Friday, September 23, 2016

​ முளைகட்டிய பயறு காய் சாலட்:


தேவையானவை: 
பச்சைப் பயறு – 50 கிராம், 
கேரட், வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழம் – தலா ஒன்று,
 இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
 வெங்காயம் – ஒன்று, 
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
 கடுகு – அரை டீஸ்பூன்,
 கொத்தமல்லி – சிறிதளவு, 
எண்ணெய் – அரை டீஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு,

செய்முறை: 

பயறை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் நன்றாக வடித்து அதை ஹாட் பேக்கிலோ அல்லது துணியில் கட்டியோ ஒரு நாள் வைக்கவும். 

மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும். கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பயறுடன் சேர்க்கவும். 

உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். 

எண்ணெயில் கடுகு தாளித்து இதனுடன் சேர்க்கவும்.

இதில் புரதச்சத்து, நார்சத்து உள்ளது.

வாழைத்தண்டு பச்சடி:



தேவையானவை: வாழைத்தண்டு – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, சீரகம் – அரை டீஸ்பூன், தயிர் – ஒரு கப், நெய் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டை பட்டை நீக்கி நறுக்கி வைக்கவும். வாழைத்தண்டு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.

வாழைத்தண்டு நார்சத்து மிக்கது. கிட்னியில் கல் இருப்பவர்கள் வாழைத்தண்டு பச்சடி, ஜூஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது

தலைவலிக்குத் தீர்வு !சிறந்த கை மருந்துகள் !!



# இஞ்சிச் சாறு, பால், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
# அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவிவரலாம்.
# சுக்குத் தூள், சீந்தில் கொடி, தேன் சர்க்கரை ஆகியவற்றை வகைக்குக் கொஞ்சம் எடுத்துத் துணியில் முடித்து மூக்கில் முகர்ந்து வரலாம்.
# குளிர்ந்த நீரைத் துண்டில் நனைத்துத் தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலன் தரும்.
# தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக்கொள்ள வேண்டும்.
# நொச்சி இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாறை, இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் நன்கு பூசினால் தலைவலி குறையும்.
# பத்து கிராம்பையும், ஒரு கடுக்காயின் தோலையும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஓரளவு சூட்டில் குடிக்கலாம்.
# ஜாதிக்காய் உறையைக் கல்லில் உரைத்து அதை எடுத்து இரு பக்க நெற்றிப் பொட்டிலும் கனமாகப் பற்றுப் போடலாம்.
# நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத் தூளாக்கிச் சிட்டிகை அளவு எடுத்து நாசியில் வைத்து முகரத் துர்நீர் பாய்ந்து வந்து தலைவலியைப் போக்கும்.
# வில்வ இலைகளை அம்மியில் அரைத்துத் தினமும் சுண்டைக்காய் அளவு 20 நாட்கள் சாப்பிடலாம்.
# இரண்டு துளி வெற்றிலைச் சாறு மூக்கில் விடலாம்.
# மருதோன்றி இலையை மை போல அரைத்து, இரு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் கனமாகப் பற்று போட்டால் உடனே தலைவலி நின்றுவிடும். இது கை கண்ட அனுபவ முறை.
# வெள்ளை எள்ளை, எருமைப் பால் சேர்த்து அரைத்தெடுத்து அதிகாலையில் முன் நெற்றியில் பற்று போட்டு உதயசூரியன் ஒளியில் லேசாகக் காட்டிவரலாம்.

அஷ்டலக்ஷ்மிகள்

அஷ்டலக்ஷ்மிகள் என்றாலே இன்று வரை பல குழப்பங்கள் உண்டு... எந்த எந்த ரூபங்கள் இந்த 8ல் இடம் பெறும், அவற்றின் சரியான வடிவம் வாகனம் என்ன.. இதெல்லாம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டது. 
ஸம்ப்ரதாய வகையில் மாறுபாடுகளும் உண்டு. ஆனால், பொதுவாக, சக்தியை தலைமையில் கொண்ட சாக்தத்தில் உள்ளவாறு, பல்வேறு நூல்களை ஆராய்ந்து, இந்த தீர்மானமான பொதுவான ரூபாதி வர்ணனைகளை பகிர்கிறேன். ஸந்தேஹங்களுக்கு விவாதித்து விடை காண எண்ணலாம். சர்ச்சைகளுக்கு இடம் இல்லை.
விரும்புபவர்கள் படிக்கவும்.
ப்ரதம ஸ்தானம் - ஆதி லக்ஷ்மீ
மணிமய மண்டபத்தில், ரத்னஸிம்ஹாஸனத்தில் நடுவே ஒரு அடர் சிவப்பு நிற தாமரைபுஷ்ப ஆசனத்தில்,கிழக்கு முகமாக, மாணிக்ய தேஜஸோடு , வெளிர் சிவப்பு என்ற காஷ்மீர புஷ்பத்தின் நிறமான ரோஸ் வர்ணத்தில் வஸ்திரமும் ஆபரணங்களும் அணிந்து, சதுர்புஜங்களில் பின் கரங்களில் வலது புறம் சிவப்பு தாமரை, இடது புறம் த்வஜம் என்னும் கொடி, கீழிரண்டு கரங்களில் வலப்புறம் அபயம் இடப்புறம் வரதம் தாங்கி, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் , இரண்டு புறமும் தீபம் பிடிக்கும் பாவைகள் சூழ அமர்ந்திருப்பவள். சகல ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கும் ஆதி காரணியாகையால் ஆதி லக்ஷ்மீ என்று பெயர் பெறுபவள் . அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் ஆக்னேய பாகம் இவளுக்குரியது.
த்விதீய ஸ்தானம் - தான்யலக்ஷ்மீ
ஒரு சோலையின் மத்தியில், வடக்கே  நோக்கும் வெள்ளை யானையின் மீது, கிழக்கு முகமாக , மரகத தேஜோமய ரூபத்தோடு, கதிர் பச்சை நிற வஸ்த்ரமும், ஆபரணங்களும் தரித்து, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவள். எட்டு புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, கரும்பு, பழம் காய்கள் நிறைந்த பாத்திரம், நிரம்பி கையில் வழியும் நெல்படியும் , வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், நெற்  குருத்து, தாமரை புஷ்பம், அபய ஹஸ்தமும் தாங்கியவள். சகல ஜீவர்கட்கும் உணவுக்கு பஞ்சமின்றி வைப்பதால் தான்ய லக்ஷ்மீ என்று நாமதேயம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் தக்ஷிண பாகம் இவளுக்குரியது.
த்ருதீய ஸ்தானம் - வீரலக்ஷ்மீ
யுத்த பூமியின் மத்தியில், வடக்கே முகம் கொண்ட பெரிய சிங்கத்தின் மீது, கிழக்கு முகமாக, செம்பவள ஒளி வீச, ரத்த சிவப்பு நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் பூண்டு, தக்ஷார்த்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவள். எட்டு புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், சூலம், பாசக்கயிறும், வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்புகள், வாள், அபய ஹஸ்தமும் தரித்தவள். சகல உயிர்களுக்கும் தைர்யம், வீர்யம், மனோபலத்தை அருள்வதால், வீரலக்ஷ்மீ, தைர்ய லக்ஷ்மீ என்று நாமங்கள் உண்டு. அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் நிருருதி பாகம் இவளுக்குரியது.
துரீய ஸ்தானம் - கஜலக்ஷ்மீ
ராஜ்ய சபையின் மத்தியில், பொன்னிறமான தாமரை புஷ்பத்தின் மீது, கிழக்கு முகமாக, வைடூர்ய தேஜஸ் வீச, மாதுளம்பூ நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இவள் சதுர்புஜங்களில், மேலிரு கரங்களில் செந்தாமரை மலர்களும் கீழிரு கரங்களில் அபயவரதமும் தாங்கி இருப்பவள். இரண்டு சேடிப்பெண்களும், நான்கு கஜேந்த்ர யானைகளும் சுற்றி இருக்க, யானைகளின் துதிக்கையில் உள்ள நீர் நிரம்பிய கும்பங்களில் இருந்து சுகந்த ஜலம் ஸதாகாலமும் தன் மீது அபிஷேகிக்குமாறு ஸுகரூபத்தோடு அமர்ந்திருப்பவள். சிறந்த அடியவர்களுக்கு ராஜ்யபாரமும், ஆளும் தன்மையும் தருவதால் இவளே ராஜ்ய லக்ஷ்மி என்றும் கஜலக்ஷ்மீ என்றும் அழைக்கப்படுகிறாள்.அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் பஸ்ச்சிம பாகம் இவளுக்குரியது.
பஞ்சம ஸ்தானம் - ஸந்தான லக்ஷ்மீ
தடாக சமீபத்தில், கிழக்கே நோக்கும் கருட பக்ஷியின் மீது, வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகம்  கொண்டு, புஷ்பராக தேஜஸோடு, நீலோத்பலத்தின் நிறத்தை ஒத்த ஊதா நிறத்தில் வஸ்த்ரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்ட புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக, சங்கு, பூர்ணகும்பம், கத்தியும், வலது புறம் மேலிருந்து கீழாக, சக்ரம், பூர்ணகும்பம், உத்பல புஷ்பம், அபயஹஸ்தமும் கொண்டு, கீழ் இடது கரத்தால், தனது இடது தொடையில் உள்ள சிசுவை அணைத்துப்பிடித்தவாறு அமர்ந்திருக்கிறாள். பக்தர்களுக்கு வம்சம் தழைக்க ஸந்தான பாக்கியம் அருள்வதால் சந்தான லக்ஷ்மீ என்று திருநாமம்.  அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் வாயவ்ய பாகம் இவளுக்குரியது.
ஷஷ்ட ஸ்தானம் - விஜயலக்ஷ்மீ
போர்ப்பாசறையின் மத்தியில், தெற்கே முகம் கொண்ட வெண்குதிரை வாஹனத்தின் மீது, வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, நீலமணி தேஜஸோடு, வெளிர் நீல நிற வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்ட புஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், சூலம், கதையும், வலது புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்புகள், வாள், தாமரை புஷ்பத்தோடு கூடிய அபயகரமும் கொண்டவள். பக்தர்கள் செய்யும் காரியங்களில் வெற்றியையே தர வல்லவள் என்பதால், விஜயலக்ஷ்மீ, ஜயலக்ஷ்மீ என்று நாமங்கள் உண்டு. அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் உத்தர பாகம் இவளுக்குரியது.
ஸப்தம ஸ்தானம் - வித்யாலக்ஷ்மீ
வித்யாசாலையில், தெற்கே முகம் கொண்ட ஹம்ஸ பக்ஷியின் மீது, வெண்தாமரை புஷ்பமும், அதன் மீது வாமார்த்த பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, முத்து தேஜஸோடு, வெண்பட்டு வஸ்திரமும், முத்து ஆபரணங்களும் அணிந்து, சதுர்புஜங்களில் மேலிரு கரங்களில் இடப்புறம் அக்ஷஸூத்ரம், வலப்புறம் குண்டிகை, கீழிருகரங்களில் இடப்புறம் வேதபுஸ்தகமும், வலப்புறம் சின்முத்ரையும் கொண்டு காட்சி தருபவள். பக்தர்களுக்கு அழியாத கல்விச்செல்வத்தை அருள்வதால் வித்யாலக்ஷ்மீ என்று திருநாமம். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் ஐஸான்ய பாகம் இவளுக்குரியது.
அஷ்டம ஸ்தானம் - தனலக்ஷ்மீ
தனசாலையின் நடுவே, வெளிர் சிவப்பு என்ற ரோஸ் நிற தாமரையின் மீது, பத்மாஸனத்தில், கிழக்கு முகமாக, கோமேதக தேஜஸோடு, தங்க மஞ்சள் நிறத்தில் வஸ்திரமும், ஆபரணங்களும் தரித்து, அஷ்டபுஜங்களும், இடது புறம் மேலிருந்து கீழாக சங்கு, வில், கதை, நிரம்பி கையில் வழியும் தனபாத்ரம் ஆகியனவும், வலப்புறம் மேலிருந்து கீழாக சக்ரம், அம்பு, தாமரைபுஷ்பம், அபயகரம் ஆகியனவும் கொண்டிருப்பவள். ஜனங்களுக்கு பொருட்செல்வத்தை குறைவின்றி தருவதால் தனலக்ஷ்மீ என்று பெயர். அஷ்டலக்ஷ்மீ மண்டலத்தில் பூர்வ பாகம் இவளுக்குரியது.
மண்டலத்தின் மூலத்தில் மத்தியபாகத்தில் - மஹாலக்ஷ்மீ
சம்பூர்ணமும் ஷூன்யமும் ஆன வானவெளியில், கமலாசனத்தில், ஸுகாசனம் போட்டு அமர்ந்து, வஜ்ரதேஜஸோடு, கிழக்கு முகமாக, பலவர்ணங்களில் ஆன பட்டு வஸ்திரமும் நவரத்நாபரணங்களும் பூண்டு, சதுர்புஜங்களில் சங்கு , சக்ரம், கதை, கமலமலர் ஆகியவற்றை ஏந்தி, விஷ்ணுப்ரியையாக, மூன்று தொழிலும் செய்பவளாக, ஸித்த லக்ஷ்மீ, மஹாலக்ஷ்மீ, வர லக்ஷ்மீ, வைபவ லக்ஷ்மீ, ஸௌபாக்யலக்ஷ்மீ, சாம்ராஜ்ய லக்ஷ்மீ என்ற திருப்பெயர்களால் இந்த ரூபிணி அறியப்படுகிறாள்.
இதுவே பூஜைக்குரியதும், த்யானிக்கத்தகுந்ததும் ஆன, அஷ்டலக்ஷ்மீ மண்டலம் ஆகும். இதற்கு விக்ரஹ பூஜை, கும்ப ப்ரதிஷ்டையோடு கூடிய பூஜை, மண்டலத்தை வஸ்த்ராதிகளோடு ப்ரதிஷ்டித்து ஹோமம் செய்தல் ஆகியன பிரயோகமாகும்.

Friday, September 16, 2016

மஹாளய பித்ருபக்ஷம் 17.09.16செவ்வாய் முதல் 30.09.16செவ்வாய்வரை…


நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, மாமி,அத்தை முதலிய அனைவருக்கும் நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் காலமே மஹாலயபக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மஹான்களின் இருப்பிடம். இறந்து போனாலும் கூட நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்.
மஹாளயத்தை 1. பார்வணம் 2. ஹிரண்யம் , 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.
1) பார்வணம் என்பது ஆறு ப்ராஹ்மணர்களை ( பித்ருக்களாக ) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து, ப்ராம்ஹணர்களுக்கு சாப்பாடு போடுவது ,
2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் முதலியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது,
3) தர்ப்பணம் என்பது தானாகவே அமாவஸைபோல் தர்ப்பணமாகச் செய்வது.
இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் கட்டாயம் தனது பித்ருக்களுக்குச்செய்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஏதாவது ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்பவர்கள்
மஹாபரணி ,மஹாவ்யதீபாதம், மத்யாஷ்டமி,கஜச்சாயா ,ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மஹாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.,
மஹாளய பக்ஷம் திதிகள் தேதிகள் 17/09/16 சனி ப்ரதமை
18/09/16 ஞாயிறு த்விதியை
19/09/16 திங்கள் திருதியை
20/09/16 செவ்வாய் சதுர்த்தி, மஹாபரணி
21/09/16 புதன் பஞ்சமி,ஷஷ்டி(2திதிகள்)
22/09/16 வியாழன் சப்தமி
23/09/16 வெள்ளி மத்யாஷ்டமி,வியதிபாதம்
24/09/16 சனி நவமி
25/09/16 ஞாயிறு தசமி
26/09/16 திங்கள் ஏகாதசி
27/09/16 செவ்வாய் த்வாதசி, சன்யஸ்தமஹாளயம்
28/09/16 புதன் த்ரயோதசி
29/09/16 வியாழன் சதுர்த்தசி
30/09/16 வெள்ளி சர்வஅம்மாவாஸ்யை
01/10/16 சனி ப்ரதமை

ஸ்ரீகிருஷ்ணர் வழிபட்ட --- சங்கடஹர சதுர்த்தி!



சிவபெருமான், கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி’யாக நியமித்தார்.

அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்ட ஸித்திகளையும்,

மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார்.

கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ‘ என்று கூற

பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூறின்றி நிறைவேற வேண்டும்‘ என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
  
பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு,

உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி,

சந்திரலோகம் சென்றார்.

அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான்.

அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய்.

இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது.

அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக’ என்று சபித்தார்.

சந்திரனும் ஒலி மங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
   
சந்திரன் அழிந்ததைக் கண்டு வருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில்,

பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர்.

பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றும்,

கணபதியைச் சரணடைவது தான் ஒரே வழி என்றும் கூறினார்.

மேலும் ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிக்குப் பின் வருவது) விரதம் ஏற்று,

பலவகையான பழங்கள், அப்பம், மோதகம் இவற்றுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து,

அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல, தட்சணைகளை அளித்தால் கேட்ட வரங்களை அளிப்பார் என்று பிரம்மா தெரிவித்தார்.

பிறகு தேவர்கள் குரு பிரகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர்.

சந்திரனும் இந்த பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார்.

சந்திரனும் களிப்புற்று, அவரை நமஸ்கரித்தார் என்கிறது புராணம்!

“தவம் காரணம் காரண காரணாநாம் க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்“

என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான்.

பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர்.

கணபதியும் சாபவிமோசனம் அளித்தார்.

‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி’யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின்,

ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூஜிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்’ என்று விநாயகரே அருளினார்.

இதையே சங்கடஹர சதுர்த்தி என போற்றப்படுகிறது.

பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஒருவருடம் வரை தெடர்ந்து வீண் பிரச்னைகள் சிக்கல்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்!

எனவே, ஆண்டு தோறும் ‘ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை அமைத்து பூக்களால் பூஜித்த பின்,

இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் துவங்கிய காரியத்தில் வெற்றியையும், சகல சௌபாக்கியங்களையும் தருவேன்’

என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல துன்பங்களுக்கு ஆளான ஸ்ரீகிருஷ்ணனுக்கு,

நாரதர் இந்த சரிதத்தை விளக்கிச் சொல்ல,

ஸ்ரீகிருஷ்ணனே சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார்

என்று தெரிவிக்கிறது ஸ்காந்தபுராணம்!
  பிள்ளையார்...

--------------------------------
பிள்ளையார்?

கண்டகி நகரை சக்ரபாணி எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கும் அவன் மனைவியான உக்ராவிற்கும் குழந்தைகள் இல்லாத குறையைத் தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை!

சௌனக் என்னும் முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்க, சூரியனைக் குறித்துத் தவம் இருக்கச் சொன்னார் அவர்.

இருவரும் தவம் செய்ய அதற்குப் பலன் கிடைத்தது.

சூரிய பகவானின் அனுக்கிரகத்தால், உக்ராவும் கர்ப்பம் அடைந்தாள்.
  
ஆனால் என்ன இது? குழந்தையின் சூடு வயிற்றினுள் நாளாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது.

அவளால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சூட்டைத் தாங்க முடியவில்லை.

தவித்துப் போனாள்.
கதறினாள். கண்ணீர்விட்டாள்.

ஒருகட்டத்தில், உக்ரா சூடு தாங்க முடியாமல் கடலில் இறங்கிக் கொண்டாள்.

அவள் தவிப்பைக் கண்டு வருந்திய சமுத்திர ராஜனும், அவள் குழந்தையைத் தான் தாங்கி வெளியே கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்தான்.

சமுத்திரராஜனால் குழந்தை வெளியே உலகுக்கு வந்ததால், உக்ராவும், சக்ரபாணியும் குழந்தைக்கு ‘சிந்து’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்!
  
அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யரிடம் சூரிய பகவானைக் குறித்த மந்திரங்களைக் கற்றான் சிந்து.

சுக்ராச்சார்யரும் சூரியனைக் குறித்துத் தவம் செய்யச் சொல்லிக் கொடுக்க,

சிந்துவும் அப்படியே தவமிருந்து வந்தான்!

சிந்துவின் தவத்தில் மகிழ்ந்த சூரிய பகவான், அவனுக்குப் பரிசாக அமுதக் கலசத்தைக் கொடுத்து,

அதை சிந்துவின் வயிற்றிலேயே அவனை வைத்திருக்கும் படியும்,

இந்த அமுதக் கலசம் இருக்கும் வரை அவனை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது என்றும் சொன்னார்.

சூரியனிடமிருந்து அமுதக் கலசம் பெற்றுக் கொண்ட சிந்து தன் தகப்பனான மன்னனை, விரட்டியடித்தான்.

தானே ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தான்.

ஆனால், நல்லாட்சிக்கு பதிலாக கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான்.

குடிமக்களைத் தொந்தரவு செய்தான்.

தன்னிடம் அமுதக் கலசம் இருக்கும் தெம்பில் தேவர்களையும் துன்புறுத்த முனைந்தான். இந்திரனையும், தேவர்களையும் சிறை பிடித்தான்.

அனைவரையும் காப்பதற்காக வந்த மகாவிஷ்ணுவையும் சிறை பிடித்தான்.

கண்டகி நகரிலேயே சிறைவைத்தான்.

மற்ற தேவர்களும் பிரம்மாவும் திருக்கயிலைக்குச் சென்று சிவனாரிடம் முறையிட்டார்கள்.

விநாயகனால் மட்டுமே அனைவரையும் காப்பாற்ற முடியும்.

ஆகவே அனைவரும் அவனைச் சரணடையுங்கள் என்று அருளினார்.

அதன்படி அனைவரும் விநாயரை வணங்கி வேண்ட,

அவரும் தான் மீண்டும் பிறவி எடுக்கும்போதே சிந்துவை அழிக்க முடியும் எனக் கூறினார்.

விநாயகர் மீண்டும் பிறப்பது எப்படி? அனைவரும் கலங்கினர்.

மேருமலையில் ஈசனோ அன்னைக்கு “ஓம்” என்னும் ப்ரணவத்தை உபதேசித்துப் பனிரண்டு வருடங்கள் ஜபிக்கும்படி கூறினார்.

பார்வதிதேவி, களிமண்ணால் விநாயகரை அமைத்து ஈசன் கூறியபடி வழிபடலானாள். அவள் செய்த வழிபாட்டால் உயிர் பெற்றார் விநாயகர்.

ஈசனும் அவரை ஆசீர்வதித்து, விக்னேஸ்வரனை வணங்கிவிட்டு வேலை ஆரம்பிப்பவர்களுக்குத் தடையில்லாமல் வேலை நடக்கும் என அருளினார்!

அனைவரும் மேரு மலையிலிருந்து இறங்கி வரும் வேளையில் கமலாசுரன் என்பவனைக் கண்டார்கள்.

குதிரை மீது அமர்ந்திருந்த அவன், விநாயகரோடு சண்டை போட்டான்.

அப்போது அவனை வெற்றி கொள்ள முடியவில்லை விநாயகரால்.

அவன் உடலில் காயம் பட்டுக் கீழே விழும் ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் மீண்டும் அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தார்கள்.

ஆகவே பிரம்மாவின் மானச புத்திரிகளான ஸித்தியையும், புத்தியையும் அழைத்து,

அந்த ரத்தத் துளிகள் கீழே விழாமல் அப்படியே குடிக்கும்படி விநாயகர் சொல்ல, அவர்களும் அவ்வாறே குடித்தனர்.

அதன்பிறகு, கமலாசுரனை விநாயகர் கொன்றார்.

அதையடுத்து, கண்டகி நகரில் சிறைப்பட்டிருந்த அனைவரையும் விடுவிக்கும்படி சொல்ல,

சிந்து ஆணவத்துடன் முடியாது என்று மறுத்தான்.

ஆவேசமான விநாயகர், சிந்துவுடன் போரிட்டார்.

விநாயகர் தொடுத்த பாணம், சிந்துவின் வயிற்றைக் கிழித்து அமுதக் கலசத்தை உடைத்து நொறுக்கினார்.

சிந்து செத்துப்போனான்.

கண்டகி நகரின் பொறுப்பை விநாயகர் ஏற்றார்.

ஸித்தி, புத்தியை மணந்தார்.

இந்தப் போரில், விநாயகர் மயிலை வாகனமாய்க் கொண்டு போரிட்டாராம்.

இதனால் அவர் மயூரேசர் என அழைக்கப்பட்டார் என்கிறது புராணம்!

புனே & ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் புனேயில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

இன்றைக்கும் அழகும் குறும்பும் ததும்ப அருள்பாலிக்கும் மயூரேசரை, விநாயகப் பெருமானைத் தரிசிக்கலாம்!

விநாயகரின் சில--திருநாமங்கள்-

ஸ்ரீவரஸித்தி விநாயகர், ஸ்ரீஇஷ்டஸித்தி விநாயகர், ஸ்ரீவிக்ன நிவாரண கணபதி, ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீஸித்திபுத்தி விநாயகர்

என்றெல்லாம் பல திருநாமங்கள் ஆனைமுகத்தானுக்கு!

எத்தனை எத்தனை திருநாமங்கள்.

ஆனால் விநாயகரின் தத்துவம் ஒன்றே ஒன்றுதான்!

ஈசன் மைந்தனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம்.

கேட்ட வரங்களை உடனே வாரி வழங்கும் பிள்ளை குணம் கொண்டவர்.

அதனால்தான் இஷ்டதெய்வமாக ஆனைமுகனைக் கொண்டாடி, போற்றி துதிக்கிறோம்!

ஆனைமுகனே உன் திருவடி சரணம்!
[06/09 07:29] Bhaskaran TT: விநாயகரின் 12
-----------------------------
அவதாரங்கள்
----------------------------

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது.

வக்ரதுண்ட விநாயகர்

இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி,

மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை

பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

கஜானனவிநாயகர்

சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.

விக்கிரனபராஜர்

காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.

மயூரேசர்

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

உபமயூரேசர்

சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

பாலச்சந்திரர்

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

சிந்தாமணி

கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான்.

உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

கணேசர்

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

கணபதி

கஜமுகாசுரனை வென்றவர்.

மகோற்கடர்

காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர்.

இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது.

அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

துண்டி

துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

வல்லபை விநாயகர்

மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.


விநாயகர்சதுர்த்தி விழா தத்துவம் இதுதான்.*

இறைவனை தனது விருந்தினராக கருதி வழிபாடும் முறை இது.

ஒரு #இந்து  இறைவனை, தான் விரும்பும் உருவத்தில்(இஷ்ட தேவதை) சிலையாக வடிக்கிறான்.

அந்த சிலையை தனது வீட்டில்,அல்லது ஒரு பொது இடத்தில்
பிரதிஷ்டை செய்கிறான்.( #சிம்மாசனம்-அமர்வித்தல்)

அந்த சிலையில் எழுந்தருளுமாறு இறைவனை வேண்டுகிறான்.தன் வேண்டுதலை ஏற்று தன் விருந்தினராக அந்த சிலையில் எழுந்தருளியுள்ள இறைவனை வரவேற்கிறான்.இதுவே #ஆவாஹனம்(உருவேற்றுதல்) எனப்படும்.

அடுத்து, தன் வேண்டுதலை ஏற்று தனது விருந்தினராக வந்துள்ள இறைவனை பல்வேறு வகையான சடங்குகளைச் செய்து விருந்தோம்புகிறான்.
இதுவே #உபச்சாரம்(விருந்தோம்புதல்)  ஆகும்.

இறுதியாக அந்த தெய்வத்துக்கு விடை கொடுத்து வழியனுப்புகிறான். இதுவே #விஜர்சனம் (வழியனுப்புதல்) ஆகும். (விநாயகர் சிலையை நீரில் விடுதல்)

இந்த மூன்றும் சேர்ந்ததுதான் #பூஜை ஆகும்.
இது புறப் பூஜை வகையை சேர்ந்த வழிபாடு ஆகும்.

(அகப் பூஜை முறை என்ற வேறுவிதமான பூஜை முறையும் உள்ளது)

இதில் இரண்டாவதாகக் கூறிய உபசார   முறைகள் பல
உள்ளன. மூன்று அங்க வழிபாடு,ஐந்து அங்க வழிபாடு,16 அங்க வழிபாடு,64 அங்க வழிபாடு என பல வகை உபசார முறைகள் உள்ளன.

மூன்று அங்க வழிபாடு

தூபம்-நறுமண புகை காட்டுதல்
தீபம்-தீபத்தை இறைவன் உருவம் முன்பு  காட்டுதல்
நைவேத்தியம்- உணவுகளை இறைவனுக்கு படைத்தல்.

மேலே சொன்ன மூன்றுடன்

சந்தனம்-சந்தனம் பூசுதல்
புஷ்பம்-பூமாலை சாற்றுதல்

ஆகியவையும் சேர்ந்தது ஐந்து அங்க உபசார வழிபாடு ஆகும்.

16 அங்க வழிபாடு கீழ்கண்டவை
சேர்ந்த வழிபாடு ஆகும்.

தியானம்-ஒன்றுதல்
ஆவாஹனம்-உருவேற்றுதல்
சிம்மாசனம்-அமர்வித்தல்
பாத்யம்-திருவடிகளை வணங்குதல்
அர்க்யம்-கைகூப்பி வணங்குதல்.
வஸ்த்ரம்-ஆடை அணிவித்தல்
ஸ்நானம்-குளிப்பாட்டுதல்
சந்தனம்-சந்தனம் பூசுதல்
புஷ்பம்-பூமாலை சாற்றுதல்
தூபம்-நறுமண புகை காட்டுதல்
தீபம்-தீபத்தை இறைவன் உருவம் முன்பு  காட்டுதல்
நைவேத்தியம்- உணவுகளை இறைவனுக்கு படைத்தல்.
தாம்பூலம்-வெற்றிலை வழங்குதல்
நீராஞ்சனம்- விளக்கால் ஆரத்தி எடுத்தல்.
ஸ்வர்ண புஷ்பம்-தங்கத்தால் அலங்கரித்தல்.

இந்து தத்துவம்

அனைத்தும்_இறைவனே! அவன்_ஒருவனே!

என்பதே இந்து மத கொள்கை.

இந்த தத்துவத்தை உணர்த்துவதே விநாயகர் சிலையை நீரில் கரைக்கும் நிகழ்வாகும்.

மகாவிஷ்ணு... சக்ராயுதம்!



ஸ்ரீமகாவிஷ்ணு, தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார்.

அதில் ஒன்று சக்ராயுதம்.

அவர் அந்தச் சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ,

அது சக்தி இழந்து திரும்பி வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவிஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் பெறுவதற்காக, சிவபெருமானை வழிபடச் சென்றார்.

அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு விறுவிறுவென உள்ளே சென்றார்.

இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது.

இதை அறியாத மகாவிஷ்ணு, சிவனைப் போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால்,

சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய சஹஸ்ர நாமம் கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.

  இதில் மகிழ்ந்த சிவபெருமான் முன்பு ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க,

தன் கால் நகங்களால் உருவாக்கி இருந்த

சுதர்சனம் எனும் சக்கரப்படையை மகாவிஷ்ணுவுக்கு கொடுத்தார்.

விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார்.

விஷ்ணுவின் கையிலிருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி,

தம் வாயில் போட்டுக் கொண்டார்.

   அதைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறு என்பதை உணர்ந்தார்.

அவரை வணங்கி, தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக்கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார்.

இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.

   அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சனச் சக்கரம் வெளியில் விழுந்தது.

அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு என்கிறது புராணம்!