தெய்வத்தின் குரல்-மஹா பெரியவா
மநுஷ்யனாக பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை, அவற்றை பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.
மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தை தேடிக்கொண்டு போவதற்கு காரணம் அவன் உள்ளுக்குள், தானே ஆன்நத ஸ்வரூபமாக இருப்பது தான்.
இவன்உள்ளக்குள் ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்ததை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டிருக்கிறான். தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மாயையால் மறந்து விட்டிருக்கிறான்.
இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மஹா சமுத்திரம், மாதிரி இருக்கிறதென்றால் இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரி தான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தை தேடவே மாட்டான்.
பதவி, பணம், ஸ்திரி புருஷாள், கௌரவம், பப்ளிஷிட்டி, என்றப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு, ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும், சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரி தான்.
வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்கு குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்தத்தப்பு.
நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து, நமக்கு அந்நியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம்.
வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கி கொள்வது போல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்து கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. ஏதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்வஸ்துவின் சிறு துளிதானே வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்
No comments:
Post a Comment