Friday, April 19, 2013

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் -

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : பி.எஸ். தேவராஜ சர்மா, பழையனூர்.


மஹா பெரியவாளுக்கு தான் பரப்ரும்மத்தில் லயிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பது தெரிந்தே இருந்தது என்று நினைக்கத் தோன்றுகிறது.

1993 டிசம்பர் 18-ஆம் தேதி.

கனவு.

பெரியவர்கள் ஒரு மண்டபத்தில் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். வடலூர் ஸத்ஸங்கப் பணிகள் பற்றி என்னிடம் கேட்கிறார்கள். பிடியரிசித் திட்டம், இலவச பாட புஸ்தகம், ஆடை வழங்குதல், கூட்டு வழிபாடு, கண் தானம், இரத்த தானம், தேவார திவ்ய ப்ரபந்தம் சொல்லிக் கொடுத்து போட்டிகள் நடத்துவது, கோயில் இல்லாமல் வெட்ட வெளியில் நிற்கும் தெய்வச் சிலைகளுக்கும் மாதம் ஒருமுறை அபிஷேக ஆராதனை - எல்லாம் சொன்னேன்.

அவர்கள் சொன்னார்கள்: “பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கிறாய் நீ. சிலர் தூற்றுவார்கள். அதனால் சேவையை நிறுத்திவிடக்கூடாது. அதேபோல், சிலர் போற்றுவார்கள். அதனால் கர்வப்படக்கூடாது. புகழ், இகழ் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சரி, எனக்குத் தூக்கம் வருகிறது. க்ஷேமமாக இரு, போயிட்டு வா..”

எனக்குத் துணுக்கென்றது. பெரியவாள், ‘தனக்குத் தூக்கம் வருகிறது’ என்று இதுகாறும் சொன்னதே இல்லையே?

(கனவு இன்னும் கலையவில்லை).

ஒரு பக்கத்தில், நெய்வேலி ஸத்ஸங்க அன்பர் அரையபுரம் ஜெயராமனும் மற்றவர்களும் பெரிய குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ‘ஏன்?’ என்று கேட்கிறேன். ”தெரியாது. மடத்தில் தோண்டச் சொன்னார்கள்..”

பின்னர் பெரியவா பூதவுடல் தாங்கி நின்ற நாட்கள் சிலவே என்பது எல்லோருக்கும் தெரியும்.

(பெரியவர் இவ்வளவு சூசகமாகத் தெரிவித்தும் உடனே சென்று தரிசிக்காமற் போய்விட்டோமே என்ற வருத்தம் என்னை இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கிறது.)

பெரியவா மறையவில்லை – அவர்கள் படத்தின் முன் நின்று கைகூப்பும் போது, அருளமுதாய் புன்னகைக்கிறார்களே! அதுதான் நிஜம்!

No comments:

Post a Comment