Friday, February 1, 2013

காஞ்சி மகாபெரியவா.. நான் கடவுளுடன் வாழ்ந்தேன் பகுதி---3.


நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.

(Dr.D.Sundararaman)

பகுதி---3.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு.

இந்த என்னுடைய கட்டுரையை சரியாகப் புரிந்துகொள்வதற்கு  என்னுடைய ஆதிகால வரலாறு, என் குடும்பத்தின் பின்னணி, மற்றும் என்னுடைய துன்பங்கள் நிறைந்த நாட்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டும். என்னுடைய முதல் பன்னிரண்டு வருஷ வாழ்க்கையில், சந்தோஷமான நேரம் என்று எதுவும் இருந்ததாகவே நினைவில்லை, ஒன்றே ஒன்றைத் தவிற-----1947—ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில், எங்கள் ஊரில் நடந்த விழா அது. நாட்டுக்கு சுதந்திரம் என்பது என்ன என்று அப்போது எனக்கு விளங்கவில்லை.

1950 வாக்கில் என்னுடைய பெற்றோர்கள், தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூர், மற்றும் திருவெண்ணைநல்லூர் அருகே இருந்த டி.குளத்தூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். அதுதான் என்னுடைய அம்மாவின் பிறந்த ஊர்; அங்கிருந்து 5 மைல் தொலைவில் இருக்கும் கொடியூர் என்ற ஊர் என் தந்தையின் பிறந்த ஊர். என்னுடைய அம்மாவின் திருமணத்தின்போது, அவளுக்கு வயது ஐந்து! கல்யாணத்திற்கு சில வருஷங்கள் பின், என்னுடைய அப்பா குளத்தூருக்கு வந்து விட்டார். சுந்தரேச ஐயர் என்பவரின் ஒரே மகளான என் அம்மாவுக்கு, அவரிடமிருந்து பல ஏக்கர் விளை நிலங்கள் சொந்தமாயின. என் தந்தை, ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்பு முடிந்தவுடன், வேதங்கள் படிக்க முற்பட்டார். ஆனால் வேதபாடசாலைப் படிப்பை முடிக்கவில்லை. அவருடைய முன்கோபம் மிகவும் பிரஸித்தமானது! அதனால் பல வேலைகளை இழந்து, கடைசியில் ,மேட்டுக்குப்பம்---ப 97;ந்தூர் கிராமங்களின் தாற்காலிக மணியக்காரராக (village munsiff) ஆனார். சிறுபையனாயிருந்த அந்த வேலைக்குரிய வாரிசு, வயது வந்தபின், அவருக்கு இருந்த அந்த வேலையும் போயிற்று. அதன் பிறகு, வக்கீல் குமாஸ்தாவாக, சொந்தமாக வேலை செய்ய ஆரம்பித்தார். படிப்பறியாத அந்த கிராம மக்களின் ‘கேஸ்’களை திருக்கோயிலூர் மற்றும் கடலூர் வக்கீல்களிடம் கொண்டு கொடுத்து ஏதோ கொஞ்சம் வரும்படி வந்தது. ஆனால் அந்த கிராமத்தின் பெரும்பாலான மக்கள் நல்ல குணத்தினால், பெரும்பாலான ‘கேஸ்’களை உள்ளூர் பஞ்சாயத்தில் வைத்தே தீர்த்துக் கொண்டனர். என்னுடைய தந்தையின் வருமானம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. ஒவ்வொரு வருஷமும் என் தாய் ஏக்கர் ஏக்கராகத் தன் நிலங்களை விற்கத் தொடங்கினார். 1950—ஆம் வருஷத்தில் எங்கள் குடும்பத்தின் நிலைமை நம்பிக்கையற்ற மிக மோசமான நிலையை அடைந்தது என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது. ஒரு இளைய சகோதரியும், ஒரு அண்ணனும் இருந்தனர். அண்ணா கணபதியை திருக்கோயிலில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு அப்பா மிகவும் முயன்றார். ஆனால் அவன் படிப்பில் எந்த அக்கறையும் காட்டவில்லை. 1951 ஆம் ஆண்டு அவன் வீட்டை விட்டே ஓடிவிட்டான். என்னுடைய ‘எலிமென்டரி’ ஸ்கூல் படிப்புக்குப் பிறகு ஒரு வருஷம் போல் வெறுமனே இருக்க வேண்டி வந்தது; திருக்கோயிலூர் உயர்நிலைப்பள்ளிக்& #2965;ு அப்பாவால் என்னை அனுப்ப முடியவில்லை.

1949—50 வாக்கில் பெரியவா எங்களுடைய கிராமத்தில் முகாமிட்டிருந்தார் .அதைப்பற்றி எனக்கு மிக மங்கலான நினைவே உள்ளது. பெரியவா எங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை காட்டியதாகவும், அப்போதிருந்த குடும்பநிலையைக் கண்டு, எல்லோரையும் மடத் தில் சேர்ந்து விடும்படி அழைப்பு விட்டதாகவும் என் அம்மா சொன்னார்கள். என்னை ப்ரத்யேகமாக ஆசீர்வதித்ததாகவும்  “இவன் உன்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷத்தையும் வளத்தையும் கொண்டு வருவான்” என்று சொன்னதாகவும் அம்மா சொன்னார்கள். 

இதை அவர் சொல்லும்பொழுது, நான் அவரை நம்பவில்லை. பின்னால் நடந்த நிகழ்ச்சிகள், பெரியவா உண்மையாக என்னை ஆசீர்வதித்திருக்கறார்’ என்று நிரூபித்தன (காலம் கடந்த தெளிவு!). மீதி இருந்த கொஞ்சம் கௌரவத்துடன், 1951—இல், அந்த ஊரை விட்டு வெளீயேறி, மாயவரத்தில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த மடத்தில் சேர்ந்தனர் என் பெற்றோர்கள்.

என்னுடைய பெரிய அக்காவின் கணவர், குளத்தூரிலேயே அதிகம் படித்த மூன்று, நான்கு பேர்களில் ஒருவர். S.S.L.C—முடித்தவுடன், ஆசிரியர் பயிற்சியை முடித்து விட்டு, ஒரு நல்ல, ப்ரஸித்தமான ஆசிரியராக ஆனார். 1951—இல் கண்டசிபுரம் என்ற ஊரில் ஆசிரியராக இருந்தார். என் ஏழாவது வகுப்பை, அவர்கள் வீட்டில் தங்கி, அங்கேயே படித்தேன். அடுத்த வருஷம் அவர் சித்தலிங்கமடம் என்ற ஊருக்கு மாற்றப்பட்டபோது நானும் அவருடன் சென்று எட்டாவது வகுப்பில் படித்தேன்.

அப்பொழுது, ஞானானந்தா என்ற ஒரு ஸ்வாமிகளின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. அவர் நான் படித்த பள்ளியின் எதிரில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அழகுத் தமிழில் இனிமையாகப் பேசுவார். என்னை “சுந்தரம்” என்று அன்புடன் கூப்பிடுவார். ஒவ்வொரு மாலையிலும் எனக்கு இனிப்புகளும், பழங்களும் தருவார், தினமும் மாலை ஸ்கூல் விட்டதும் நேரே அங்கே போவதற்குப் போதுமான ஊக்குவிப்பு! நான் அவரை என்னுடைய தாத்தாவாகக் கருதினேன். அவருடைய பூர்வ சரித்திரம் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்.

 சில வருஷங்களுக்கு முன்னால் எங்கிருந்தோ அந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் வயதாகிறது என்று பேசிக்கொண்டார்கள்; ஆனால் அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நான் ஸ்கூலில் என்னென்ன படிக்கிறேன் என்று கேட்பார்; கதைகள் சொல்லுவார். நான் அவரிடம் ஈர்க்கப்பட்டேன். நான் ஸ்கூலிலிருந்து அங்கு வரவில்லையென்றால், எனக்காக வாசலில் காத்திருப்பார்.. சில வருஷங்களுக்குப்பின் அவர் திருக்கோயிலூர் அருகே இருக்கும் அரகண்டநல்லூர் என்ற இடத்திற்குப் போய் விட்டார். அங்கே மிகவும் பிரபலமானார். 

இப்பொழுது அவர் இல்லை. “தபோவனம்’ தற்பொழுது ஒரு மிகப் பிரபலமான இடம்; அதைப் பின்பற்றுபவர்கள் அநேகம். நான் எதற்காக அந்த ஸ்வாமிகளைப் பற்றி இவ்வளவு சொல்கிறேன் என்று நீங்கள் வியக்கலாம். “பெரியவாள் ஒரு நடமாடும் தெய்வம்; ஒரு மடத்தின் பீடாதிபதி மட்டும் இல்லை; சீக்கிரம் மக்கள் அவருடைய உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்வர்.” என்று எனக்கு முதல் முதலாக சொன்னவர் அவர்தான்! நான் எப்பொழுது சோர்ந்து போயிருந்தாலும், “பெரியவா உன்னையும் உன் குடும்பத்தையும் ரக்ஷிப்பார்.” என்று கூறுவார். என் தாயார் மாயவரம் போகும் வழியில் தன்னை சந்தித்ததாகவும் சொன்னார்.

மடத்தில் சேர்ந்து சுமார் எட்டு மாதங்கள் கழித்து, என் தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதினார். “பெரியவா உன்னைப்பற்றி விஜாரித்தார்; நீ உயர்நிலைப்பள்ளியில்  படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.” என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது .
 அன்று வரை, எப்படியாவது E.S.L.C வரை படித்துவிட்டு, ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்று, ஒரு ‘எலிமென்டரி’ ஸ்கூல் ஆசிரியராக வர வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று அறிந்தபோது, என் மனத்தில் உற்சாகம் கரை புரண்டது. ஞானானந்த ஸ்வாமிகளின் ஜோசியம் பலிக்கிறதோ என்று எண்ணினேன்.

ESLC முடித்துவிட்டு, ஞானானந்த ஸ்வாமியிடம் விடை பெற்றுக்கொண்டு, 1952 ஏப்ரலில் பெரியவாளின் முன்பு போய் நின்றேன். அப்பொழுது அவர் மாயவரம் பக்கத்தில் ஒரு இடத்தில் இருந்தார்.
பெரியவா கேட்டார், “ஹைஸ்கூலில் படிக்கப்போறே இல்லியா?”
நான் அதற்கு ஆசைப்படுவதாகவும் ஆனால் எப்படி, எங்கே என்று தெரியவில்லை என்றும் பதிலளித்தேன்.

பெரியவா அப்போது எனக்கும் என் தந்தைக்கும் ஒரு புதிர் போட்டார், “தென்னாற்காடு, தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைகளிலிருந்து ரொம்ப தூரமில்லாமலும், ஒரு பிரபலமான கோயிலும், ‘யுனிவெர்சிடி’யும் இருக்கும் இடமுமான ஒரு பெரிய நகரத்தின் பெயர் என்ன?”
எங்கள் மனத்தில் ‘யுனிவெர்சிடியைப்ப ற்றிய எண்ணம் இல்லாததால், மாயவரமாக இருக்குமோ என்று நினைத்தோம்.

ஆனால், பெரியவா சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலின் முக்கியத்துவத்தை பற்றிப் பேசி விட்டு, என்னுடைய அம்மாவிடம் சிதம்பரத்தில் குடித்தனம் போடச் சொன்னார். இப்பொழுது நான் அதைப்பற்றி நினைக்கும்போது, நானோ என்னுடைய பெற்றோரோ என்னுடைய மேல்படிப்புப்பற்றி,ஒருதிட்டம்போடவில்லையென்றாலும் ,ஒரு நினைப்பே கூட இல்லாமல்தான் இருந்தோம்;ஆனால் பெரியவா ஒரு முழுத் திட்டமே போட்டு வைத்திருந்ததாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

நான் சிதம்பரத்தில் இருந்த ராமஸ்வாமி செட்டியார் உயர்நிலைப்பள்ளியில்  சேர்ந்தேன். படிப்பில் மிகவும் நன்றாகச் செய்தேன். லீவு நாட்களில் பெரியவாளைப் போய்ப் பார்ப்பேன். விரைவில் அவருடைய அணுக்கத் தொண்டனாகவும் ஆனேன்.பிரசாதம் கொடுப்பது, பக்தர்களுக்கு மெயிலில் பிரசாதம் அனுப்புவது, பக்தர்களின் கடிதங்களைப் பெரியவாளுக்குப் படித்துக் காட்டுவது, தினசரி பத்திரிகைகளைப் படித்துக்காட்டுவது  பக்தர்களின் க்யூ வரிசைகளைக் கட்டுப்படுத்துவது, இன்னும் அவர் எனக்கு என்னென்ன பணிகளிடுகிறாரோ அவைகளைச் செய்வது போன்ற பல.

ஏப்ரல் 15—ஆம் தேதி S.S.L.C பரீக்ஷை எழுதினேன். அதற்குள் பெரியவாளும் மடமும் சின்ன காஞ்சீபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் அவர் அருகிலிருந்த சிவாஸ்தானத்திலும், ஓரிக்கையிலும் முகாமிட்டிருந்தார. பரீக்ஷை முடிந்தவுடன், காஞ்சீபுரம் சென்று, அடுத்த இரண்டு மாதங்கள் அவருடன் இருந்தேன். ஜூன் 1955-இல் ‘ஹிந்து’ நாளிதழில் என்னுடைய பரீக்ஷை முடிவு வெளியானபொழுது, பெரியவாளிடம் போய் சந்தோஷமாகத் தெரிவித்தேன்..

1 comment:

  1. ஸ்ரீ சுந்தரராமரிடம் தொடர்பு கொள்ள முடியுமா? நன்றி.
    என்.ஆர். ரங்கனாதன். 9380288980

    ReplyDelete