லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி.
சாம வேதத்திலே ஒரு இடத்தில் அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
அன்னாபிஷேகத்தன்று சிவனின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.
சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து
அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது
தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
கலைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து
விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக
கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ்
உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment