Saturday, August 27, 2016

​அறுபதாம் கல்யாணம் திருக்கடையூரில் செய்வதன் தாத்பரியம்...

-
திருக்கடையூர் காலனை ஸம்காரம் செய்து அமிர்தம்(அமிர்தகடேஸ்வரர்) அதாவது மரணமற்ற நிலையினைத் தரக் கூடிய ஸ்தலம் என்பது கோட்பாடு. இதற்கும் அறுபதாம் கல்யாணத்திற்கும் அருமையான சம்மந்தம் இருக்கிறது...மனிதன் உலகாய பற்றுகளில், பந்த பாசங்களில் மூழ்கி பிறவியின் நோக்கத்தை மறந்து போகிறான். எனவே அவனுக்கு அதை நினைவுபடுத்துவதற்காகவே அந்த ஸ்தலத்தில் அறுபதாம் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள்.
ப்ரம்மச்சரியம் முடிந்து அறுபது வயது வரை கிரஹஸ்தனாக வாழ்ந்தாயிற்று. இனி கணவனும் மனைவியும் கூடி #வானப்ரஸ்தம் எனும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதே அறுபதாம் கல்யாணம்.
பதி இறைவன், பசு ஆன்மா, இடையே தளையாக விளங்குவது பாசம் எனும் பற்றுகள்தான். இந்த பாசம்தான் பிறவியை நீளச் செய்கிறது. அதனால்தான் எமன் கையில் பாசக் கயிறு இருக்கிறது, அதை வைத்துதான் அவன் உயிர்களைக் கவர்ந்து செல்கிறான் என்கிறார்கள்.
அந்த பாசத்தை அறுத்து விட்டால் பதியும் பசுவும் இணைந்து விடும். பற்றுகளை அறுத்தவனைக் கண்டு காலன் பயப்படுவான். ஆனால், பற்றுகளை அறுப்பது அவ்வளவு எளிய காரியமில்லையே ?
என்ன செய்வது ? அதற்கான உபாயமே இந்த வானப்ரஸ்தம். அதாவது பற்றுகளை மடை மாற்றுவது. உலகாய பற்றுகளை இறைவனை நோக்கித் திசை திருப்புவது. கணவனும் மனைவியும் கூடி புண்ணிய க்ஷேத்திரங்கள், பலப்பல புண்ணிய தீர்த்தங்களுக்கெல்லாம் சென்று தங்கள் மனதை உலகாயத்திலிருந்து மெல்ல மெல்ல இறைவனை நோக்கி செலுத்த வேண்டும். அதற்கு அவர்களுக்கு இருபது வருடம் அவகாசம் தரப்படுகிறது.
அதற்குப் பிறகு #எண்பதாவது_கல்யாணம் நடக்கும். இனி நீங்கள் இருவரும் சந்நியாசம் மேற்கொள்ளத் தயாராகி விட்டீர்கள் என்பதை நினைவூட்டுவதாகும் அது. இப்படிப்பட்ட நம்பதியர்களின் நிலை என்பது ஒரு பூரணமான நிறைவான நிலையாகும். அவர்கள் மனம் இறை சிந்தனையில் நிலைத்திட இனி எந்தத் தடையுமில்லை.
அவர்கள் எமனை வென்றவர்களாகி விடுகிறார்கள். அவர்களுக்கு மரணமில்லை. எனவே அவர்கள் #இறைநிலை எனும் அமிர்தமுண்டவர்களாகி விடுகிறார்கள். முக்தி அவர்களுக்கு முன்பே தன் வாசலைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. இத்தகையவர்களுக்காக இறைவன் எமன் எனும் மரண தத்துவத்தை சம்ஹாரம் செய்வதாக விளக்கப்படுகிறது. இறைவனின் பாதத் துளிகள் எனும் அமிர்தம் அவர்களுக்கு மரணமிலாத நிலையைத் தந்து விடுகிறது. மரணம் என்றால் அங்கு மறுபிறவி உண்டு. பற்றறுத்து இறை சிந்தனையில் நிலைத்திருப்பவர்களுக்கோ மரணமில்லை. அவர்கள் இறைநிலையில் தங்களை இணைத்துக் கொண்டு அந்த ஜோதியில் கலந்து விடுகிறார்கள். எனவே இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பொதுவாகவே மனிதன் உணர்வு மனதின் பிடியில் சிக்கி, புலன் இன்பங்களில் மயங்கி காலனின் வயப்பட்டு விடுகிறான். உள்ளே உணர்வறு மனம் என்று ஒன்று இருப்பதையே பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. அத்தகைய உணர்வறு மனதைத் தூய்மைப்படுத்தி, அதை உணர்வு மனதோடு இயைந்து செயல்பட வைத்தால் அதுவே நிறைவான வாழ்க்கை எனப்படும். அத்தகைய நிறைவான வாழ்வை வாழந்து நிறைவடைவதே நம் பிறவியின் நோக்கம் என்பதை நினைவூட்டுவதற்கே இத்தகைய சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய சடங்குகள் மூலம் தம் பிறவியின் நோக்கத்தை உணர்ந்த தம்பதியர்கள், அதற்கான முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற் கொண்டு தூய வாழ்க்கையும், போதுமென்ற மனமும் கொண்டு புலன் இன்ப நாட்டத்தை தவிர்த்து, மன அடக்கமுடையவர்களாக தெய்வீக வாழ்க்கை வாழும் பொழுது இல்லறத்தில் இருந்து கொண்டே ஞானியர்களாக வாழும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அத்தகையவர்கள் தனக்குப் பின்னால் வரும் சந்ததியினர்களுக்கு ஒளியாகவும், வழியாவும் வாழ்ந்து காட்டி விட்டு அந்தப் பேரொளியில் ஐக்கியமாகி விடுகிறார்கள்....

ஓம்சிவாயநம...​

No comments:

Post a Comment