Thursday, October 30, 2014

''ஒரு ராத்திரி''

            
       
''என்னடா  கோபு ரொம்ப  குதூகலமா  வரே?  என்ன  விஷயம்?

''உங்களுக்கு  ஒரு  பை நிறைய  பழம்  தந்திருக்காளாம்  எங்க  வாத்தியார்  மதன கோபால் அம்மா?''

''எனக்கேதுக்கடா  பழம்  எல்லாம்?  நானே  ஒரு  பழம்,  கிழம்   தானே?''

''நீ  சொன்ன   பள்ளிக்கூடம்  விஷயத்தை  வாத்தியார்  அவா  அம்மாகிட்ட  சொன்னதுக்கு   ரொம்ப  சந்தோஷப்பட்டாளாம் .   என்னாலே  முடிஞ்சுது  நம்ப  வீட்டு  கொய்யாபழம் தான்  என்று  அவர்கள்  வீட்டில்  
அந்த  அம்மா  30 வருஷத்துக்கு முன்னாலே  வச்ச  கொய்யா மரத்தின்  பழங்களை  பறிச்சு  கொடுத்திருக்கா.  இந்தா''

அந்த  அம்மா மேலே  உங்க வாத்யார்  எவ்வளவு  ஆசை வச்சிருக்கிறாரோ அதே போல்  பசங்க  நீங்கல்லாம்  கூட  அப்பா  அம்மா மேலே  ஆசையா இருக்கணும்.  அது  முதல்  கடமை. ''    பேரன்  கோபுவின் நண்பன்   ராமு  கூடவே  இருந்தவன்  ஏதோ  அவன் காதில்  சொல்வதை பார்த்த  தாத்தா   என்னடா  ஏதோ  குசு குசுன்னு  பேசறான் அவன்?''

''தாத்தா  இந்த  அம்மா  ஆசை  பத்தியும்   உங்க தாத்தா  ஏதாவது  ஒரு  கதை   சொல்லப்போறாரா'' என்று கேட்கிறான்.

''சரி  சொல்றேன்  அவனையும்  கேக்க சொல்லு''

''  உலகத்துலே  எந்த  கடனை  வேணுமானாலும்  திருப்பி கொடுத்துடலாம்.  அம்மாவுக்கு  அவள் நமக்கு செய்ததை  எத்தனை  கொடுத்தாலும் அந்த  கடன்  திருப்பி தந்தது  ஆகாது..

“கிட்டப்பா  ஒரே  புள்ளை. அவனை  ரொம்ப  கஷ்டப்பட்டு  வளர்த்து படிக்க வெச்சு  பெரிய  ஆளாக்கிட்டா  அவன்  அம்மா  மதுராம்பா?  அவளுக்கு  இப்போ  70வயசு.  தனியா  ஒரு  ஒட்டு  வீட்டிலே  இருந்தா.  அவன்  டில்லி  பாம்பே, கல்கத்தான்னு   சுத்திண்டே இருக்கிற பெரிய  கம்பனி  அதிகாரி. 

அப்பப்போ  டயம் கிடைச்சபோது   சில  மணி நேரங்கள்  அவளை  போய்  பார்த்துட்டு வருவான்.  ஏதாவது பணம்  வேணுமான்னு கேட்டா  வேனாம்னுடுவா.  

உனக்கு  என்னதான்  வேணும்  சொல்லேன்  செய்றேன்  அப்படின்னான்   ஒரு நாள்.

எனக்கென்னடா  வேணும்  உன்னைத்தவிர.  கொஞ்சம்  நாள்  என்னோடு  இரேன்  அப்படின்னா  அம்மா கிழவி. 

கிட்டப்பா  எப்பவாவது யோசிப்பான்.  இந்த அம்மாவால்  தானே  நான்  இன்னிக்கு  இவ்வளவு  பெரிய  உத்தியோகத்திலே  இருக்கேன்.  பாவம்  அவளுக்கு  எதாவது செய்யணும்னு  நினைப்பு  வரும்.  அதனாலே  தான்  கேட்டான்  அப்படி. 

எனக்கு  ஒன்னும்  வேண்டாம்ட  பையா.   எல்லா  அம்மாவுமே  இப்படித்தான்  பிள்ளை  என்ன  செய்யும்  என்று  எதிர்பார்த்து  ஆசையும்  பாசமும்  வைக்கிறதில்லே.   குருவிக்காரி,  பிச்சைக்காரியும்  பணக்காரியும்  ஒண்ணு  தான்  இந்த  ஒரு  விஷயத்திலே.  என்ன கொடுத்தாலும்  அம்மா  செய்த  கடமையை  திருப்பிக்கொடுக்கவே ஈடுகட்டவே  முடியாது  தெரிஞ்சுக்கோ''
அவனும்  விடாம  பார்க்கும்போதெல்லாம்   உனக்கு  என்ன செய்யட்டும்  என்றே  கேட்டுக்கொண்டிருப்பான்.

''  நீ  குழந்தையா  இருந்தபோது  என்னோடு  இருந்தே  அது  ஞாபகத்துக்கு  வருது.  அதே  மாதிரி  என்னோடு என் பக்கத்திலே  படுத்துக்கோ  இன்னிக்கு ஓரே  ஒரு  ராத்திரி மட்டும்''  என்றாள்  மதுராம்பாள்.

''ச்சே   இது தான்  உனக்கு  நான்  திருப்பித்தற நன்றியா. சரி  இன்னிக்கு  இங்கே  தான்  படுக்கை  ''  என்று  சிரித்துவிட்டு  அன்றிரவு  அவள்  வீட்டில்  தங்கினான்.  

அவனோ  பெரிய  5 நக்ஷத்ர ஹோட்டலில்  தாங்குபவன்.  அம்மாவோ  ஒரு  பெஞ்சில்  துணி விரித்து  படுப்பவள். எனினும் அன்றிரவு  அம்மாவோடு  பெஞ்சில்  அவள்  பக்கத்தில்  படுத்தான்.  ரொம்ப  அசதி.  படுத்த உடனே  தூங்கி விட்டான்.  அம்மா  எழுந்தாள்   ஒரு  பக்கெட்  தண்ணீர்  கொண்டுவந்து  அவன்  பக்கத்தில்  துணியில்  ஊற்றினாள் . தூக்கத்தில்  தண்ணீர்  மேலே படவே  ''ப்ச்'' என்று  தூக்கத்தில்  சொல்லியவாறே  நகர்ந்து  மறுபக்கம்  திரும்பி  ஓரமாக  படுத்தான். அந்த  பக்கத்திலும்  ஒரு
சொம்பு  தண்ணீர் ஊற்றினாள்.wஅடித்து போட்ட மாதிரி  தூகினவன்  மீண்டும்  இடது பக்கம்  திரும்ப  அங்கு  மீண்டும் படுக்கையில்  தண்ணீர் காத்திருந்தது.  மீண்டும்  எங்கு  திரும்பினாலும்  தண்ணீர் படுக்கை  அவனை  அரவணைக்க  தூக்கம் கெட்டுப்போய் ஈரமான  உடைகளோடு  படுக்கையில்  எழுந்து உட்கார்ந்தவன்  எதிரே  அம்மா  ஒரு செம்போடு  நிற்பதை பார்த்து விட்டான். 

பெரிய  அதிகாரி  அல்லவா?  எவ்வளவு  கோபம்  வரும் அவனுக்கு?  உனக்கு  அறிவிருக்கா, பைத்தியமா,   எதுக்கு  என்  தூக்கத்தை  கெடுக்கிறே?  இருக்கிற  சின்ன  படுக்கையையும்  ஈரம்  பண்ணிட்டேயே   எப்படி  படுக்கறது.  படுக்கணும்னு மட்டும்  சொல்லத் தெரியறது, வெக்கமாயில்லே?''

அவள்  சிரித்தாள்.  அவனுக்கு  ஒன்றும் புரியவில்லை.  அவளையே  பார்த்தான். அவள்  மெதுவாக  பதில்  சொன்னாள் .

''கிட்டப்பா,  எத்தனை  வருஷம், உன்னோடு  பக்கத்திலே  படுத்திண்டிருக்கேன்.  எத்தனை  ராத்திரி  படவா,  நீ  இருக்கிற  சின்ன  பாயையும் துணியையும்  ஈரம்  பண்ணியிருக்கே.  ஸ்ரத்தையா  நான்  எழுந்து  உன்   ஆடையெல்லாம்  கழட்டி  புதுசு  மாத்தி,  உன்னை  ஈரமில்லா  பக்கத்திலே  போட்டுண்டு  நான்  ஈரத்தில் படுத்துண்டு இருக்கேன்.  கொஞ்சமாவது  முணு  முணுத்திருப்பேனா,  அதுக்கு பதிலா  சந்தோஷமா  உனக்கு  முத்தம்  குடுத்திருக்கேண்டா.   நான்  செஞ்சதுக்கு  பதில் மரியாதை,  கடன் திருப்பி தரேன் என்கிறே,  ஒரு  ராத்திரி கூட  ஈரத்திலே  படுக்க முடியலேடா  உனக்கு? '

தாத்தா  நீங்க  சொன்ன  கதை ரொம்ப  மீனிங் கோட இருக்கு''  என்று  ராமு  அந்த கதையை  தனது  அம்மா கிட்ட  சொல்ல  ஓடினான்.  

கடவுளுக்கும்   அந்த  ஸ்வரூபத்தில்  இருக்கிற  அம்மாவுக்கும்   நாம்  செய்நன்றி கூற முடியாது.  பதிலுக்கு  நன்றியோடு  வணங்கலாம். மனம்   இனிக்கும். 

No comments:

Post a Comment