Monday, October 13, 2014

சத்தியமிதே சத்குருநாதா!!

உன் பாதம் பட்ட மண் கிடைத்தால், அதை எடுத்து கண்ணில் வைத்தே ஒற்றி கொள்ள, ஏங்கிடுதே அனைத்து உயிரும் அவனியிலே சத்குருநாதா!!நீ நடந்து வந்த பாதையிலே கடந்து வந்த இன்னல்களை, நினைத்து கூட பார்க்க என்னால் முடியவில்லை இதயமது சில மணித் துளிகள் தானே செயல் இழக்குதே சத்குருநாதா!! 

இத்தனையும் நீ செய்ய காரணம் , உன் கருணை மழையால் இந்த வையகம் நனைந்து செழித்தோங்க வேண்டும் என்று அறிவோமே சத்குருநாதா!!

வெய்யில் என்றும், மழை என்றும் எதுவுமே பாராமல் உன் சன்யாச தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாமல் எங
்கள் நலனுக்காகவே பல வருடங்கள் உன் பிஞ்சு பாதம் நோக நடந்தாயே, நாங்கள் அப்படி உனக்கு என்ன செய்துவிட்டோம் என்று நினைக்க கண்களில் நீர் துளிகள் திரையிடுதே சத்குருநாதா!! 
நீ உணவு உட்கொண்ட நாட்களை விட, உணவு உட்கொள்ளாமல் விரதம் இருந்த நாட்கள் தான் அதிகம். இத்தனையும் எங்கள் நலனுக்காகவே செய்து தாயை விட மேலாகி நின்றாய் சத்குருநாதா!! 
 

"சிறிய உயிரினங்களுக்கும் கூட என்னை அறியாமல் தீங்கு நேர்ந்துவிட கூடாதென்றே, சக்கர வாகனத்தில் ஏற மாட்டேன்" என்றே சன்யாசம் பெற்ற அந்த பதிமூன்று வயதிலேயே சபதம் செய்தாயே அந்த வைராக்கியம் வேறு யார்க்கு வரும் சத்குருநாதா!! 
"உயிருள்ள உயிரற்ற அனைத்திலும் இருப்பது அந்த பரப்பிரம்மமே "என்றே உணர்ந்து, அதை அண்டத்தவர்க்கும் உணர்த்த பெரும் பாடு பட்டாயே உன் அன்பை போல் வேறில்லை சத்குருநாதா!!

குடியானவன் முதல் கோபுரத்தில் குடியிருப்பவன் வரை, அனைவரும் அனைத்திலும் ஒன்றே என்று சொல்லும் காருண்ய மூர்த்தியாய் வந்தாயே சத்குருநாதா!! 
ஜகத்துக்கே குருவான பின்பும் " நான் ஜகத்துக்கு குரு இல்லை, ஜகம் தான் எனக்கு குரு, அதனால் நான் ஜகத்குரு", என்று சொல்ல உன்னால் மட்டும் எப்படி முடிகிறது என்றே சொல்லி வியக்கிறேன் சத்குருநாதா!! 
அறுபத்தி நாலு கலைகளையும் கரைத்து குடித்தும் கிஞ்சித்தும் கர்வம் என்றால் என்னவென்றே தெரியாமல் குழைந்தை போல் நாங்கள் சொல்வதை கேட்டு ரசிப்பாயே உன்னை போற்றி எழுதிவிட யாரால் இங்கு முடியும் என்றே தெரியவில்லை சத்குருநாதா!! 

இந்த உலகில் உன்னைப்போல் வேறு யாரும் இருந்ததில்லை, இனி வரப்போவதும் இல்லை என்றே யோசிக்காமல் அடித்து சொல்வேன் சத்தியமிதே சத்குருநாதா!! 

No comments:

Post a Comment