Tuesday, December 16, 2014

த்ரேதாக்னி & ப்ரயாகை:

த்ரேதாக்னி & ப்ரயாகை:
ப்ரயாகை என்று இந்நகருக்கு எப்படி பெயர் வந்தது தெரியுமா? கங்கைக்கு மேற்கு, யமுனைக்கு வடக்கு, அக்ஷயவடம் என்ற இடத்திற்குக் கிழக்கு, இதற்கிடையேயுள்ள நகரம்தான் பிரயாகை. கிழக்கே ஆஹவனீயம், மேற்கே கார்ஹபத்யம், தெற்கே தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளைக் கொண்டு பிரம்மா இங்கு யாகம் செய்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான யாகம் அது. “ப்ர” என்றால் பெரிய என்று பொருள். பெரிய யாகம் “ப்ரயாகம்”. அது “ப்ரயாகை” ஆயிற்று.

ரிக்வேதத்தில் இதன் மகிமை:
பகீரதனின் முயற்சியால் கங்கை பூமிக்கு எழுந்தருளினாள். கங்கையின் கருணையால் பகீரதனின் பித்ருக்கள் மட்டுமா நற்கதி பெற்றார்கள்? அன்று முதல் இன்று வரை கங்கையின் கருணையாய் நற்கதி பெற்றவர்கள் எத்தனை பேரோ? சிவன் சிரஸிலிருந்து பெருகிய கங்கை, யமுனையுடன் சேரும் இத்திரிவேணி சங்கமத்தை பற்றி ரிக் வேதத்தில் சில “ரிக்கு”களை காணும் போது இந்த «க்ஷத்திரத்தின் மகிமையின் ச்லாக்யத்தை நாம் மேலும் உணர முடிகின்றது.

தக்ஷிண பிரதேசத்திலிருந்து செல்லுபவர்கள் நேராக அலஹாபாத் ரயிலடியில் இறங்கி பிரயாகையில் செய்ய வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு பிறகு காசி சென்றடைவது வழக்கம். நாங்கள் நேராக சென்னையிலிருந்து காசி சென்று விட்டோம். அங்கிருந்து கார் மூலம் பிரயாகை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காசியிலிருந்து கார் மூலம் சுமார் 3 மணி நேரம் பயணம் பிரயாகை.

பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கை மற்றும் யமுனை நதிகள் இரண்டு மட்டும் இங்கு நமது கண்களுக்கு தெரிகின்றது. மூன்றாவது நதியான சரஸ்வதி நம் கண்களுக்கு தெரிவதில்லை. அந்தர் வாஹினியாக அதாவது உள்ளோட்டமாக ஓடுகின்றது.

பிரயாகையில் ஆண்கள் க்ஷவரம் செய்து கொண்டு த்ரிவேணியில் நீராடி ஹிரண்ய ச்ராத்தம் செய்யவேண்டும் என்பது விதி. ப்ரயாகையில் முன்பே குறிப்பிட்ட மாதிரி தம்பதிகளாக வழிபாடு செய்வது உசிதம்.

கணவன், மனைவியின் தலையை வாரிப் ...:
இருவரும் சங்கமத்துக்குச் சென்று, பண்டாவின் உதவியுடன் திரிவேணிக்குப் பூஜை செய்ய வேண்டும். அங்கு மனைவி, தன் புருஷனை மாதவனாகக் கருதி அவனுக்குப் பூஜை செய்ய வேண்டும். புருஷன் தன் மனைவியை வேணியாகக் கருதிப் பூஜிப்பான். பின்னர் கணவன், மனைவியின் தலையை வாரிப் பின்னல் போட்டு, மலர் வைத்து, நுனி முடியில் இரண்டு அங்குலம் கத்தரித்து குங்குமம், சந்தனம், அட்சதையுடன் பண்டாவிடம் அளிக்க அவர் அதை நீரில் போட்டு விடுவார். நதியில் போடப்படும் கூந்தலை தவிற மற்றவையெல்லாம் மிதக்கின்றன. கூந்தல் விர்ரென்று நதியில் மூழ்கி அந்தர்த்யானமாகி விடுகின்றது.

திரிவேணி சங்கமம்:
வேணி என்றால் நதி, மூன்று நதிகள் கூடுவதால் திரிவேணி சங்கமம் ஆயிற்று. வேணி என்றால் தலைப் பின்னல் என்ற ஒரு பொருளும் உண்டு. தலைப் பின்னலில் இரண்டு கால்கள் வெளியே தெரியும். ஒரு கால் உள்ளே மறைந்து இருக்கும். அதைப் போன்று திரிவேணியில் கங்கையும் யமுனையும் வெளியே தெரிய, சரஸ்வதி உள்ளுக்குள்ளே இருக்கிறது.
த்ரிவேணி சங்கமத்தில் ஸ்நானம்: இது ஒரு புது அனுபவம் தான். படகுதுறையை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடனே நம் மனது தெய்வீக சக்தியை உணர ஆரம்பிக்கின்றது. படகில் ஏறியதும் காசியிலிருந்து எங்களுடன் அனுப்பி வைத்த நபர் மூலம் ஏற்பாடு செய்த பண்டாவும் நம்முடன் படகில் ஏறுகிறார். படகிலேயே சங்கல்பமும் செய்து வைக்க யமுனையில் படகு சென்றுக் கொண்டிருக்கின்றது.

சங்கமத்தில் ஸ்நானம்:
ஆண்களுக்கு வபனம் இங்கு விசேஷமாக சொல்லி யிருப்பதால் நாவிதனும் படகில் நம்முடன் பயணித்து நமக்கு உதவி புரிகிறார். அதற்குள் நதியில் சங்கமம் ஆகும் இடம் வந்து விடுகின்றது. படகுக்காரர்கள் சங்கமத்தருகில் படகை நிறுத்தி விடுகிறார்கள். சுற்றிலும் தண்ணீர். நமது படகு நிற்கும் இடத்தில் ஆழம் அதிகமில்லை. மண்தரை. அதில் நடப்பட்டிருக்கும் மூங்கில் கம்புகளில் படகுகள் நகராத வகையில் கட்டி விடுகிறார்கள். மூங்கில்களால் அங்கு ஜலத்தில் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. நாம் படகிலிருந்து இறங்கி அந்த மேடையில் நின்றுக் கொண்டு ஸ்நானம் செய்யலாம்.

சங்கமத்தில் ஸ்நானம் செய்து விட்டு படகில் ஏறி சற்று தூரம் சென்று கங்கை நீரை, நாம் முன்னதாக கையோடு எடுத்துச் சென்ற டின்களிலும், குடங்களிலும், கேன்களிலும் நிரப்பிக் கொள்ள படகு கரையை நோக்கி பயணமாகின்றது.
த்ரிவேணி ஸ்நானத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும் தாம் உடுத்தியிருந்த வேஷ்டி, புடவை, ரவிக்கையை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது ஐதீகம்.

கங்கை (சொம்பு) ஜலம் :
பூஜைக்காக நம் இல்லங்களுக்கு எடுத்துவரும் கங்கை ஜலம் இங்கிருந்துதான் எடுப்பது சம்பிரதாயம். காசியில் அல்ல. இங்கு எல்லாவிதமான அளவுகளிலும் சொம்புகள், பிளாஸ்டிக் கேன்கள் கிடைக்கின்றன. நாம் ஜலத்தை நதியிலிருந்து கொண்டு வந்து கொடுத்தால் கடைக்காரர்களே சீல் வைத்து தருகின்றனர்.

«க்ஷத்ர மகிமை: பிரயாகையின் மஹாத்மியம் என்று அழைக்கப்படும் இந்த «க்ஷத்ர வரலாறும் சுவாரசியமிக்கது. இதோ அதன் சுருக்கம்: பாரதப் போர் முடிந்த பிறகு வெற்றி கண்ட யதிஷ்டிரர் பாவ புண்ணியக் கணக்கு பார்க்கின்றார். எத்தனை படை வீரர்களைக் கொன்று குவித்து விட்டோம்? ரத்த சம்பந்தம் கொண்ட துரியோதனன் முதலானவர்களை ஒழித்து விட்டோம் என்று எண்ணும் பொழுது பாவம் மலையாக அவருக்கு தோன்றுகிறது. பாப விமோசனத்துக்கு மார்க்கண்டேயரிடம் உபாயம் கேட்கிறார். மார்க்கண்டேயர் வேள்வியினால் புனிதமடைந்த பிரயாகையைப் பற்றி கூறி, பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களும், தேவர்களும் அறிவில் சிறந்த முனிவர்களும் கூடி சாஸ்திர விசாரம் செய்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

பிரயாகைக்குத் தீர்த்த ராஜன் என்ற பெயரும் உண்டு. அங்கு சென்றால் அஞ்ஞானம் அனைத்தும் அகலும். பாவங்கள் அனைத்தும் விலகும். அங்கு உள்ள ஒவ்வோர் அடி மண்ணும் அஸ்வமேத யாகத்தின் பலனைத் தரும் என்று விளக்கியிருக்கிறார். அம்மண்ணை மிதித்து அஸ்வமேத யாக பலனை பெற்றது மட்டுமின்றி ராஜசூயம் போன்ற யாகங்களையும் செய்து யுதிஷ்டிரர் தர்ம ராஜராகி இருக்கிறார்.

மேலும் ஒரு சில விபரங்கள்:
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடி இந்தத் தலத்துக்குத் திரிவேணி என்ற பெயரையும் வாங்கித் தருகின்றன....

No comments:

Post a Comment