Wednesday, March 30, 2016

காசி, ராமேஸ்வரம் தரிசனம் களம்பூரில்!


தலவரலாறு :
காசி ராமேஸ்வரம் போக வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உள்ளதுதான். காசி, ராமேஸ்வரம் போக முடியவில்லையே என வருத்தப்படும் அனைவருக்கும் திருவண்ணாமலையிலேயே தரிசனம் தருகிறார் ஈசன்!
திருவண்ணாமலை அடுத்த களம்பூர் கிராமத்தில் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் குழந்தை பாக்கியம், சாபவிமோஷனம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
திருவண்ணாமலை அடுத்த களம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் திருக்கோயில். இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். 
இக்கோயிலில் சோழர் கால கட்டிடக் கலையைபோன்றே அமைந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகர பேரரசர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளதாம்,
காசி விஸ்வநாதர் மூலஸ்தானத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு உள்ளது. பொதுவாக சிவராத்திரியின்போது இரவில் சுவாமிக்கு 4 கால பூஜைதான் நடக்கும். இத்தலத்தில் ஆறுகால பூஜையை செய்து வருகிறார்கள். இக்கோயிலின் கர்ப்ப கிரக விமானம் சோழர் காலத்தில் கட்டப்பட்டதை நினைவு கூறம் வகையில் மகாமேரு வடிவை ஒத்து உயர்ந்து காணப்படுகிறது. இங்கு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் வளர்பிறை பிரதோசத்தின்போது உச்சிகாலத்தில் அம்பாளிடம் விசேஷ வழிபாடு செய்கிறார்கள். அப்போது அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நைவேத்தியமாக படைத்து வழி படுகிறார்கள். இவ்வாறு செய்து பலர் புத்திர பாக்கியம் பெற்றுள்ளதாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. காசி, ராமேஸ்வரம் தரிசனம்போல் மேற்கு நோக்கிய தலம் இது.
இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. கோவில் பிரகார வலத்தை துவங்கும்போது முதலாம் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சன்னதியும், கோஷ்ட தெய்வங்களாக, நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, பிரகார தெய்வங்களாக மகா கணபதி, சுப்பிரமணியர், சண்டிசர், பைரவர், சூரியர், நவகிரகங்கள் அமைந்துள்ளன.
சோமூதாபுரியை ஆண்ட பாணாசூரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்கி பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அப்போது களம்பூருக்கு வந்து, இந்த காசி விஸ்வநாதர் கோவிலில் லிங்கம் ஒன்றை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்போது அவருக்கு ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைத்தது, சாப விமோசனம் இவ்வாலயத்தில் பெற்றதை உணர்ந்தான் என்பது வரலாறு. இது பெண்களால் ஏற்படும் சாபம் போக்கு தலமாகவும் விளங்குகிறது.
விழாக்கள் :
மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், ஒன்பது நாட்கள் பிரமோற்சவமும், மாசி மகாசிவராத்திரி உற்சவம், ஆண்டு உற்சவங்கள்: நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், மாத உற்சவங்களாக பிரதோஷம் சிறப்புடன் நடக்கிறது.
ஆலயம் அமைவிடம் : திருவண்ணாமலையில் இருந்து போளூர் வழியாக ஆரணி செல்லும் அனைத்து பேருந்துகளும் களம்பூரில் நின்று செல்லும். ஆரணியில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் திருவண்ணாமலையிலிருந்து 43 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment