Thursday, March 31, 2016

ராணி மைந்தன் எழுதிய, 'சாவி - 85' நூலிலிருந்து:

படித்ததில் பிடித்தது 

ராணி மைந்தன் எழுதிய, 'சாவி - 85' நூலிலிருந்து: பின்னாளில் சாவி என்று அழைக்கப்பட்ட, விசுவநாதன், முதன் முதலாக சென்னை வந்தது, உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக! சின்னஞ் சிறு சிறுவனான அவனுக்கு, ஒரே த்ரில்! பவழக்காரத் தெருவில் உறவினர், வக்கீல் ராமச்சந்திர ஐயர் வீட்டில், பெற்றோருடன் தங்கினான். அவர், ஆனந்த விகடன் பழைய இதழ்களை, தம் பீரோவில், அடுக்கி பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அத்தனை விகடன் இதழ்களையும், படித்து விட வேண்டும் என்று விசுவநாதனுக்கு ஒரே துடிப்பு. வக்கீலிடம் தயக்கத்துடன் கேட்டான். 'கசக்காமல், அழுக்காக்காமல் படிக்க வேண்டும்...' என்ற நிபந்தனையோடு, இரண்டே இரண்டு விகடன் பிரதிகளை மட்டும் எடுத்துக் கொடுத்தார். அந்த இரண்டு இதழ்களையும் படித்து முடித்ததும், இன்னும் இரண்டு என்று எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தான்.
ஒருநாள், வக்கீல் மாமா அவனுக்கு நாலணா கொடுத்தார். மனதுக்குள் போராட்டம்; ஆசைகள் விசுவரூபமெடுத்தன. ஒன்று, போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அக்காலத்தில், நாலணாவுக்கு இரண்டு சின்ன சைஸ் போட்டோ எடுத்துக் கொடுப்பர். இன்னொன்று, அந்த ஆண்டு வெளியாகி இருந்த, விகடன் தீபாவளி மலரை வாங்கி படிக்க வேண்டும்.
போட்டோவா, விகடனா... நீண்ட நேர யோசனைக்குப் பின், விகடன் தீபாவளி மலரை வாங்குவது என்று முடிவு செய்து, நேராக விகடன் அலுவலகத்தை நோக்கி நடந்தான். செக்குமேடு போலீஸ் ஸ்டேஷன்; கினிமா சென்ட்ரல் வழியாக, தங்க சாலைத் தெருவை அடைந்தான். அப்போது விகடன் அலுவலகம், 244, தங்கசாலைத் தெருவில் இருந்தது. அது திண்ணையுடன் கூடிய சின்ன வீடு.
கூடத்தில், கம்போசிங் கேஸ்கள் இரண்டு; தூணுக்கும், சுவருக்கும் இடையே உள்ள சின்ன இடத்தில், குட்டி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார் அந்த கம்பீரமான மனிதர். நாலணாவை அவரிடம் தந்து, 'தீபாவளி மலர் வேணும்...' என்று கேட்டான். உள்ளே போய் தீபாவளி மலர் ஒன்றை எடுத்து வந்து, தூசி தட்டிக் கொடுத்தார் அந்த கம்பீர மனிதர். அவர்தான் எஸ்.எஸ்.வாசன் என்பது, அப்போது அவனுக்குத் தெரியாது; ஆனால், பிற்காலத்தில் தெரிந்து கொண்டான்.

No comments:

Post a Comment