Monday, October 20, 2014

சனிப்பெயர்சிப்பலன்கள் - வேதா கோபாலன்-

சனிப்பெயர்சிப்பலன்கள்
- வேதா கோபாலன்-
சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குத் தனது பெட்டி படுக்கைகையுடன் நகர்கிறார். நவம்பர் 2 என்கிறது ஒரு பஞ்சாங்கம். அதெல்லாம் இல்லை டிசம்பரில்தான் என்கிறது மற்றொரு பஞ்சாங்கம். எப்படியானாலும் மிக நிதானப் போக்கு உள்ள சனி பகவான் போகப் போகத்தான் பலன் கொடுக்க ஆரம்பிப்பார். அடுத்து வரும் இரண்டரை வருடங்களுக்கு விருச்சிக ராசியில் இருப்பார்.

மேஷம்
இந்த பெயர்ச்சி அப்பிடி இப்பிடின்னு பலர் அட்வான்ஸா பயமுறுத்தியிருப்பாங்க. நம்பாதீங்க. நம்பவே நம்பாதீங்கள். ஆரோக்ய விஷத்தில் மிகச் சரியா இருந்துட்டா அப்புறம் மிஸ்டர் சனி நம்ம ஃப்ரெண்டுதான்! அலுவலகத்தில் சின்னசின்ன எறும்புக்கடி இருந்தாலும் சரியாகும். 2015 ல் எந்தப் பிரச்சினையுமே இருக்காது. திடீரென்று தான தர்மமெல்லாம் தூள் பறக்கும். இ மெயில் இன் பாக்ஸில் சர்க்கரைச் செய்தி வரப்போகுது. ஆடைகள் அணி மணிகள் அலங்காரப் பொருட்கள் எல்லாம் கடையிலிருந்து வீட்டுக்கு இடம் பெயரும். குழந்தைகள் பாராட்டு மழையில் நனையும்போது உங்களுக்கும் சந்தோஷ சாரல் அடிக்காதா என்ன! வேலை மாற அவசரப்படாதீங்க. வேளை வந்தால் எல்லாம் தானாக அதனதன் இடத்தில் சரியாக அமையும்.மம்மிக்கு வெகு நாட்கள் காத்திருந்த நன்மை மடியில் வந்து விழும். எப்பப்பார்த்தாலும் டாடி கூட சண்டை போடாதீங்க. அவங்களைவிட உங்களுக்கு நலம் நினைக்கறவங்க யாரு?
ரிஷபம்
சமயோசிதமும் சாதுர்யமும் உங்களைக் காப்பாற்றும். சின்னச் சின்னதாய்ப் பயணம் போவீங்க. நல்ல வார்த்தைகள் மட்டும் சொல்வதற்கு வாயைத் திறந்தால் போதும். திடீரென்று எதிர்பாராத இடத்திலிருந்து பொன்மகள் வருவாள். பொருள்கோடி தருவாள். கஜானாவை நிரப்புவாள். அம்மா பற்றிய வருத்தங்கள் உங்களுக்கு டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பும். அப்பா செல்லும் பயணம் வெற்றி மீது வெற்றி தரும். நண்பர்களுடன் நலமான உறவு அமையும். நண்பேங்க! கோபத்திற்குக் கொஞ்ச காலம் மெடிக்ல் லீவு கொடுத்து அனுப்பிடுங்க. கார் வாங்கறேன் ஸ்கூட்டர் வாங்கறேன்னு பறக்க வேண்டாம். காத்திருங்கள். காலம் கனியும். சோர்வு சோகம் எல்லாம் போயே போச். அப்படியும் புலம்பினால் அது கற்பனை பிரச்சினை! திருவாளர் சனி கருப்புக்கண்ணாடி கூடப் போடாமல் நேராய் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எந்த விஷயத்திலும் ஈடுபடுமுன் அது வம்பு என்ற ஊருக்க உங்களை இட்டுச் செல்லாமல் இருக்குமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். நாதஸ்வர ஒலி கேட்கிறது.
மிதுனம்
கணவன் மனைவி பிரச்சினை கடுகு சைஸில்தான் இருக்கு. அதை தர்பூசணி அளவுக்கு நினைச்சுப் புலம்பாதீங்க. புதுப் புது நண்பர்கள் கிடைக்கட்டும். அதற்காக உடல் பொருள் ஆவி மற்றும் கிரெடிட் கார்ட் எல்லாம் கொடுக்கத் தீர்மானிக்க வேண்டாம். முதலில் அவர்கள் நிஜமான நண்பர்கள்தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும் மனத் திருப்தியும் இரண்டு பக்கம் துணையிருக்க உங்களுக்கென்னங்க குறை! எனினும் ஒரு வேண்டுகோள். சகோதர சகோதரிகளிடம் வம்பு வழக்கு எதுவும் போடாமல் சரிக்கட்டிக் கொண்டு போகத்தான் வேண்டும். அப்பாடா. ஒரு வழியாய் அலுவலக டென்ஷனுக்கெல்லாம் முற்றும் போட்டு மங்களம் பாடியாச்சா? இனி நலமே விளையும். காதல் அது இது என்று மனம் அலைபாயத்தான் செய்யும். அது ஒன்றும் பாவ காரியம் இல்லைதான். எனினும் எதிர்கால விளைவுகளை நினைத்துப் பார்த்து எந்த செயலிலும் ஏணி வெச்சு இறங்குங்க. குளிர்விட்டுப் போக வேண்டாம்.
கடகம்
நண்பர்கள் பொன்னான நேரத்தில் சமயோசித உதவிகளை வாரி வழங்குவார்கள். நான்தான் சாதித்தேனா என்று நீங்களே கண்ணாடியைப் பார்த்து வியந்து கேட்பீர்கள். குழந்தைகள் கொஞ்சம் சுணக்கமாக இருந்தால் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். அடித்துக் கடித்து சாதிக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் சந்தோஷமும் சிரிப்பும் குறைவின்றி இருக்கும். மேலும் சில உயர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தஸ்த்து மேலும் உயரும். அப்பாவுக்கு திடீர் நிகழ்வுகள் நிகழும். அலுவலக சமாசாரம் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். நீங்கள் அவசரப்பட்டாலும் அது பாட்டு ஆமைக்கும் நத்தைக்கும் துணை போகும். குடும்பத்தினருக்கு நீங்கள் உழைப்பதுபோல் அவர்களும்தான் உங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது. குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு கிலுகிலுப்பை வாங்கும் வேளை வந்துவிட்டது. நிறையக் கோயில் விஸிட்கள் உண்டுங்க.
சிம்மம்
கணவரும் மனைவியும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். ஒருவர் சத்தம்போட்டால் மற்றவர் வாயையே திறக்கக்கூடாது. மம்மி உங்களுக்கு வழி காட்டுவாங்க. குழந்தைககள் தங்கள் காதலை வெளியிடுவார்கள். வானத்துக்கும் பூமிக்குத் குதிக்காதீர்கள். நீங்கள் தடுத்தாலும் நடக்குமே. என்னவெல்லாம் செய்தால் ஆரோக்யம் மேம்பணடமோ அதையெல்லாம் கட்டாயம் செய்யுங்க. மகிழ்ச்சி என்றால் ஸ்கேலில் அளப்பார்களா தராசில் அளப்பார்களா என்ற சந்தேகத்துடன் வளைய வந்த உங்களுக்கு இதன் பெபயர்தான் அதிருஷ்டம் என்று தெள்ளத் தெளிவாகத் தெரியும். மேடை நிகழ்ச்சிகள் செய்பவர்கள் புகழ்ப்படி ஏறுவார்கள். சகோதரர்களுக்கு உங்களால் மட்டுமன்றி உங்களுக்கு சகோதரர்களாலும் நன்மை உண்டுங்க. மம்மியைக் கருத்தும் கண்ணுமாகப் பார்த்துக்குங்க. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்று புலம்ப வேண்டாம். முன்பைவிட வாழ்க்கை சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செல்லும். எதையும் கவனத்துடன் சிரத்தையாக செய்யுங்க.
கன்னி
ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சியில் பகைவர்கள் வெள்ளைக் கொடி காட்டுவார்கள். முன்பு செய்த புண்ணிய காரியங்களுக்கான இனிப்பாக கனிகளை இப்போது பறிப்பீர்கள். வாழ்க்கை நிதானப் போக்குக்கு மாறும். நிதி நிலை முன்பு போல் இல்லையே என்று கவலை கொண்டவர்களின் மனம் நிம்மதியால் நிறைவதற்கு வேளை வந்துவிட்டது. விசிட்டிங் கார்டு வேறதாங்க அடிக்கணும். கம்பெனியோ, பதவியோ , அலுவலக முகவரியோ மாறியே தீரும். கவர்ச்சி அம்சம் உங்களுக்குக் கொஞ்சமா நஞ்சமா! அது இன்னொரு பத்து சதவீதம் கூடும். போனஸ்! கல்லாப் பெட்டியும் கஜானாவும் நிரம்பும். மம்மியை உங்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகச் சொல்லுங்க. வேறு வழியில்லை. நீங்க அட்ஜஸ்ட் செய்வீங்களா என்ன! ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் கடைசியில் ஜாக்பாட் அடிக்கும். கடலையும் மலைகளையும் கடந்து பயணம் உண்டு. உங்க கீழே வேலை பார்க்கறவங்க மட்டுமில்லாம உங்களோட மேலதிகாரிகளும் உங்களைப் பார்த்து நடுங்கறாங்க. கீப் இட் அப்.
துலாம்
சகோதரருக்கு / சகோதரிக்கு ஆறுதலா இருப்பீங்க. மனைவிக்கு/ கணவருக்கு மெகா நன்மை ஒண்ணு காத்துக்கிட்டிருக்கு. அப்பா காட்டில் மழைதான் போங்க.
நீங்கள் வாங்கியிருந்த பங்குகளின் விலை மட்டும் நிறைய உயரும். இதுதான் சமயம்.பேராசைப்படாமல் காசைப் பாருங்க. தங்கம் வாங்குவீங்க. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீங்க. செலவு அதிகரிக்கிறதே என்று புலம்ப வேண்டாம். வரவும்தான் உயரும். தொழிலில் மிகுந்த மேன்மை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த சீட் கிடைக்கலைன்னா உடனே தலையில் கை வெச்சு உட்கார்ந்துடாதீங்க. முயற்சியை மாற்றிப் பாருங்க. வேறுவித முயற்சியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். உங்கள் சுள்ளென்ன சூடான பேச்சினால் காயம் பட்டவர்களை நினைத்துப்பார்த்து உங்க போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. மனைவியின்/ கணவரின் புத்திசாலித்தனம் உங்களுக்கு சாதககமாகிப் பாராட்டு மழைதான். ஒரு லட்சம் ஒரு கோடின்னு ஏதாது கலந்துக்கிட்டால் வெறும் கையோடு திரும்ப மாட்டீங்க.
விருச்சிகம்
வாக்கில் இனிமை கூடும். நண்பர் வட்டாரத்தின் விட்டம் பெரிதாகும். மம்மி கிட்டேயிருந்து ஜாக்பாட் அடிக்கப் போறீங்க. ஆரோக்யம் கெடும் என்றால் அமிர்தத்தையும் விலக்குங்க. கல்விக்கு உதவுவதற்காகப் பணம் செலவு செய்வீங்க. கடன் அனுமதி கிடைப்பது பெரிதில்லை. அப்புறம் திருப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்க. பேச்சில் கவனம் என்றால் உங்க வீட்டு கவனம் எங்க வீட்டு கவனமெல்லாம் இல்லீங்க. மகா மெகா கவனம் தேவை. வெளியூர் வெளிநாடுன்னு காலில் சக்கரம் கட்டி சுற்றுவீங்க. காதல் என்ற வலையும் காத்திருக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாலினத்தினருடன் சண்டை போட வேண்டாம். குழந்தைகளால் டென்ஷன் ஏற்பட நீங்களே காரணமாக இருக்காதீங்க. அதாவது அவங்களை நீங்க டென்ஷன் பண்ணாதீங்க. அலுவலகத்தில் சின்னச் சின்னக் குழப்பங்கள் இருக்கத்தான். ஆடை அணிகள் உங்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கு ரொம்பவும் வேண்டியவர்களுக்கும் வாங்குவீங்க. பயணம் பயணம்னு நிறைய அலைச்சல்கள் இருக்கும். மகளுக்கு/ மகனுக்குத் திருமணம் வருமே? செய்யும். பெரிய முடிவுகள் இப்போதைக்கு வேண்டாம். நீங்க வெச்சதுதான் சட்டம்னு போயிக்கிட்டிருந்த இடங்களில் உங்கள் அதிகாரம் செல்லாமலும் போகலாம்.
தனுசு
வெளியூர் வெளிநாடு என்று வேலை பார்த்துக் கொண்டிர்நதவர்கள் தாய் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான முயற்சிகள் எடுக்க உகந்த சமயம் இது. வேலையில் திடீர்னு மாறுதல்கள் இருக்கும். ஆரோக்ய நலக் குறைவு ஏற்பட்டாலும் கூட அது பெரிய அளவில் கவலைப்படும்படியெல்லாம் இருக்காது. கதிகலங்கிப் போகவேண்டாம். மனைவிக்கு/ கணவருக்கு நன்மை உண்டு. காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுவாங்க. அலுவலகத்தில் உங்கள் சேவையைப் பாராட்டு விருது அல்லது வாழ்த்து கிடைக்கும். வேறு வேலை மாற இது உகந்த சமயம் இல்லை. பொறுமை என்னும் நகை அணிய வேண்டிய சமயம் இது. அணிந்து அழகு பாருங்க. மம்மி கூட மட்டும் தினம் தினம் சண்டை போடறீங்களே....அதென்ன குணம்? மாத்திக்கலாமே! லோன் மனு போட்டால் வங்கியைவிட்டு வெளியே வருவதற்குள் கிடைச்சுடும். புதுப் புது நண்பர்கள் கிடைப்பாங்க. பார்ட்டி விருந்துன்னு கலக்கல்தான். ஆரோக்யத்தை மட்டும் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்துக்கிட்டால் போதுங்க. மற்றபடி ஜாக்பாட்தான்.
மகரம்
சகோதரர்களின் ஷர்ட்டைப் பிடித்து சண்டை போட வேண்டாம். நாளைக்கு அவங்க கிட்ட பல் இளிக்க வேண்டி வரும். வாகன செலவுகளை எப்படி மீதம் பிடிக்கலாம்னு ஏதாவது பயிற்சி வகுப்புகள் இருந்தால் போகலாம். நண்பர்களை ஒரேயடியாக நம்பி ஏ டி எம் பின் நம்பரை சொல்லவும் வேண்டாம். அதற்காக பயந்துகொண்டு கதவுக்குப் பின்னால் நின்று வேவு பார்க்கவும் வேண்டாம். அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா பதற்றம் வேண்டாம். சின்ன பிரச்சனைதான். சீக்கிரம் சரியாகும். வண்டி வாங்கினால் எல்லா விதத்திலும் கவனமாக இருங்க. கொஞ்ச நாளைக்கு அதிக செலவு இருக்காது. பிறகு? பயணங்கள் நிறைய லாபம் மட்டுமின்றி நண்பர்களையும் தரப்போகுது. இதோ அதோ என்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த திருமணம், குழந்நப் பேறு, சொந்த வீடு என்று ஒவ்வொன்றாக போட்டி போட்டுக்கொண்டு உங்களுடன் வந்து அமையும். கணவன் மனைவிக்குள் சண்டை என்பது ஊர் உலகத்தில் இல்லாத விஷயமா என்ன? அதுக்கு ஏன் இத்தனை பயம்? பயம் வராத அளவுக்கு நடந்துக்குங்க. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் உதவி தானாகக் கிடைக்கும்.
கும்பம்
நண்பர்கள் நன்மைகள் அளிப்பாங்க. யார் கிட்டயும் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். கடமையைச் செய்து பலனை எதிர்பார்க்காமல் நடந்துகிட்டே இருங்க. கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டிய நேரத்தில் தானே கிடைக்கும். கணவருக்கு / மனைவிக்கு ஏற்படும் டென்ஷன்கள் 10 பர்சன்ட் என்றால் அவருக்குக் கிடைக்கப் போகும் லாபமும் நன்மைகளும் அதைப் போல் ஒன்பது பங்கு! மம்மிக்கு வந்திருக்கும் பிரச்சினை கடுகு சைஸ்தான். அதைப் போய் பூசணிக்காய் என்று நினைத்து நடுங்க வேண்டாம். சீக்கிரம் சரியாகும். அப்பா அலுவலக விஷயமாய் வெளிநாட்டுக்குப் போவார். அடிமாட்டு விலையில் கிடைக்குதுன்னு கார் கீர் வாங்கி வைக்காதீங்க. நன்மை நினைப்பவரைக் கலந்தாலோசித்துப் பிறக வாங்கலாமே. பயண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கணும். செக் லிஸ்ட் தயார் செய்ய ஆரம்பிக்கலாம். அரசாங்க வேலையாய் அலையோ அலைன்னு அலைஞ்சாலும் முடிவு சுபம்தான். தெனாலி மாதிரி பயமயம்னு நடுங்கித் தீர்க்காதீங்க. தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய்ப் படியிறங்குது. விடாதீங்க.
மீனம்
ஆரோக்யம் பற்றிய கவலையெல்லாம் தீர்ந்துவிடும். கவலைப்பட வேண்டிய கட்டத்தைத் தாண்டிவிட்டீங்க. வெளிநாட்டு வேலை கிடைக்கும். சீக்கிரமாய் ஒத்துக்குங்க. திருமணத்திற்கு நேரம் வந்துவிட்டாலும் சின்னச் சின்ன தடைகளும் சிறிய தாமதங்களும் இருக்கும். டென்ஷன் வேண்டாம். நடக்கும். நல்லதே நடக்கும். நல்லபடியாகவே நடக்கும். மாம்பழத்தைப் பறிக்கலாம். நிலாவைப் பறிக்க முடியுமா என்ன? குழந்தைகள் இப்போ பெரிய அளவில் ஆறுதலாய் இருப்பாங்க. அவர்களோட வெளிநாட்டுக் கனவெல்லாம் இனி நிஜம். வெல்டன். இந்த தைரியம்தான் உங்களோட மூன்றாவது கை. அதை வெச்சு மேலும் மேலும் உழையுங்க பார்ப்போம். அப்பாடான்னு சந்தோஷத்துல ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சுடாதீங்க. டாடியால் ஏற்படும் டென்ஷன்கள் ரொம்பவே தாற்காலிகம். நினைவில் வெச்சுக்குங்க. கடன்கள் அடையும். வாங்கியது கொடுத்தது ரெண்டுமேதான். கணவன் மனைவின்னா சண்டை போட்டுத்தான் நிரூபிக்கணுமா என்ன? வேணும்னா கிளம்பி இன்னொரு ஹனிமூன் போயிட்டு வாங்க.

No comments:

Post a Comment