Sunday, February 24, 2019

*நாட்டுப்புற மருந்துகள்*⛰



நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

👩🏻 *மகளிர் மருத்துவம்*

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு:

*1. வெள்ளைபடுதல்* - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

*2. பிறப்புறுப்பில் புண்* - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

*3. சீரற்ற மாதவிலக்கு* - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

*4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி* - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

*5. உடல் நாற்றம்* - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

*1. கர்ப்பகால வாந்தி* - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

*2. பிரசவ காலத்தில்* ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

*3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு* - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

*4. தாய்ப்பால் பற்றாக்குறை* - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

👨🏻 *ஆடவர் மருத்துவம்*

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

*1. நீர் பிரிதலில் சிக்கல்* - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

*2. சிறுநீர் எரிச்சல்* - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

*3. விந்து வெளியேறல்* - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

*4. ஆண்மைக் குறைவு* - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

*5. வெள்ளைபடுதல்* - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி  வர நோய் விலகும்.

👶 *குழந்தையர் மருத்துவம்*

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

*1. வயிற்றுப்போக்கு* - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

*2. சளி* - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

*3. கக்குவான்* - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

*4. சாதாரணக் காய்ச்சல்* - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

*5. உடம்பு வலி* - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

🌿 *பொது மருத்துவம்*

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

*1. காய்ச்சல்* - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.

*2. பொடுகுத் தொல்லை* - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

*3. பேன்* - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.

*4. வெட்டுக்காயம்* - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.

*5. முகப்பரு* - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்

🐐🐓🐛🐂🐎 *கால்நடை மருத்துவம்*

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

*1. புண் புழு* - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.

*2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு* - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.

*3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு* - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்

No comments:

Post a Comment