவுக்கு தேன் ஒன்றும் மகத்துவம் வாய்ந்தது அல்ல; சாதாரணமாக கிடைக்கும் ஒரு இயற்கையான பிரக்டோஸ் குளுக்கோஸ் கரைசல் தான். இந்த கரைசல் சற்று இறுகி, மெழுகு பூசிய தேன் அடையில், வைக்கப்பட்டுள்ளது. இது, பெரும்பாலும், தேனீக்களின் புழு பருவத்தில் அதற்கு உணவாக பயன்படுகிறது. இது சுகாதாரம் அற்ற முறையில் தேனீக்களால் சேகரித்து வைக்கப்படும் உணவு.

தேன் ஒரு சாதாரண, கெட்டியான பிரக்டோஸ் குளுக்கோஸ்; இதைத்தவிர, அதில் சிறிதளவு வைட்டமின், 'சி'யும், 0 அளவு புரோட்டீனும், சில இயற்கையான கெமிக்கல் வாசனை பொருளும், தேனீக்களின் உமிழ் நீரிலிருந்து சுரக்கும் சில அரோமேட்டிக் அமிலங்களுமே கலந்தது. தேனின் வாசனை கூட இயற்கையான அரோமேட்டிக் அமிலங்களாலும், பூவின் மகரந்தத்திலிருந்து வரும் நெக்டார் என்ற பொருளை தேனீக்கள் விழுங்கி, அதை திருப்பி உமிழ்வதாலும் இந்த வாசனை வருகிறது.தேனீயின் உமிழ் நீரிலிருந்து வெளிவந்த இறுகிப்போன ஒரு ரசாயனம் தான் தேன்கூடு; இது, ஒருவித ஆர்கானிக் மெழுகினால் ஆனது.
இதைத் தவிர தேனில் சிறிதளவு கரோட்டின் என்ற வேதிப்பொருள் மற்றும் பயோ பிளைவினாய்டு போன்ற ரசாயன பொருளும் சிறிய அளவில் உள்ளன. இந்த கெமிக்கல்கள் தான் தேனுக்கு நிறத்தை கொடுக்கிறது.
சுருங்கச் சொன்னால், தேனில் எனர்ஜி கொடுக்கும் குளுக்கோசை தவிர, வேறு எந்த சத்தும் இல்லை; அதற்கு எந்த சிறப்பு மருத்துவ குணமும் கிடையாது. ஆனால், அதற்குமாறாக பிரச்னைகளை கிளப்பும் தன்மையே அதிகம் உள்ளது.

தேன் பற்றி சில திடுக்கிடும் தகவல்கள்!
தேனீயின் வாயில் சுரக்கும் பார்மிக் மற்றும் பார்மால்டிகைடு அமிலம் தான், தேனில் உள்ள கிருமிகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கிறது. தேனில் உயிருள்ள கிருமி மற்றும் இறந்த கிருமிகளும் உண்டு. இந்த கிருமிகளிலிருந்து வெளியேறும் நச்சுப்பொருளுக்கு, 'டாக்சின்' என்று பெயர். இந்த நச்சுப் பொருள், குடல் வியாதியை உண்டாக்கும். சில சமயங்களில் அந்த நச்சுப் பொருட்கள் நரம்பு மண்டலத்தையும் செயலிழக்க செய்யும். பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுத்தால், 'இன்பேன்ட் பொட்டிலிசம்' என்ற வியாதி வரும். இதனால், குழந்தைகள் மூச்சு விட சிரமப்படுவர். அதனால், ஒரு வயது வரைக்கும் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக் கூடாது.

மலைத்தேன், கொம்புத் தேன், மரத்தேன், பொந்துதேன் என, மார்க்கெட்டில் பல பெயர்களில் தேன் விற்பனை செய்யப்பட்டாலும், பழங்குடியினர் கொண்டுவரும் தேன் என்றால் அது, சுத்தமான தேன் என்ற எண்ணம் பலரிடம் உண்டு. ஆனால், இவர்கள் கொண்டு வரும் தேன் மூலமும், சில சமயங்களில் இத்தகைய கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எந்த தேன் கெடுதல் செய்யும், எந்த தேன் கெடுதல் செய்யாது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இயற்கையாக கிடைக்கும் தேனிலும் அபாயம் உண்டு; வீட்டில் சேமித்து வைத்திருக்கும் இயற்கை தேனிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க, பதப்படுத்தப்பட்ட மற்றும் அல்ட்ரா வயலட் கதிர்களால் சுத்தப்படுத்தப்பட்ட தேனைச் சாப்பிடுவதன் மூலம், இந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். 

No comments:

Post a Comment