பூஜை பரந்தாமனுக்கு பூஜைன்னா அவ்வளவு உயிர் . சின்ன வயசிலேருந்து அவன் வீட்டில் பூஜை புனஸ்காரம்னு ஏத்திட்டா, அந்த வெறி அவன் தலைக்கு ஏறிப் போயி இப்போ அவன் பொண்டாட்டி படர அவஸ்தை இருக்கே, அப்பப்பா சொல்ல முடியாது.
எல்லாரும் சின்ன வயசிலே பசங்களுக்கு ஸ்லோகங்கள் சொல்லித்தருவா , நாள் கிழமையிலே அப்பாக் கூடப் பூஜையிலே ஒட்காரச் சொல்வா, பொண் பசங்கன்னா அம்மாக்கு கூட மாட கிச்சன்லே ஹெல்புக்கு கூப்பிடுவா அவ்வளவு தான்.
ஆனா, இந்தப் பரந்தாமன் விசயமே வேற..இவன் அப்பா பூஜைப் பண்றதுக்கு இவன் அம்மா எல்லாம் எடுத்து வச்சு ரெடிப் பண்ணுவா , அதேப் ப்ராக்டிச இவனுக்கு இவன் பொண்டாட்டி செய்யணுமாம்.
கோயில் பிரசாதம்னா ரொம்பப் பிடிக்கும் , ராத்திரி பன்னண்டு மணிக்கு எழுப்பி பிரசாதம்னா ஒடனே எழுந்து பய பக்தியோட வாங்கிப்பான். சில சமயம் பிரசாத்துக்காகவே கோயில் போவானோன்னு தோணும்!
கோயில் பிரசாதம்னா ரொம்பப் பிடிக்கும் , ராத்திரி பன்னண்டு மணிக்கு எழுப்பி பிரசாதம்னா ஒடனே எழுந்து பய பக்தியோட வாங்கிப்பான். சில சமயம் பிரசாத்துக்காகவே கோயில் போவானோன்னு தோணும்!
இவன் வெறும் மெயின் பூசாரி மாதிரி வந்து ஸ்லோகங்கள் சொல்லி, விநாயகர் பூஜைப் பண்ணி, அபிஷேகம் பண்ணி , அலங்காரம் அவ்ளோ நல்லாப் பண்ணுவானாக்கும்!
ஆனால் இவன் பகவான் படத்துக்கு பூ வச்சு அது அவா படத்திலேரிந்து கீழே விழுந்துதோ போச்சு, அவன் சொல்ற அர்ச்சனை மந்த்ரம் இருக்கே, பகவானே காது கொடுத்து கேட்டான் , ,' அடேய் அப்பா, நீ பூஜையும் பண்ணவேணாம் பாராயணமும் பண்ண வேணாம் , நீ எனக்கு செஞ்சதுக்கே ஒனக்கு ஏழு ஜென்மத்துக்கு பலன் கெடைக்கும், எழுந்த்ருடா சாமி' ன்னு சொல்லிடுவா. .
ஒரு சேம்புளுக்கு, 'உனக்கெல்லாம் ஒரு பூவை சமாளிக்கத் தெரியலே , அப்டி இருக்கப்போ எப்படி மனுசாளோடக் கொறைய சமாளிப்பே?! '
பூஜைப் பண்றதுக்கு முன்னாடி, இவன் பொண்டாட்டி வந்து எல்லாம் தயாரா எடுத்து வைக்கணும் . அதாவது, பூஜை சொம்புலே நிறைய ஜலம், அப்புறம் பஞ்ச பாத்திரதுலேயும் , எக்ஸ்ட்ரா ஒரு பாத்திரதுலேயும் ஜலம், அப்புறம் அபிசேகம் பண்ணினத் தண்ணியைக் கொட்டறதுக்கு ஒரு பிளாஸ்டிக் பேசின்.
..அப்புறம் பூவெல்லாம் இவன் பொண்டாட்டி தான் எல்லாப் படத்துக்கும் போடணும் அப்டி இல்லைன்னா, இவன் போடறப்போ, பொண்டாட்டி பக்கத்துலேயே இருந்து வேணும்கறா மாதிரி கட் பண்ணிக் கொடுக்கணும்.
அபிசேகம் பண்ணின விக்ரகத்தைத் தொடைக்கறதுக்கு வஸ்திரம்., சந்தனம் கரைச்சு, குங்குமம் எடுத்து வச்சு , கற்பூர தட்டு, தீபத் தட்டுலே திரிப் போட்டு எண்ணையை விட்டு வைக்கணும்.
விளக்கு ,இவன் பொண்டாட்டி பூஜை பண்ணினா நல்ல அழகா எறியும் ஆனா இவன் பூஜைப் பண்ணப் போனா, அது அழிச்சாட்டியம் பண்ணி ,'நீ இப்போ ஒன பொண்டாட்டியத் திட்டப் போறயா இல்லை நான் உசிரை விட்டுட்டமான்னு ' கேட்காமப் பாக்கும்!
சரின்னு ஓங்கி ஒரு கொரல் கொடுப்பான் பொண்டாட்டிக்கு , அவளும் தேமேன்னு வந்துட்டு விளக்க சரியா ஏத்திட்டு இவனையும் கொஞ்சம் ஏத்திட்டுப் போவா, எப்டின்னா...' நான் பூஜைப் பண்ணினா நாள் பூரா எரியறது, ஆனா நீங்கப் பூஜைப் பண்ணினா மட்டும் ஏன் இப்டின்னு தெரியலயேன்னு'.
அப்புறம் நெய்வேத்யம் ,எல்லாத்துலேயும் வண்டிப் பூவைப் போட்டுடுவான் அதுப் பாலாக இருக்கட்டும் சாதமாக இருக்கட்டும் ,பாயசமாக இருக்கட்டும்.
அவன் கற்பூரம் காட்றதா இருந்தா , எல்லாரும் ஆஜராகனும் கண்டிப்பா, இதுலே வேடிக்க என்னன்னா, கற்பூரம் காட்டிண்டே ஓரக் கண்ணாலேப் பாப்பான், யார் யார் இருக்கான்னு.
பூஜை முடிஞ்சதோ இல்லையோ அப்புறம் அந்தப் பக்கம் ஜூட் .
அதுக்கப்புறமும் , அடுத்த நாளும் அவன் பூஜைப் பண்ணின நிர்மால்யத்தை எடுக்கறப்போ தான் தெரியும் அவன் எப்டிப் பூஜைப் பண்ணினான்னு?
சாதரணமாக் கோயில்லே பூஜைப் பண்ணும் போது அர்ச்சகா கும்குமம் , பூவை எல்லாம் ஒரே எடத்துலே ,இல்ல ஒரு சின்னத் தட்டுலேப் போடுவா. ஆனா நம்பப் பரந்தாமனோ , கண்ணுக்கு தெரிஞ்ச இடம், கையிக்கு எட்டின இடம்னு அதுவும் சாமந்தி பூவைக் கிள்ளி அங்கேயும் இங்கேயும்...... - சாமி தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்னு எல்லா இடத்துலேயும் போட்டுடுவான்.
ஒன்னு சொல்ல மறந்துட்டேன், அதாவது பூஜைக்கு 'பூ'ன்னுப் பாக்கறப்போ அது உதிரிக் கனகாம்பரம், லில்லி, மல்லின்னு இருந்துட்டாப் போச்சு, இல்லைன்னா அது சாமந்தியோ, ரோஜாவோ வா இருந்துட்டா அதைக் கிள்ளி வக்கணும் , இல்லன்னப் பல்லக் கடிச்சுண்டே , 'பூவைக்கூடக் கிள்ளி வைக்கல, அதையும் நானே செய்யனும்னு 'பொலம்புவான்.
சில பேருக்கு தன்னோடக் கொரலக் கேட்கரதுன்னா ரொம்பப் பிடிக்கும் அது சாதாரணமா பேசறதுலேயாகட்டும், பாடரதுலேயாகட்டும், அதே போலத்தான் நம்ப பரந்தாமன், ரொம்ப ஒரக்கததான் ஸ்லோகம் சொல்லி, மந்தரம் சொல்லிப பூஜைப் பண்ணுவான்.பக்கத்தாத்துல எதுத்தாத்துலே கேட்கவே கேட்டுடுவா, 'என்ன இன்னிக்கு மாமா பூஜைப் பண்ணலையான்னு.'
தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி பூஜைப் பண்ணும்போது கரண்ட் போகக் கூடாது.
தசாங்கம் கொளுத்தி அது சரியாப் பத்தலைன்னா , அதை பண்ண்ரவனுக்கு வெறும் அஷ்டோத்ரம் மாதிரி திட்டு கெடைக்கும். அடுத்தது பூவைகட் பண்ண முடியலன்னா , பூக்காரிக்கு சகஸ்ர நாமம் , கரண்ட் போச்சோ இ. பி காரனுக்கு லட்சார்ச்சனையே நடக்கும்.அவ்ளோக் கோபக்காரனாக்கும்.
இதுல என்ன விசேசம்னா எல்லாத் திட்டும் பூஜைப் பண்ணிண்டே நடக்கும்.!
இதெல்லாம் விட குளிக்கறதுக்கு முன்னாடியே டவலைக்கட்டிண்டு கொஞ்ச நேரம் சுத்தணும், உள்ளேப் போயிக் குளிச்சோமா , வந்தோமான்னேக் கிடையாது. சரிப் போகட்டும், குளிச்சபிரகாவது நல்ல வேஷ்டியைக் கட்டிண்டு வந்துப் பூஜைப் பண்ணலாமோல்லியோ, அதுவும் கிடையாது, தொடச்சிண்ட டவலக் கட்டிண்டு பூஜைக்கு உட்காரவேண்டியது.
மனசுக்குத் தோன்னித்துனா நல்ல அழகா பஞ்ச கச்சம் கட்டிப்பா , யாராவது வரப்போரான்னாலும் பஞ்சக் கச்சம் ஏறும் ஒடம்புலே., நாலு பேர் , 'என்ன, நல்லா வேஷ்டிக் கட்டிக்கரீங்கோ'ன்னு சொல்லிட்டா போரும் அப்டியே உச்சிக் குளிந்துடும்.
பரந்தாமனுக்கு அப்பப்போ கொஞ்சம் ,'பேஷ், பேஷ்'னு சொல்லிண்டே இருந்தாலும் , முகத்துக்கு நேரப் புகழ்ந்துட்டாலோ அவாளை ரொம்பவேப் பிடிச்சுடும்.
அப்புறம் அமாவாசைத் தர்ப்பணம் , தர்ப்பணம் பண்ண பித்தளைத் தாம்பாளம் , சொம்புல ஜலம், பொஸ்தகம் , தர்பை வகையறா எல்லாம் எடுத்து வக்கணும். ஆனா ஒட்கார்ந்தப் பிறகு, 'டி கண்ணாடி எடுத்துக்க மறந்துட்டேன் " கொஞ்சம் கொண்டுவரயான்னு ' கொரல் கொடுப்பான்.
அதேப் பூஜைகளை அவன் பொண்டாட்டி செய்யும் போது , ஒரு ஈ காக்காக் கூட வந்து எட்டியும் பாக்காது, செத்தையா போனயான்னும் கேட்காதுகள் . என்ன வேணும்னாலும் அவளே எடுத்து வச்சிண்டு , மறந்தா எழுந்துப் போயி கொண்டு வந்து செய்வா. அவப் பூஜைப் பண்ணி கற்பூரம் காட்டும் போது,அக்கம் பக்கம் யாராவது இருந்தாலும் ஒருத்தரும் வந்துக் கண்ல ஒத்திக்க மாட்டாள்.அவ பூஜைப் பண்ணினா அது மட்டம்.
பூஜைப் பண்ணும் போது போன் அடிச்ச மத்தவா இருக்காளே, பாத்துப்பான்னு கிடையாது. யாராவ்து போனை எடுத்து பேசி வச்சப்ரம் , அங்கிருந்தே , 'யாரு என்னவாம்'னு கேட்பான். பூஜைப் பண்றசமயத்துலே யாரா இருந்தா என்ன , அப்புறம் பேசின்டாப் போச்சுன்னு கிடையாது.கடைசியா நமஸ்காரம் பண்ணும்போதே,'யாரு போன்ல , என்னவாம் ?' னு கேட்பான்.
ஆனா சாஸ்த்ரம் சம்ப்ரதாயத்துல இவனை யாராலேயும் மிஞ்ச முடியாது,சுவாமிக்கு அலங்காரம் பண்றதும் ஒரு அழகே! அந்த அழகுல மயங்கியே சில சமயம் அடுத்த நாள் ஆனாலும் நிர்மால்யத்தை எடுக்காம அப்டியே வச்சிருப்பான்.
இவ்ளோ அவன் பொண்டாட்டிப் பண்றாளே, ஒரு நாள் ஒண்ணு எடுத்து வக்க மறந்துட்டா போச்சு உலகமே ரெண்டாயிடும். மொதல்ல ,பொண்டாட்டியை,' 'ஒண்ணு செஞ்சா ஒழுங்கா செய்யணும், ஏனோ தானோன்னுகடனேன்னு செய்யறது எனக்குப் பிடிக்காது. "
இதுக்கு பொண்டாட்டி,' தெனம் தான் செய்றேன் , ஒரு நாள் செய்யலன்னா , நீங்கலேசெஞ்சுக்க வேண்டியது தானேன்னு 'பதில் சொல்வா.
அது எப்படி கட்னப் பொண்டாட்டி எதுத்துப் பேசலாம்?
'ஆமாம் , என்னவோ பெரிய மலையைப் பொறடிட்டா மாதிரி' ன்னு சொல்வான்.
அதுக்கும் சும்மா இருக்க மாட்டாள். உடனே, ' நான்தான் மலையைப் பொறேட்ட்றேன் , அப்ப அந்த மலைய நீங்க பொறட்டருதுதானே" ன்னு கேட்பா.அதேல்லாம் அவனுக்குப் பிடிக்காது , பொண்டாட்டி ஒரு ஊமையாட்டம் அவன் எது சொன்னாலும் பதில் சொல்லாம ,தேமேன்னு அடிமையாட்டம் இருக்கணும்னு எதிர்பார்ப்பான்.
போறுமா இல்ல இன்னும் படிக்கணுமா? அப்புறம் எனக்கே போர் அடிச்சிடும்.
No comments:
Post a Comment