Friday, October 3, 2014

பகவத் கீதை ஆழம் காண முடியாத ஞானக்கடல்.

        தாத்தா -  பேரன்     2

''ஏன்  தாத்தா   உலகிலேயே  ரொம்ப  ஆழமான  கடல்  பசிபிக்  சமுத்ரமா இல்லையா?;;

''இல்லேடா  பேராண்டி,  என்னைப்பொருத்தவரை,  எல்லா  சமுத்ரத்தின்  ஆழத்தையும்  அளவெடுத்து  வைத்தாகி விட்டது.  இந்த  பகவத்  கீதை  தான்   ஆழம்  காண முடியாத  ஞானக்கடல்.''

''எப்படி  தாத்தா?

''அதில் வரும்  ஒவ்வொரு வார்த்தைக்கும்  ஒவ்வொரு நிமிஷமும்  புதுப்புது  அர்த்தம்  தோன்றும்.  அனுபவம் தான்  அதை  விளக்கும்.  உனக்கு  இப்போ  புரியாது. அதன்  ஒவ்வொரு  கருத்தும் புதிது புதிதாக  தோன்றிக்கொண்டே வரும். அது தான்  அதன் ரகசியம். புனிதமானது.''

''தாத்தா  நீ தானே  சொன்னே  ஒரு நாள்,   கங்கை தான்  புனிதம்.  அதில்  தான் ஒரு தரமாவது குளிக்கனும்னு.  இப்போ  பேச்சு மாத்தறியே?''

''அடே,  நான்  அப்போ சொன்னதை  தாண்டா  இப்பவும்  சொல்றேன்.  கங்கை நீர்  புனிதமானது.  அதுலே  குளிக்கிறவனுக்கு  புண்யம்.  முக்தி.  ஆனால்  கீதையை  கொஞ்சம்  புரிஞ்சிண்டாலும்,  கீதை  என்கிற  கங்கையில்  குளிக்கிரவன்  தான்  மட்டுமல்ல  அதை அடுத்தவனுக்கும் சொல்லி  அவனையும்  கரையேற்றலாமே . எது உசத்தி  நீயே  சொல்லு?''

''கீதையை  படிச்சாலே  ஞானம்  வந்துடுமா  தாத்தா?''

''நல்ல  கேள்வி  கேட்டாய் பையா.   மேலே  பறப்பவன்  கீழே  அழகிய அருவிகள், மலை சிகரங்கள்,  பள்ளத்தாக்குகள்  இயற்கை  வளம்,  ஆக்ரா  தாஜ் மஹால்,  சிதம்பரம் கோவில்,  தஞ்சாவூர்  கோவில்  எல்லாம்  பார்த்து  மகிழ்கிறான்.  மேலே  பறக்கும்  கழுகு  எங்கே  செத்த  எலி,  நாய், பெருச்சாளி  இருக்கிறது  என்று  தான்  தேடுகிறது.  எல்லாம்  யார்  எதை  தேடுகிறார்கள்  என்பதை  பொறுத்து  அமைகிறது.  ஒரு நாளைக்கு  பத்து ஸ்லோகம்  படிக்கணும்  என்று  கணக்கு  பண்ணி  படிகிறவன்  ஸ்லோகத்தின்  எழுத்துகளை தான்  பார்க்கிறான்.  ஒரு  ஸ்லோகத்தை எடுத்துக்கொடு  யோசித்து  அதன்  ஒவ்வொரு  வார்த்தையையும்  அனுபவிப்பவன் கோடி  கோடி  அர்த்தங்களை  ஒவ்வொருநாளும்  ஒவ்வொரு விதமாக  அனுபவிக்கிறான். அதால்  தான்  கீதை  தன்னுடைய  தனித்தன்மையை  என்றும்  தாங்கிக்கொண்டு  வருகிறது.  புரிகிறதா?

என்னவோ  தாத்தா  உனக்கென்று  சில உதாரணங்களை  தயாராக  வைத்திருக்கிறாயே.   கீதையை   படிக்கிறபோது  வேகமாக  படிக்காதே மெதுவாக  படி  என்கிறாயா?'' 

''கடலில்  நீந்துவதும்  மூழ்குவதும்  தெரியுமல்லவா  உனக்கு.  நீந்துகிறவன்  கொஞ்ச நேரம்  நீந்திவிட்டு வெளிவருகிறான்.   மூழ்குவனுக்கு தான் முத்து கிடைக்கும்.  இதற்கு  முத்துக்குளிப்பது  என்று பெயர்.  கீதையை மேலோட்டமாக  படிப்பதற்கும்  அதை  ஆழ்ந்து ரசித்து புரிந்து  படிப்பதற்கும்  இது தான்  வித்யாசம்.''  

''ஏன்  தாத்தா இதுக்கு பதில் சொல்லு?   கடவுள்  என்கிறோமே அது  கொண்டாடற சாமி  தானே, நம்ம வீட்டு பிள்ளையார்  தானே?''

''டேய்  கோபு ,  நீ  யோசிக்க  ஆரம்பிச்சுட்டே.  எனவே  உனக்கு புரிய வைக்கிறது  கொஞ்சம்  சுலபம்.  கடவுள்  என்பது  ஒரு  உருவமற்ற  அருவம்.  காலம் நேரம், ஆரம்பம், முடிவு, ஆண்  பெண் என்றெல்லாம்  பிரிக்கமுடியாத  ஒரு சக்தி.  அதை  எல்லாவற்றிலும்  எல்லோரிலும்  நிறைந்து இருக்கிறது.  ஞானிகள்  அதை  பிரம்மம்  என்கிறார்கள்.  சர்வம்  பிரம்ம மயம்  என்றால்  எங்கும் எதிலும் பிரம்மம் என்று  பொருள். பனிக்கட்டி பார்த்திருக்கிறாயே ,  பனிக்கட்டியும் நீர்  தான்,  உருகினாலும்  நீர் தான்,  அது  ஆவியானாலும்  அதே தான். ஒன்றே  பலவாக  பல பேர்களில்  காட்சி தருவது தான்  கடவுளின் பல  பெயர்கள்.  உங்கள்  பள்ளி வகுப்பில்  40 பேருக்கும் ஒரே  கலரில் ஒரே  அளவில்  சட்டை கொடுத்து  அதை எல்லாம்   நீங்கள் எப்படி  உங்களது  என்று  பிரித்துக்கொள்வீர்கள்.  உங்கள் பெயர்  எழுத்து,  ஒரு  அடையாளம்  வைத்து  இது  எனது இது  உனது  என்று  பிரிக்கிறீர்கள்  அல்லவா.  அது போல்,  பிரமத்துக்கு உங்களுக்கு பிடித்த  ஒரு  உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து  அதற்கு  பூஜை  வழிபாடு  எல்லாம்  செய்கிறோம்.  எல்லாரிலும்  இருக்கும் பரமம்  நம்  ஒவ்வொருவரிலும் இருக்கிறது  அல்லவா.  இதை  ஞாபகப்படுத்தத்தான்  ஒரு  சிறு  வாக்கியம் அமைத்திருக்கிறார்கள்  நமது முன்னோர்கள்.  ''தத்  த்வம் அஸி''   ஆணோ பெண்ணோ   இல்லாத அந்த  பரமம் நீயாக  இருக்கிறது. அதை  உணர்ந்தவன்  ''அஹம்  பிரம்மாஸ்மி''   நான் அந்த  பிரம்மமானவன்  என்று  உணர்ந்து மற்றவனையும்  அவ்வாறே  மதித்து  அவனுக்கு உண்டான  கவுரவம், மரியாதை,  மதிப்பு  எல்லாம் தரவேண்டும் அந்த  பிரமத்துக்குரிய  அன்பை  செலுத்தவேண்டும். ''

''தாத்தா  நீ  சொன்னா  கொஞ்சம்  புரியறமாதிரி  இருக்கே.  அது சரி  அப்போ  இதெல்லாம்  மனசு  சம்பந்த பட்டது தானே.  இது  அவசியம்  தான்  இல்லையா ?''

''நல்லவேளை  நான்  சொல்வதற்கு  முன்னே  நீயாக  சரியான  கேள்வி  கேட்டாய்.  மனசு  நம்  எல்லோருக்குள்ளும்  இருந்து  நம்மை  ஆட்டி வைக்கிறது.  அதை  நல்ல  சிந்தனைகளில்  ஈடுபட  செய்வதால்  அதை  தவறான  எண்ணங்களில்   செல்லாமல் ( திருட்டு, பொய், கபடம், ஹிம்சை,   தடுமாற்றம்,  கோபம், ஆத்திரம்,  பொறாமை,  தீய  சகவாசம்)  வேறு படுத்தி  நல்லவழியில் செலுத்துகிறோம்.  அமைதி கிடைக்கிறது. 

தாத்தா,  அப்போ  பூஜை  எல்லாம்  பண்ணவேண்டாமா.  வெறுமே  உட்கார்ந்து  சிந்தனை பண்ணால்  போதுமா?

டே  பையா.  ஒரே   தாவல் தாவுகிராயே.  பூஜை  வேண்டாம்  என்று  யார்  சொன்னது.  பூஜை  செய்யும்  நேரம்  நம்மை   மீறி ஒரு  உயர்ந்த  சக்தி இருக்கிறது.  அது  தான்  நம்மை  வழி நடத்துகிறது  என்ற  எண்ணம்  தோன்ற வேண்டும். பார்க்க முடியாத  அதை  பார்க்கும்  ஒரு  பொருளாக,  உருவமாக  எனக்கு பிடித்தமாதிரி  அலங்கரித்து  அதற்கு   வேண்டிய மரியாதைகளை செய்கிறேன்,  அதை நன்றியோடு  திருப்தி படுத்துகிறேன்  என்று  மனம்  சந்தோஷத்தோடு  செய்வது  தான்  பூஜை.  ஆச்சு  மணி  எட்டு  சீக்கிரம்  பூஜை  பண்ணி விட்டு  ஆப்பிஸ்   போகவேண்டும்  என்று  ஆபிஸ்  வேளையில் மனம்வைத்துக்கொண்டு  வீட்டில்  அதிகாரம் பண்ணி  பாதி  டெலிபோன் பேச்சோடு  செய்வது  கடவுள் வழிபாடு இல்லை.  காலத்தை  வீணாக்குவது. 

ஒரு  தமிழ்  கவிதையில்,  கை ஒரு  பக்கம் மணியடிக்கும்,  மனசு  எங்கேயோ இருக்கும்,  விழி எதையோ  பார்க்கும்,  வாய்  எதையோ  சொல்லும்  இப்படி பண்ற பூஜையாலே  அந்த  பிரம்மத்துக்கு  என்ன  திருப்தி கடிக்கும், செய்து தான்  என்ன பலன்  என்று  வரும்.''  மனசு  ஒன்றி  ஈடுபடும்போது  வேறு எதுவும் வேண்டாம்.  அதற்கு  தான்  இரண்டறக்கலப்பது  என்று பெயர்.

தாத்தா  அப்பறம்  இன்னும்  நிறைய  சொல்லு  நான்  ஸ்கூலுக்கு  போய்ட்டு  வரேன்.
___________________

       மனமும்   அமைதியும்  

கோபுவின்  டீச்சர்கள்  அன்று  வீட்டில்  சூழ்ந்து கொண்டார்கள்.  தாத்தாவிற்கு அவர்கள்   சமீபத்தில்   75வது  வயது முடிந்ததால்  ஒரு  மாலை  வாங்கி வந்து  போட்டார்கள்.  

''சார்   உங்களை  ஒண்ணு   கேட்கப்போறேன்''.--   பத்மா  டீச்சர் 

''நீங்கள்   ஆங்கில புத்தகங்கள்  கூட  நிறைய  படிப்பீர்களாமே''

''நல்ல  விஷயங்கள்  டிம்பக்ட்டூ வில்  பேசும்  பாஷையில்  இருந்தாலும்  தெரிந்து கொள்ளலாமே. நமக்குத்  தெரிந்த மொழியில்  படிப்பதால்  சந்தோஷம் கிடைக்கிறது.

கையில்  என்ன  புத்தகம்  
ஒ   இதுவா.  ஜேம்ஸ் அல்லன் என்ற  ஆங்கிலேய  ஞானி ஒருவன்  எழுதிய  ஒரு  புத்தகம். 

அதில்  என்ன  படித்தீர்கள்  சொல்லுங்களேன்.

தாத்தா   தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.  ஆரம்பித்தார்.  

மேலை நாட்டு  வேதாந்தி ஜேம்ஸ் அல்லன் படிக்காதவர்களுக்கு  இது  ஒரு  நல்ல  சந்தர்ப்பம்.  அவரது  ஆங்கில எழுத்தில் நான்  அதிசயித்தது   அதன்  வலிமையோடு கூடிய  தெளிவும்  ஆக்ரமிக்கும்  சக்தியும்.  

நம்மை வசீகரிக்கும்  எண்ணங்கள் அவருடையவை. .  சில வாக்யங்கள்  பலம்  கொண்டு  நம்மை  தாக்க கூடியவை. சிலது  எளிமையானவை,  ஆனால் எல்லாமே  பிரயோசனப்படுபவை. குணத்தை நல்லதாக  மாற்றக்கூடியவை.   (குணமே  எண்ணங்களின்  மொத்த  வெளிப்பாடு  தானே.)

மற்றவற்றின்  மீதோ ,மற்றவரின் மீதோ  உன்  அதிகாரத்தை  நீ  செலுத்த முடியாது. உன்னை  வேண்டுமானால்  கொஞ்சம்  அடக்க முயற்சி பண்ணலாம்.  அடுத்த  ஆசாமியின்  உறுதியை  நீ  குலைக்கவோ  கலைக்கவோ வழியில்லை.   ஆனால்  நம்  எண்ணங்களின்  தாக்கத்தால்  நமது  உறுதியை ஒருவாறு உருவாக்கலாம். எவன்  தன்  எண்ணங்களின், மனத்தின் ஓட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறானோ, அவனிடம்  தான்  மற்றோர்  தங்களது மன அமைதிக்கு  வழிகேட்டு  வருவார்கள். 

ஒவ்வொரு மனிதனும்  அவனது எண்ணத்தின்  பிரதி பலிப்பே.  சந்தோஷமாக,  உடல் நலத்தோடு, வசதிகளோடு உலகில் வாழ்வது  எல்லாமே  ஒருவன்  எப்படி  தன்னை  அண்டை அசல்களோடு   உள்ளும் புறமும்  ஒத்துப்போக வைத்துக்கொள்கிறான், அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறான்  என்பதைப்  பொறுத்துதான்  அமைகிறது.     --  இதையே  தான்  கீதையிலும்  கண்ணன்  சொல்கிறான்.  

உன்னுடைய  மனம்  என்னும்  தோட்டத்தில்  நல்ல  எண்ணங்கள், சிந்தனைகள்  என்கிற   செடி கொடிகள் வளரச்செய்ய  நீ  தான்  தோட்டக்காரன். மனத் தோட்டத்தை சீர் படுத்தாமல்  விட்டு விட்டால் அதில் கெட்ட  எண்ணங்கள்,  தீய சதிகள்  என்கிற முள்ளும்  காட்டுசெடியும்  தான் மண்டும். நல்ல  எண்ணங்களும்  சிந்தனைகளும் தான்  நல்ல செயலை  அளிக்கின்றன. 

வாழ்க்கையில்  நமக்கு  என்று  ஒரு  லட்சியம் எற்படுத்திக்  கொள்வோமே .  அதற்கு  உழைப்போமே.  வெற்றி  நம்மைத் தானே  தேடி வரும். நமது  எண்ணத்தின்  பலத்தில்  இருக்கிறது விளைவு.  சந்தர்ப்பங்கள்  மனிதனை  உண்டாக்குவதில்லை. அவனை  யார்  என்று  காட்டிக்கொடுக்கின்றவை  தான் அவை.   நீ  என்ன  கனவு கண்டாயோ  அதை  நினைவாக்கு. உன்னால்  முடியும்  தம்பி. நாம்  சிந்தும்  வியர்வை முத்துக்கள்  பின்னால்  நமது சொத்துக்கள்.  இன்றே  இப்போதே  உழை.  நாளை  என்று  தள்ளிப்போடாதே.  நாள்  தள்ளிப்போய்விடும். எக்ஸ்பயரி  டேட்  ஆகிவிட்டால்  தூக்கிப்போட தான்  வேண்டும்  நமது முயற்சிகள்  தான்  நம்மை உயர்த்துபவை, தாழ்த்துபவை ரெண்டுமே.  

எதற்கும் எவருக்கும்  நன்றி சொல்ல  தயங்காதே.  அதில்  தான்  உனது  வெற்றியின்  ரகசியம் அழுந்தி  இருக்கிறது. 

சிறிய  சிறிய  காரியங்களைச்  செய்யும்போது தான்  நீ  யார்,  உன் பலம்  என்ன  என்று  உண்மை வெளிப்படும்.  ஒரு சிறிய  ஆலம் விதையில்  ஒரு  பெரிய மரமே  ஒளிந்து கொண்டிருக்கிறது.  ஒரு  முட்டைக்குள்  தான்  மஹா  பெரிய ராக்ஷச ஆமையே  வாழ்கிறது.  

த்யானம்  செய்ய  பழகு.  உன் மனத்தை  எளிமைப்படுத்தும். அமைதிப்படுத்தும். பழகப் பழக  மேன்மேலும் ஆன்ம  ஒளி வீச செய்யும்.  அகத்தின்  அழகு முகத்தில்  பிரகாசிக்கும்.  ஞானத்தின்   வெளிப்பாடே அமைதி தான்.  அந்த அமைதி  த்யானத்தின்  பரிசு.  சந்தேகங்களையும்  பயத்தையும்  எவன் வென்றவனோ   அவனே  தோல்விகளை எல்லாம் வென்றவன். 


தாத்தா  நீ  எங்க  டீச்சர் கேட்டதற்கு   ஒரு   சொற்பொழிவே  நிகழ்த்தி விட்டாய்.  பலே.  ரொம்ப பிரமாதம் 

No comments:

Post a Comment