ஜனவரி 23-ஆம் தேதி மெட்ராசிலிருந்து நியூயார்க் போகும் flight—இல் நான் மேட்டூர் ஸ்வாமிகள் சொன்னதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த 26 மணி யாத்திரையில் 8 மணி நேரம், நான் 1952 முதல் 1967 வரையிலான பெரியவாளுடனான என்னுடைய அனுபவத்தை மறுபடி ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன். எதிரில் உள்ள திரையில் ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்கள் ஓடிக்கொண்டிருந்தது, என் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது . எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘நானும் என்னுடைய கஷ்டமான நாட்களையே நினைவில் வைத்திருக்கிறேன்.” என்று.
எனக்கு அருகில் அமர்ந்திருந்த என்னுடைய இரண்டாவது மகன் பிரபாகர் அதைக்கேட்டு, “யாரைப்பற்றி எதற்காக நீங்களே சத்தமாகப் பேசிக்கொள்கிறீர்கள் ?” என்று கேட்டான். அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபொழுது அதை நிச்சயமாக எழுதுவது என்று உறுதி கொண்டேன்.
வீட்டை அடைந்த பின், ஜனவரி 25—ஆம் தேதி இரவு எழுத ஆரம்பித்தேன். அதன் பின் வரிசையாக எட்டு இரவுகள், ஒவ்வொரு இரவிலும் நான்கு மணி நேரம், விடாமல் எழுதினேன். ஒவ்வொரு இரவும் அந்த அனுபவங்களைத் திரும்ப ‘வாழ்ந்து’ கொண்டிருந்தேன்.
அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன் (என்னுடைய மனைவி என்னுடன் அப்போது திரும்பி வரவில்லை). ரமணியின் புல்லாங்குழல் இசையும் லால்குடி ஜயராமனின் வயலின் இசையும் மாத்திரமே கேட்டுக் கொண்டிருந்தது.
பெரியவாளுக்குக் கர்னாடக இசையில் இருந்த ஆர்வம் ஞாபகத்திற்கு வந்தது, முக்கியமாக, வீணை இசையில். எங்கே இதை தொடங்குவது என்று ஆலோசித்தேன். முன்னால் எழுதியுள்ள ‘அந்த இரவின் விஸ்வரூப தரிசனத்திலேயே தொடங்கினேன். எனக்குத் தெரியும், அவர் நினைத்தால் நான் எழுதுவதை நிச்சயமாகப் பார்ப்பார் என்று.
இனித் தொடர்வது என்னுடைய சொந்த விஷயம். படித்து முடிக்கும் வாசகர்கள்,, பெரியவாள் என்னுடைய வாழ்க்கையில் எந்த விதமான ஒரு பாத்திரமாக இருந்திருக்கிறார் என்று அறிந்து கொள்வர். பெரியவா அவருடைய பரிசோதனைகளுக்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று, இப்பொழுதும் நான் ஆச்சரியப்படுவதுபோலவே, அவர்களும் ஆச்சரியப்படுவர். அவருடைய கடாக்ஷம் எனக்குக் கிடைப்பதற்கு நான் அருகதை உடையவனே இல்லை. நான் எழுதியதில், பெரியவாளுக்குப் பல துறைகளிலும் இருந்த மிக உயர்ந்த திறமையையும் அறிவையும் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை; என்னுடைய வழியில் எழுதியிருக்கலாம்; ஆனால் அந்த முக்கிய விஷயம் பற்றி எண்ணும்பொழுது நான் என்னை ஒரு கடைநிலை சிஷ்யனாகவே கருதுகிறேன்.
1952—இல் இருந்து 1967 வரை உள்ள பதினைந்து வருஷங்கள் பெரியவாளுடன் நெருங்கிப் பழகும் பாக்யம் கிடைத்தது. முக்கியமாக, 1952 முதல் 1960 வரையிலான என்னுடைய பள்ளிமாணவ நாட்களில் பெரியவாளுடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அவருடைய அணுக்கத் தொண்டனாக பணியாற்றினேன். அவருக்கு என் மேல் ஒரு ப்ரத்யேக அன்பு இருந்தது. மடத்தில் உள்ளவர்களும் மடத்திற்கு வருகிறவர்களும் இதை உன்னிப்பாகக் கவனித்தனர்; என்மேல் பொறாமையும் கொண்டணர். நான் இதை மிகவும் ரஸித்தேன்! ஒருமுறை, மடத்தின் மானேஜர் ஸ்ரீ விஸ்வனாத ஐயர் (எனக்கு மிகவும் பிடித்தவர்), பெரியவா நெடுநேரமாக தியானம் செய்துகொண்டிருந்த அறைக்குள் செல்ல விரும்பினார். தட்டிக்கதவுக்கு அருகில் நான் காவல் இருந்தேன்.
விஸ்வநாத ஐயர், பெரியவாளிடம் மிக முக்கியமான ஒரு விஷயம் தெரிவிக்க உள்ளே போகவேண்டும் என மிகவும் வற்புறுத்தினார். நான் அவரிடம் பணிவாக ஆனால் உறுதியாக, அவர் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, இப்போது உள்ளே போக முடியாது என்று மறுத்தேன். அவர் கோபமடைந்து, மடத்தில் இருந்த பக்தர்கள் மத்தியில் கத்தினார், “அந்த துரைஸ்வாமி ஐயரோட பையன் சுந்தரராமன் மடத்துக்கு வந்துட்டா, பெரியவா அவனுக்கு முழு அதிகாரம் கொடுத்துடறா! மடமே அவனோட அரசாங்கமாயிடறது.” அன்று பிறகு ஒரு சமயம் அவர் பெரியவாளிடம் இதைப்பற்றிப் புகார் சொன்னார்.
அதற்குப் பெரியவா தந்த பதில், “ அவன் என்னை இத்தனை நன்னா பாத்துக்கறதுக்கு, நீன்னா அவனுக்கு நன்றி சொல்லணும்?”
இந்த ஏழை ஸ்கூல் மாணவனான என்னிடம் ஏன் பெரியவா இத்தனை அன்பும் பரிவும் வைத்திருக்கிறார்? இந்தக் கடாக்ஷத்தைப் பெற நான் அவருக்கு என்ன செய்து விட்டேன்? பல வருஷங்களுக்கு முன், நான் அவரைத் திடீரென்று விட்டு விட்டுப் போன பின்னாலும், வெகு தொலை தூரத்தில் இருந்த போதிலும், அவர் என்னை விடாது ஆசிர்வதித்திருக்கறார் என்று எண்ணும்போது என் மனது வெடித்துவிடும் போல் இருக்கிறது.
1985—இல், நான் மெக்ஸிகோ நகரத்தில் வசித்து வந்தேன். ஒரு நாள், காஞ்சீபுரத்தில் இருக்கும் என் மருமான் சந்த்ருவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கடைசியாக அவனிடம் இருந்து கடிதம் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தன. அவன் கடிதம் எழுதியதற்கு முதல் நாள் பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சீபுரம் சென்றிருக்கிறான். எப்போதும் போல் பல பக்தர்களும் அணுக்கத்தொண்டர்கலும் இருந்தனர். திடீரென்று, சம்பந்தமே இல்லாமல், பெரியவா எல்லோருக்கும் ஒரு புதிர் போட்டார்.
“நான் ஒத்தனை மனஸால் நினைத்தேன். அவன் பறந்து போயிட்டான். யார் அவன்?”
(anusham163’s comment at this stage: இதைப்படித்த எனக்கு துக்கம் பீரிட்டுக்கொண்டு வந்து கதறி அழுது விட்டேன். எத்தனை ஒரு அன்பு இருந்திருந்தால் பெரியவா வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கும்? நம்மைப்போன்ற ஸாதாரண மனிதர்களுக்குத்தா சுகம், துக்கம், போன்ற உணர்ச்சிகள். மஹான்களுக்கு அதொன்றும் கிடையாது என்றாலும், பெரியவா மனசில் அன்புடன் கூட, “திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் இந்த இடத்தை விட்டுப் போயிட்டானே” என்ற தாபம் அந்த வார்த்தைகளில் தொனிக்கிறதோ என்ற எண்ணத்தில்தான் நான் அப்படி அழுதேன். ஆனால் அவர் எதை நினைத்து அவ்விதம் சொன்னார் என்று யாரால் சொல்லமுடியும்?)
அரைமணி நேரம் ஆனபிறகும், அந்தப் புதிருக்கு யாராலும் விடை சொல்ல முடியவில்லை. பெரியவாளே கடைசியில் புதிரை அவிழ்த்தார், “அந்த துரைஸ்வமியின் பையன் சுந்தரராமந்தான் அவன்”
பெரியவா எதற்காக என்னைப்பற்றி அன்றைய தினம் குறிப்பிட வேண்டும் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அந்த கடிதத்தைப் படித்து முடித்தவுடன், என்னை நம்புங்கள், என்னுடைய இதயம் நின்றுவிட்டது போல் இருந்தது; அழுதேன். மனைவி கடைக்குப் போயிருந்தாள். பெரிய பையன் நியூயார்க்கில் படித்துக்கொண்டிருந் தான்; இரண்டாமவன் பள்ளி சென்றிருந்தான். இன்றைக்கும், நான் அன்று ஏன் ‘collapse’ ஆகவில்லை என்ற ஆச்சரியம்.. என் மனைவி திரும்பி வந்ததும், என் முகத்தைப் பார்த்து விட்டு, “ஏன் உங்கள் முகம் இப்படி பேயறைந்தாற்போல் வெளிறிப்போயிருக்கறது?” என்றாள்.
சந்த்ருவிடமிருந்த வந்த கடிதத்தை அவளிடம் கொடுத்தேன். படித்து முடித்தவுடன், “ இது ஒரு நல்ல சகுனம். நீங்கள் சதா அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிர;க்கும் போது, அவர் உங்களை நினைப்பது இயற்கையே. நீங்கள் சொல்லாவிட்டாலும், எனக்கு அது நன்றாகத் தெரியும்.”
ஆம்; அது உண்மைதான். எப்பொழுதும் நான் அவரைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். சென்னையின் கடற்கரை, இந்துமஹாசமுத்ரத்தின் கடற்கரைகள், அரேபியக்கடல், பஸிஃபிக், அட்லாண்டிக், ப்ளாக் ஸீ, ஜெர்மனியின் அடர்ந்த காடுகள், ஆல்ப்ஸ், என்று உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும, அவருடைய நினைவு என்னை விட்டு அகலவில்லை. மனஸில் நிம்மதியே இல்லை. அவரை விட்டுப் பிரிந்து வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், இந்தப் பிறவியிலேயே அவருடைய அருகாமையில் ஜன்ம சாபல்யம் அடைவதற்கான ஒரு அரிய வாய்ப்பை இழந்து விட்டேனே, என்ற நினைவுகளே என் மனத்தின் மேல் மட்டத்தில் இருந்தன.
எனக்குக் கிடைத்த இதே வாய்ப்பு வேறொருவனுக்குக் கிடைத்திருந்தால், அவன் வேறே எந்த ஒரு பாக்யத்திற்காகவும பெரியவாளை விட்டுப் போயிருக்க மாட்டான். ஆனாலும் இத்தனை வருஷங்களுக்கு அப்புறமும் அவரை நேருக்கு நேர் சந்திக்க ஆசை ஏற்படவில்லை. நேருக்கு நேர் பார்க்க பயமாயிருந்தது என்று கூட சொல்லலாம்.
1952 முதல் 1967 வரையிலான சமயத்தில் பெரியவாளுடன் இருந்த அந்த மறக்க முடியாத, சந்தோஷம் மிகுந்த அந்த நினைவுகளிலேயே நான் வாழுகிறேன்; தொடர்ந்து அப்படியே வாழவும் விரும்புகிறேன்.
என்னைப் பற்றியும், என் வாழ்க்கையில் பெரியவாளின் பங்கு எவ்வளவு என்றும் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு, 1967—ஆம் வருஷத்தில் கிடைத்தது. Mathematics—இல் doctorate பண்ணுவதற்கு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா யுனிவெர்சிடியில் apply பண்ணவும், fullbright foundation—இல் travel grant—க்காகவும் உள்ள விதிமுறைப்படி, என்னைப்பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதி சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. நான் எழுதிய கட்டுரையின் இரண்டாவது பாராவை இங்கே தருகிறேன்.
“என்னுடைய குடும்பம் மிக ஏழ்மை நிலையில் இருந்தது. கலாசாலைப் படிப்பைப் பற்றி கனவிலும் நினைக்க முடியாத நிலைமை. அப்பொழுதுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை வந்தது. அப்பொழுது காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யர், ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள், கலாசாலைப் படிப்பைத் தொடர எனக்கு இருந்த மனமார்ந்த ஆசையைக் கண்டு மகிழ்ந்தார். அவருடைய ஆசீர்வாதத்தாலும் அவர் ஏற்பாடு செய்த பண உதவியாலும், கலாசாலையில் என்னால் படிக்க முடிந்தது. அவருடைய ஆசியும் உதவியும் இல்லையென்றால் , என்னுடைய மேல்படிப்பை, என்னால் தொடர்ந்திருக்கவும் முடியாது, இந்த சுயசரிதம் எழுத வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.”
நான் 1967—இல் என்ன எழுதினேனோ, அதற்கு மேலேயே இன்றும்,(1993) பொருந்தும். இன்று நான் எழுதும் இந்தக் கட்டுரை, அவருடைய ஆணித்தரமான ஆசையை (நீ எழுதத்தான் போகிறாய்) நிறைவேற்றுவதாகும். இந்தக் கட்டுரையை நான் இங்கேயே முடித்திருக்கலாம். ஆனால், பெரியவாளுடனான என்னுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment