ராம பக்தர் ஒருவர் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
“ராமாயண பாராயணம் – உபன்யாசம் நடந்தது. இன்று பூர்த்தியாயிற்று” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
“நீங்கள் ராமாயணத்தை இன்னும் பூர்த்தி செய்யலே. ராம பட்டாபிஷேகம் நடந்தது – என்று சொல்லுங்கோ… ராமாயணத்தில் யுத்த காண்டம் வரை பாராயணம் – உபன்யாசம் ஆகியிருக்கு. அப்புறம், உத்தரகாண்டம்னு ஒரு காண்டம் இருக்கே ?”
இதைத் தொடர்ந்து ராமாயணம் பற்றிய பல விஷயங்களைப் பொதுவாக தெரிவித்தார்கள் பெரியவர்கள்.
“முன்பெல்லாம் ஒரு கடிதமோ, தஸ்தாவேஜோ எழுத ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டு விட்டு, ராமஜயம் என்று எழுதி விட்டுத் தான் விபரங்களை எழுதுவார்கள்.”
‘ராமராஜ்யம்’ என்று சொல்றோம். அவ்வளவு பெருமை ராமனுக்கு! ‘வேறு எந்த ராஜாவும் தர்மம் தவறாமல் ஆட்சி செய்ததில்லையா?’ என்று கேட்கலாம். ‘செய்திருக்கிறார்கள்’ – என்பதுதான் சரியான பதில். ஆனால் ஒரு சாமான்ய குடிஜனம் குற்றம் சொன்னதற்காக, பத்தினியையே தியாகம் செய்தது, ராமன்தான்.
ராமாயண உபன்யாசம் என்றால், ராமபட்டாபிஷேகம் வரையில்தான். உத்தரகாண்டத்தில் ராமன் வைகுண்டம் போனார் என்று சொல்லியிருக்கு. ராமன் எப்போதும் நம்முடனேயே இருக்கணும்; வைகுண்டதுக்கெல்லாம் போகப்படாது என்பதால், யாரும் உத்தரகாண்டம் பாராயணம் பண்றதில்லே; உபன்யாசம் பண்றதில்லே!
இப்போதும் கூட, அநேக கிருஹங்களில் ராமாயண புஸ்தகத்தை பூஜையில் வைத்திருக்கிறார்கள். படிக்காவிட்டாலும் கூட, தினமும் ஒரு புஷ்பமாவது, துளசியாவது போட்டு நமஸ்காரம் செய்கிறார்கள்.
உத்தரகாண்டத்தில் அபூர்வமான விஷயங்கள் நிறைய இருக்கு. அதையும் படிக்கணும்.
ஒரு ராமபக்தரை முன்னிலைப்படுத்தி, எல்லோருக்குமாக பெரியவாள் தெரிவித்த அபிப்ராயங்கள் இவை.
ஸ்ரீராமநவமியன்று பெரியவாள் சுத்த உபவாசம். தண்ணீர் கூட அருந்துவதில்லை.
தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினான் ராமன். இந்த விஷயத்தில் பெரியவாளும் ராமன்தான்.
மஹா பெரியவா அருள்வாக்கு : -
எந்த வீட்டில், யார் இறக்கும் தருவாயிலிருந்தாலும் யாரும் கூப்பிடாமலேயே அங்கு சென்று 1008 தடவை ராமநாமம் சொல்லிவிட்டு வர வேண்டும். அந்த ஆத்மா முக்தி அடைந்துவிடும். இது ஜீவாத்ம கைங்கர்யம்.
No comments:
Post a Comment