திருக்கயிலாய மலையில் ஒரு நாள் சிவபெருமானும் பார்வதி தேவியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள வில்வ மரங்களில் வயது முதிர்ந்த
ஒரு ஆண் குரங்கு உட்கார்ந்து வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே அமர்ந்திருந்த சிவ-பார்வதி மேல் போட்டது
அதனை சிவனுக்கு செய்த அர்ச்சனையாக ஏற்ற அம்பிகை மனமிரங்கி அதன் மனதிலுள்ள அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை அருளினாள்
”உன் கர்மக் கணக்கை நேராக்க நீ பூமியில் மன்னனாக தோன்றி உலகம் முழுவதையும் அரசாள்வாயாக” என்று அருள்புரிந்தார் சிவபெருமான்.
ஞானம் பெற்ற குரங்காயிற்றே,“உங்களை தரிசித்துக் கொண்டு, இங்கேயே இருந்து விடுகிறேன். பூமியில் பிறந்தால் மாயை வசப்படுவேனே. ஐயனே.. மானிடப் பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி, இந்தக் குரங்கு முகத்துடனேயே பிறக்கும்படி அடியேனுக்கு அருள்புரியுங்கள்” என்று வேண்டியது.
அதன்படி அரிச்சந்திரனின் வம்சத்தில், குரங்கு முகத்துடன் அந்த தெய்வீக குரங்கு பிறந்தது. முசு என்றால் குரங்கு என்றும் ஒரு பொருள் உண்டு.
எனவே அந்தக் குழந்தைக்கு முசுகுந்தன் என்று பெயரிட்டனர்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, இந்திரன் தன் மகள் தேவசேனாவை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுக்க இருக்கும்
செய்தியை கேட்ட முசுகுந்தன், அந்த தெய்வ திருமணத்துக்கு ஸகல வசதிகளையும் செய்து கொடுத்தார். க்ருஷ்ணாவதார காலத்தில் யாராலும் வெல்லமுடியாத காலயவனன் எனும் அரக்கனை க்ருஷ்ணன் முசுகுந்தனின் தபோ பலத்தால் எரித்து சாம்பலாக்கினார்.
முருகனின் அருளையும் கண்ணனின் அருளையும் பெற்ற முசுகுந்தன் ஒரு சமயம் இந்திரனுக்கு துணையாகச் சென்று ஒரு அரக்கனை அழித்தார்.
இந்திரன் ப்ரதியுபகாரமாக என்ன வேண்டும் என்று கேட்க,”எமக்கு பொன்னோ, பொருளோ வேண்டாம். நீவிர் வழிபடும் சோமாஸ்கந்த மூர்த்தி மட்டுமே வேண்டும்.” என்றார்.
மஹாவிஷ்ணுவிடமிருந்து பெற்ற தான் சோமாஸ்கந்தர் (தியாகராஜ ஸ்வாமி) எனும் விடங்க மூர்த்தியை முசுகுந்தனுக்கு அளிக்க மனமில்லாமல், ஒரே மாதிரி 7 விக்ரஹங்களை உண்டாக்கி வைத்தான் இந்த்ரன். ஆனால் சிவனருளால் அவர் சரியான மூர்த்தியை கண்டறிய, 7 விக்ரஹங்களையும் முசுகுந்தனிடமே கொடுத்தான் இந்த்ரன்.
முசுகுந்தனும் அதனை திருவாரூர் முதலான ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
முசுகுந்தன் பின்னர் வனம் சென்று கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானின் திருவடிகளில் ஐக்யமானார்.
விஷ்ணு பூஜை செய்த முதல் விக்ரஹம் திருவாரூரிலும் மற்ற விக்ரஹங்கள் திருபழனம், திருசாற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,
திருப்பூந்துருத்தி, திரு நெய்தானம் ஆகிய தலங்களில் இன்றும் இருக்கிறது.
இந்த சப்த விடங்கம் எனும் 7 ஸ்தலங்களிலும் “முசுகுந்த பூஜை” என்றே ஒரு விசேஷமான பூஜை - முசுகுந்தனின் சார்பாக இன்றும் நடைபெறுவதைக்
காணலாம்.
No comments:
Post a Comment