Friday, February 1, 2013

நான் கடவுளுடன் வாழ்ந்தேன். பகுதி---4


நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.

பகுதி நான்கு


யுனிவெர்சிடியை நோக்கி.


அடுத்த நாள், அவர் ஸ்நானத்திற்குப் பாலார் நதிக்குச் சென்றபோது, என்னையும் வருமாறு அழைத்தார்.. பல பக்தர்களும் கூட வந்தார்கள். அவர் ஒரு முழுக்குப் போடப் போகும்போது, நான் அவர் அருகில் தண்ணீரில் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் ஒரு பெரிய பக்தர்கள் கூட்டம் கரையில் சேர்ந்து விட்டது.. எனக்கும் பெரியவாளுக்குமிடையே  சுமார் 15 நிமிஷங்களுக்கு சம்பாஷணை நடந்தது.; அந்த சம்பாஷணை என்னுடைய மொத்த வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அங்கேயே அப்பொழுதே அவரிடமிருந்து ‘கீதோபதேசம்’ பெற்றேன்..


“S.S.L.C. முடிச்சுட்டே! இனி என்ன பண்றதா உத்தேசம்?”


என்னுடைய தந்தை மடத்தின் கடும் உழைப்பாளிகளில் ஒருவர். இரண்டு மாதங்களுக்கு முன் அவருக்கு ஒர் ‘ஹெர்ணியா’ ஆபரேஷன் நடந்திருந்தது. அவருடைய நிலைமையே எனக்கு முக்கியமாகப் பட்டது.


அதை மனத்தில் கொண்டு, பெரியவாளிடம் சொன்னேன், “ஒரு வேலை பார்த்துக்கொண்டு என்னுடைய பெற்றோர்களைப் பார்த்துக்கலாம்னு இருக்கேன்.”


தன்னுடைய தண்டத்தை நீரில் அவருடைய இரண்டு கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு, தனக்கே உரிய அந்த மந்தஹாஸப் புன்னகையோடு சொன்னார், “ரொம்ப புத்திசாலித்தனமா என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டதா நினைப்பாக்கும்?” சொல்லிவிட்டு என்னை நேரே பார்த்தார். என்னுடைய அந்த முடிவை அவர் வரவேற்பார் என்றுதான் நினைத்தேன்.. சாதாரண மானுடர்கள் அப்படித்தான் செய்திருப்பார்கள். .


தன் குரலை உயர்த்தி, “ நீ அவரைப் பாத்துக்கணும்னு அவர் ஜன்மா எடுக்கலே! அவர் ரொம்ப அக்கறையில்லாமலும், பொறுப்புணர்ச்சி இல்லாமலும், இளைமைலே இருந்திருக்கார்.. அவரோட பல ‘தாம் தூம்’ காரியங்களுக்குப் பிறகு இப்போ எங்கிட்ட சரணாகதி அடைஞ்சிருக்கார்.. அவர் இப்போ என்னோட பொறுப்பாயிட்டார். அவர் சின்ன வயசிலேந்து நம்பிக்கை வெச்சிருந்த ஒரே தெய்வம் விக்னேஸ்வரன் அவரைப் பாத்துப்பான்.. நீ நன்னா படிக்கிறேன்னு எனக்குத் தோண்றது. எவ்வளவு மேலே மேலே படிக்க முடியுமோ அவ்வளவும்படிச்சுஒசந்தஃகுவாலிஃபிகேஷன்லாவாங்கு. நீ ஒன்னோட வாழ்க்கையைப் பாத்துக்கோ.”


பின், ஒரு முழுக்குப் போட்டார். அவர் என்ன சொல்ல முயல்கிறார் என்று எனக்கு சரியாகப் புரியவில்லை.


“பெரியவா நான் கலாசாலையில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படறேளா?” என்று கேட்டேன்.


“ஸரிய்யாப் புரிஞ்சுண்டுட்டே!” என்று சொல்லி விட்டு இன்னொரு முழுக்குப் போட்டார்.


பரபரப்புடன் நான் சொன்னேன், “ இப்போ பெரியவா என்னோட வெளையாடறேள். கேலி பண்றேள்.. பெரியவாளுக்கு என்னோட நிலைமை நன்னாத் தெரியும்.. அப்பா அம்மாவைக் கவனிச்சுக்க வேண்டாம்னாலும், நாலஞ்சு வருஷ கலாசாலைப் படிப்புக்குப் பணத்துக்கு எங்கே போவேன்?”


தண்டத்தை வலது கையிலும், கமண்டலத்தை இடது கையிலும் வைத்துக்கொண்டு நேரே என்னைப் பார்த்துச் சொன்னார், “ஒன்னோட அணுகுமுறை ( ‘Attitude’ ) எனக்குப் பிடிக்கலே! எப்போ பார்த்தாலும் கழிவிரக்கம் (self—pity). ஹனுமான் எப்படி கடலைக் கடந்தார்னு ஒனக்குத் தெரியுமா? நீயும் கடல்களைத் தாண்ட முடியும். தன்னம்பிக்கையும் கடும் உழைப்பும் இருந்தா போறும், எதை வேணா சாதிக்கலாம்.” என்று சொல்லி இன்னொரு முழுக்குப் போட்டார். சங்கடத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ண பகவான் செய்த கீதோபதேசம் உடனே எனக்கு நினைவுக்கு வந்தது.. கீதோபதேசம்னா வேறென்ன?


அதற்குள், கரையில் இருந்த பக்தர்கள் கூட்டம் அமைதி இழக்கத் தொடங்கினர். சிலர் என் காதில் விழும்படி, “அந்த துரைஸ்வாமியின் பையன் பெரியவாளோட வேண்டாத வாதங்களையெல்லம் பண்ணிண்டிருக்கான். .”


அவர்களுக்கு சிறிதளவும் தெரியாது, பெரியவா எனக்கு ஒரு தனி ‘பாஷ்யபாடம்’ நடத்திக் கொண்டிருந்தார் என்று.. பெரியவா ஒரு ஸாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. மன்னிக்கவும், எனக்கு இந்த மாதிரி ‘பெரியவா தங்களுக்குத்தான்’ என்று சொந்தம் கொண்டாடும், தற்பெருமை மிகுந்த பக்தர்களிடம் ஒரு வெறுப்பு உண்டு. அந்த துரைஸ்வாமியின் பையனான நான், அவர்களுடன் விரோதத்தை வளர்க்க விரும்ப வில்லை. கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பெரியவா என்னைத் திரும்ப அழைத்து, “எம் மேல ஒனக்கு நம்பிக்கை இருக்கா இல்லியா?” என்றார்.


கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து நீரில் விழ, “பெரியவா மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றேன்.


“அப்படீன்னா, போய் அண்ணாமலை யுனிவெர்சிடி அப்ளிகஷன் வாங்கிண்டு வா!’ என்று சொல்லிவிட்டு என்னை அனுப்பி விட்டார்.


தொடரும்………..


No comments:

Post a Comment