திருச்செந்தூர்: மாசி பிரமோத்சவத்தில் அருணகிரிநாதருக்கு நடனக்கோல தரிசனம்:
*அருணகிரிநாதர் தல யாத்திரையாகப் பாடிப் பரவி வரும் வழியில் திருச்செந்தூரை அடைகின்றார். அன்று மாசி பிரமோத்சவத்தின் ஏழாம் நாள், பிரதான உற்சவ மூர்த்தியான ஷண்முகரின் புறப்பாடு துவங்கியிருந்த சமயம், எண்ணிறந்த அணிகலன்களுடன் ஆச்சரியமாய் எழுந்தருளி வரும் அறுமுக இறைவனைக் கண்ணாரத் தொழும் அருணகிரியார் 'உன்னுடைய திருநடனக் கோல தரிசனம் காணப் பெருவிருப்பம் எழுகின்றது ஐயனே!' என்று விண்ணப்பித்துப் பணிகின்றார்.
*
கருணைக் கடலான செந்தில் வேலவனும் 'அருணகிரி! பின்புறமாய் வந்து நடனக் கோலம் காண்பாய்' என்று அருள, அருணகிரியார் அவ்வண்ணமே செல்கின்றார். அருணகிரியாரின் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு செந்தில் வேலவன் கோடி சூர்யப் பிரகாசமாய் பால வடிவில் அங்கு தோன்றுகின்றான், செம்பொன்னால் வார்த்தெடுத்தது போன்ற திருமேனிப் பொலிவு, திருமேனியெங்கும் அணிகலன்கள், நெற்றியில் துலங்கும் திருநீறு, செந்தில் இறைவன் திருநடத்தினைத் துவங்குகின்றான்.
*
பொதுவில் மழலைகள் தத்தமது பிஞ்சுப் பாதங்களையும் கைகளையும் சிறிது அசைத்து நடன பாவனை புரிவதே நம்மை மெய்மறக்கச் செய்யும், இங்கு திருநடமிடுவதோ 'நடனத்திற்கே இலக்கணமாய் விளங்கும்' பொன்னம்பலப் பரம்பொருளின் குமாரன், அதிலும் முறையான நடனக் குறிப்புகளுடன் முத்திரைகளுடன் திருநடனம் புரிகின்றது இச்சிவஞானக் குழவி. அருணகிரியாருக்கு அகம் குழைகின்றது, கைகள் உச்சி கூப்புகின்றது, கண்ணீர் ஆறாகப் பெருகுகின்றது, தன்வயம் முழுவதுமற்றுச் சிவானந்த வெள்ளத்தில் மூழ்குகின்றார், பின்வரும் திருப்புகழ் திருப்பாடலால் பணிந்தேத்துகின்றார், திருப்பாடலின் சந்தத்திற்கு ஏற்றாற்போல் செந்தில் வேலவன் நடமிடுகின்றான்,
-
இன்றும் மாசி பிரமோத்சவத்தின் ஏழாம் நாள் சண்முகர் புறப்பாட்டில் மேற்குறித்துள்ள அற்புத நிகழ்வு நினைவு கூரப் பெறுகின்றது (பிப்ரவரி 28ஆம் தேதி துவங்கும் இவ்வருட மாசிப் பெருவிழாவின் 7ஆம் நாள் மார்ச் 5 2020).
*
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ...... தந்ததானா
-
தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல்சிலம்புடன்......கொஞ்சவே
-
தந்தையினை முன்பரிந்தின்பவுரி கொண்டுநன்
சந்தொடமணைந்துநின்......அன்புபோ
-
கண்டுற கடம்புடன் சந்தமகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும்......சிந்துவேலும்
-
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர எந்தன்முன்......சந்தியாவோ
-
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கியெழ வெங்களம்......கொண்டபோது
-
பொன்கிரியெனஞ் சிறந்தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையும்......சிந்தைகூரக்
-
கொண்டநடனம்பதம் செந்திலிலும் எந்தன்முன்
கொஞ்சிநடனங்கொளும்......கந்தவே
-
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுநி கும்பிடும்......தம்பிரானே!!!
No comments:
Post a Comment