'' சார், நீங்க வாழ்க்கையைப் பற்றி சொல்கிற விஷயங்கள் எளிதில் புரிகிறது. எனக்கு மேலும் நீங்கள் சில கருத்துகளை சொல்லுங்கள்.''
மணிகண்டன் ஒரு ஒய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். அவர் பேத்தி மணி மாலா (அவர்கள் வீட்டில் எல்லோருடைய பெயரும் ''மணி'' என்றே வரும்) தாத்தாவின் பேரன் கோபு வோடு ஒரே வகுப்பில் படிப்பவள் என்பதால் அவள் சொல்லி தான் மணிகண்டன் சார் தாத்தாவுடைய நண்பரானார்.
''எதைப்பற்றி நாம் சிந்திக்கலாம் சொல்லுங்கள்'' என்றார் தாத்தா.
''நீங்கள் எதை சொல்ல நினைக்கிறீர்களோ அதையே சொல்லுங்களேன்'' என்றார் மணிகண்டன்.
நான் ஒரு விஷயம் பற்றி இன்று படித்ததையே சொல்கிறேன். ரொம்ப தெளிவாக இருக்கிறது அது. அதாவது நமது வாழ்க்கையில் நாம் அடுத்த அத்தியாயத்திற்கு போகவேண்டுமானால் முதலில் திருப்பி திருப்பி முந்தையஅத்தியாயத்தையே படிப்பதிலிருந்து விடுபட வேண்டும்.
நான் பார்த்தவரை அநேகம் பேர் இன்னும் பழசிலிருந்து விடுபடவே இல்லை. பழைய வாழ்க்கையின் துன்பம், வெறுப்பு, கோபம், ஆத்திரம் அசூயை, வறுமை, அல்லது அந்த கால பெருமை, உத்தியோகம், பண பலம், அதிகாரம் இதிலேயே தான் இன்னும் இருக்கிறார்கள். நம்மை சுற்றி எல்லாமே மாறிவிட்ட போது நாம் மாறாமல் இருந்து என்ன பயன். இதால் அவர்களுக்கு வருத்தம், துக்கம், சோகம், கூடவே இருக்கிறது. பழசு நமக்கு பாடம் கற்க மட்டும் தான். அதற்காகத்தான் நமக்கு பழசு மட்டும் ஞாபகம் இருக்கிறது. வரப்போகும் எதிர்காலத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கிறோம். அது மட்டும் தெரிந்துவிட்டால், வரப்போகும் நிகழ்ச்சிகள் நம்மை பயமுறுத்தலாம், துன்புறுத்தலாம், கோபம் ஆத்திரம், துக்கம் கூடலாம். அது எல்லாமே நடந்து பழசாகட்டுமே பின்னால் அதிலிருந்து கிடைத்த அனுபவத்தை படிப்பினையாக எடுத்துக்கொள்வோமே. எதிரகாலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வோமே.
பழைய அனுபவத்தை ஒருவராலும் மாற்ற முடியாது. நடந்தது நடந்தது தான். அதிலேயே உழன்றால் நிம்மதி அமைதி கிடைக்கப்போவதில்லை. நிகழ் காலம் பாழாகிவிடும். உடல் நலம் கெட்டு விடும்.
ஒரு சம்பவத்தின் அதிர்ச்சியிலும், மன இருக்கத்திலும் இருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா. நடந்த அந்த சம்பவம், உண்டான பேச்சு, தோல்வி, சண்டை, துரதிர்ஷ்டம் , பண விரயம் இதையே திரும்ப திரும்ப என்ன பேச்சு பேசும்போதும் இடை இடையே சொல்வார்கள். உணர்ச்சி வசப்படுவார்கள். எண்ணம் இதால் வளர்வதில்லை. மனத்தின் மீது எந்த கண்காணிப்பும் இருப்பதில்லை. வருங்காலத்தை சந்தேகத்தோடும், பயத்தோடும், நம்பிக்கை இன்றியுமே சந்திக்கிறார்கள். இது கெடுதலை பயக்கக்கூடியது. எடுக்கும் முடிவுகள் தவறாக அமையும். ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் ஒருவரிடமும் பழக இயலாது. மனத்தின் இருக்கம் முகத்திலும் தெரியும். கண்கள் விரக்தியை காட்டும். உடல் நலம் சீர் குன்றும். முதுமை சீக்கிரமே அணுகும்.
''அமைதியே நீ தேவையில்லை, சந்தோஷமே நீ தூரப்போ, துன்பமே வா வா என்று யாராவது விரும்ப வேண்டுமா?''
'' சார் ரொம்ப சிம்பிள் ஆக சொல்லிவிட்டீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயம் இப்படித்தான் இருக்கிறோம். அதுவே பழக்கமாகாமல் தப்பிக்க முயற்சி செய்வோம். ''
யார் வாழ்க்கையில் தான் துன்பமோ துயரமோ இல்லை. அதையே நினைத்து வாடுவதால் பட்ட துன்பம் நீங்கப்போவதில்லையே. நம் கழுத்தில் நாமே ஏன் ஒரு துன்ப, துயரச் சங்கிலியை சுருக்கு மாட்டிக்கொண்டு தற்போதைய அமைதியான வாழ்க்கைக்கும் அந்த துன்பத்தின் சுமையை கொண்டுவரவேண்டும். இனி அத்தகைய துன்பமோ, துயரமோ, பழைய ஏமாற்றமோ வராமல், அணுகாமல் தடுக்க, எடுக்க வேண்டிய நம்மாலான முயற்சியை செய்வதற்கு அது படிப்பினையாக இருக்கட்டுமே என்றுதான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இப்படி யோசிப்பவன் தான் கெட்டிக்காரன்.
இதற்கு நாம் என்ன செய்யலாம் சார்.
ஒரு பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு, இதுவரை நம்மை சோதித்த, சிக்கலில் தள்ளிய, சமாச்சாரங்களை வரிசையாக ஒரு பட்டியல் போடுவோம். கடைசியில் பார்த்தால் நாமே ஆச்சர்யப்படுவோம். ஒரு சில விஷயங்களாகவே அவை இருக்கும். அடுத்தது இந்த சமாச்சாரங்களை தர வரிசைப்படுத்துவோம். நம்மால் உண்டானது. பிறரால் உண்டானது என்று. அடுத்தது இவற்றை எப்படி சமாளித்திருக்கலாம் என்று யோசனை ஒவ்வொன்றிற்கும் எதிரே எழுதுவோம். தவிர்க்க முடிந்தது எது முடியாதது எது என்று குறித்துக்கொள்வோம். தவிர்க்கமுடியாதது நம்மால் கட்டுப்படுத்த முடியாதது எவை என்பதை தனியே குறிப்போம். அவற்றைப் பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். மற்றவை தானாகவே விடுபட்டுவிடும். நம்மால் ஒதுக்க முடிந்தவை, கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தவை ஆகியவற்றை அலசினால் நடந்த பழைய விஷயங்களின் சக்தி குறையும். அவற்றின் பாதிப்பு அகலும். இனி அவை நேராமல் காக்க வழிமுறையும் தென்படும். ஏன் முன்னாலே நமக்கு இது தோன்றாமல் போயிற்று நம்மையே சோதித்துக்கொள்ளவும் வழி கிடைக்கும். இது தான் அனுபவத்தின் படிப்பினை.
''நாளை உங்களுடன் வந்து பேசலாமா. நிறைய விஷயங்கள் ஆலோசித்து பேச ஆவலாக இருக்கிறது என்று எழுந்தார் மணிகண்டன்.
No comments:
Post a Comment