பெரியவா சரணம்
ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த எச்.வி.ஆர்.ஐயங்கார் கலைமகள் தீபாவளி மலரில் தனது அனுபவங்களை எழுதுகிறார்.
அதில் கர்நாடக மாநிலத்தில் தனது சொந்தக் கிராமமான, மாலவல்லியில் அம்மனைத் தரிசித்த போது அந்தத் திருமுகத்தில் தனது தாயாரின் அன்பு ததும்பும் திருமுகத்தையே பார்த்ததாக எழுதுகிறார்.
பெரியவாளைத் தரிசனம் செய்ய அவர் போன போது, வணங்கி எழுந்ததும், “நீ உன் தாயாரைப் பற்றி எழுதிய கட்டுரையைப் பார்த்தேன். உன்னைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அதனால் தான் வரும்படி சொல்லி அனுப்பினேன்” என்று கூறினார் பெரியவா. ஐயங்காருக்கு வியப்பாக இருந்தது.
எவ்வளவோ சாஸ்திர வேதாந்த நூல்களைப் படித்து ஞானத்தின் கரை கண்டவர் , தன்னுடைய கட்டுரையையும் தீபாவளி மலரில் படித்துக் குறிப்பிட்டதைத் தெரிந்து கொண்டு, சற்றே அதிர்ச்சி அடைகிறார்.
மேலும் அவர் கூறுகிறார், “நான் ஏன் சுவாமிகளிடம் இப்படி உருகிப் போனேன்?” என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். அவருடைய பேச்சின் எளிமைதான் காரணம் என்று சொல்லுவதற்கில்லை. பலர் இதே போலப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அவர் உருவம் என்னை ஈர்த்தது என்று சொல்லுவதற்கில்லை. இன்றும் பலர் இதை விடக் கவர்ச்சியாகத் தோன்றி என்னை பிரமிக்க வைத்தது உண்டு. அவர் இருந்த சூழ்நிலையும் என்னைக் கவரவில்லை. அது மிக மிக எளிமையானது.
ஆனால் அவர் ஆண்டவனின் அருளைப் பெற்ற மகான் என்ற எண்ணம் என்னுள் எழுந்து என்னை பிரமிக்க வைத்தது. அதற்கு பின்புறமாக இருந்த மூலகாரணம் எது என்று என்னால் விவரிக்க முடியவில்லை.
“சுவாமிகளின் பக்கத்தில் மௌனமாக அமர்ந்திருந்தாலே போதும், அதுவே எனக்கு மிகுந்த மன அமைதியைத் தரும்.” என்ற எண்ணம் மட்டும் தரிசனம் முடிந்து திரும்பிய பின், பல நாட்களுக்கு என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது
No comments:
Post a Comment