Sunday, November 16, 2014

' மனசு தான் மனிஷன். மனிதன் தான் மனது.

 தாத்தாவும்  பேரனும் 

''ஏன்  தாத்தா   வேதங்கள்  வேதங்கள் என்று  அடிக்கடி  சொல்றியே  அதெல்லாம்  என்ன  சொல்றது?''

'' நீ  எதை எதிர்பார்க்கிறாயோ  அதற்கு  தகுந்த  விடை சொல்றது.    ரிக் வேதம்  நல்ல எண்ணங்கள்  நாலா பக்கத்திலிருந்து நம்மை  தேடி வரட்டும்  என்கிறது''

'' தாத்தா  மனசு அலை பாய்கிறது.''  என்றால்  என்ன?''

'  மனசு தான் மனிஷன்.     மனிதன் தான்  மனது.  நமக்குள்ளே  கோடானுகோடி  எண்ணங்கள் கண  நேரத்தில் தோன்றி தோன்றி மறைகிறது. பிறகு  மற்றது கிளம்பி அதை மூடுகிறது. மூடப்பட்ட  எண்ணம்  மீண்டும் தலை தூக்குகிறது . முன்னுக்கு பின்னாக  என்னன்னவோ  சிந்தனைகள்  நம்மை  குழப்புகிறது.  இது தான்  அலை  பாய்வது.  மெரினா  பீச்சில்  பார்த்திருக்கிறாய் அல்லவா.  ஒரு அலை வந்துகொண்டே இருக்கும்,  திடீரென்று மற்றொரு பெரிய அலை  அதை விழுங்கும்.  அது அடங்குவதற்குள் மற்றொன்று.  ஒ  வென்ற  பேரிரைச்சல்.  நிம்மதி  தேடி  நாம்  பீச்சுக்கு  போவது நிம்மதியற்ற  மனதை கொஞ்சம்  ஆச்வாஸ படுத்த. ஒரு  ஓயாத  அலை மற்றொன்றை தடவிக்கொடுக்க!!!   முள்ளை  முள்ளால் எடுப்பது போல் இது.

மனதை அமைதிப்படுத்த  எண்ண  ஓட்டத்தை முதலில் குறைக்க வேண்டும்.  ஒரு பாதையில்  மந்தையை  ஒட்டி செல்லவேண்டும்.  மனதின் உள்ளே  சென்று  பார்க்க பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.  அதற்கு  வெளியுலக  கவர்ச்சிகளை நெருங்க விடாமல்  ஒதுக்கும் மனோ  திடம்  வேண்டும்.  தடையற்ற   ஒரே  சீரான  எண்ணத்தில் மனம்  மெதுவாக  போக  வைக்கவேண்டும்.   சிந்தனை சிதறினால்  தான்  அலை  பாய்கிறது.   சமுத்ரம்  அலைக்கு  சொந்தமில்லை.  அலைகள் தான்  சமுத்ரத்தை  சேர்ந்தவை. 

தாத்தா  ராமகிருஷ்ணர்  என்று  சொல்வியே  அவர் தான்  இதை  சொன்னதா?

''ரமணர்  சொன்னா  என்ன  ராமகிருஷ்ணர்  சொன்னா  என்னடா  கோபு? .  சொன்ன விஷயம்  தான்  உனக்கு  முக்கியம்.   பால் பாயசத்தை  வெள்ளி டம்ளரில்  குடித்தாலும் பிளாஸ்டிக்  கப் லே  குடித்தாலும்  பாயசம் தானே  நமக்கு  பிரதானம்.  
கடவுளை  நெருங்க வேண்டுமானால்,   தான் , நான்,   என்கிற  அகம் பாவம் நம்  மனதை விட்டு விலக வேண்டும்.  வீடு காலி ஆனா தானே  அடுத்த  ஆள்  உள்ளே  வந்து  வசிக்க முடியும் ?  

தாத்தா  எங்க  கமலா  டீச்சர் அடிக்கடி  சொல்வா.  உங்க  தாத்தா கூட  உக்கார்ந்து  நிறைய  தெரிஞ்சிக்கணும்  நேரம்  தான்  இல்லைன்னு.?

ஹஹா  ஹா 
 ஏன்  தாத்தா  சிரிக்கிறே?

நேரம்  இல்லை  நேரம் போதலே  என்று  அநேகம்  பேர்  சொல்வது  சிரிப்பைத் தருகிரதுடா.  இங்கே  வருவாரே சுப்ரமணிய  அய்யர்  அவர் கூட  அடிக்கடி சொல்வார்.  ''பகவன்  நாமா சொல்லிண்டே  இருக்கணும்  போறவழிக்கு  புண்யம்  ஆனால்  கொஞ்சம் கூட  நேரம்  இல்லையே   சார். அன்றாட  வேலையிலே  உழன்று  ஓடி ஆடவே  சரியா இருக்கே'' அப்படின்னு.

நாம்  முழு நேரத்தையும்  பயன் படுத்துவதில்லை. ஒவ்வொரு நாளும்  எவ்வளவு  நேரத்தை    பணம் தேடுவதிலும்,  மற்றவரைப் பற்றி  குறைவாக  பேசுவதிலும், நினைப்பதிலும்,  வம்பிலும், வெளி உலக  விவகாரங்களிலும்,  டிவி  ரேடியோவிலும்  பத்திரிகைகள்  படிப்பதிலும்,  டெலிபோனில்  ஊர்க்கதை  பேசியும்   செலவழிக்கிறோம்.   ஒரு சில  நிமிஷங்களையாவது  இறைவனைப்பற்றிய  சிந்தனையிலும்,  நடக்கும்போதும்  தனித்திருக்கும்போதும் பிரயாணம் செய்யும்போதும் ,  படுக்கையில்  தூக்கம் வரும்  முன்பும் எப்போவாவது   பகவானைப்  பற்றிய  நாமாவளி, தெரிந்த  ஸ்தோத்ரம்  அல்லது  வெறுமே  அவன்  பெயரையே  திரும்ப திரும்ப  '' ராமா,  கிருஷ்ணா   நமசிவா,  நாராயணா''  என்றாவது  நினைக்க தோன்றுகிறதா.  இது  போதுமே.  உணவு உண்ணும் முன்பும்  உண்ட  பின்பும்  கூட  அவனுக்கு  நன்றி  சொல்ல  ஒரு  கணம்  தானே  தேவை.  அது கூட  கிடைக்க வில்லை என்பது அபத்தம்   அல்லவா.

பட்டினத்தார்  சொன்னது ஞாபகமிருக்கிறதா?   காதறுந்த  ஊசியும்  கடைவழி  வரப்போவதில்லை. அந்த  கடவுள்  பெயர் ஒன்றே  தான்  நம்மோடு  ஒட்டிக்கொண்டிருக்கக் கூடியது. கடவுள்  பெயரே  நமக்கு  கடவுச்சீட்டு.( passport )

''இரு தாத்தா   நான்  போய் என்   நோட்டுலே  இதை  எழுதிக்கறேன். ''  தாத்தா   நாரயணீயம்  புத்தகத்தின்  பக்கத்தை  புரட்டினார்  

No comments:

Post a Comment