Tuesday, October 21, 2014

பழைய நினைவு - தீபாவளி



எங்களுக்கு  தெரிந்த  பட்டாசு  ஓலை வெடி. சாட்டை என்று  நீளமாக  புசு  புசு  என்று   வெளிச்சமாக எரியும்.  யோசித்து   பாருங்கள்  எலெக்ட்ரிக்  லைட்   இல்லாத இருட்டில்  இந்த  வெள்ளை வெளேரென்ற  ஒளி   எவ்வளவு  சந்தோஷம்  தரும்  என்று. எலெக்ட்ரிக்  பட்டாசு  என்று  சிகப்பாக  திரியோடு  வரும்.  பாதி  வெடிக்காது.  மீதியில்  பதிக்கு  திரி தனியாக  கழண்டிருக்கும். மற்றும் சில  வெடிக்கும்போது  அந்த  அதிர்ச்சியில்  பிரிந்து போய் தனியே  குற்றுயிரும் குலையுயிருமாக  இருக்கும்.  கிட்டே போய்  கையிலெடுத்து முகத்தருகே  வைத்து  வாயால்  சில  பையன்கள் ஊதும்போது  புத்துயிர் பெற்று  கையிலோ  கீழே  விழுந்த  வாழ்க்கையில்   கடைசியாக வெடிக்கும். அதன் சத்தம்  ஒன்றும்  காதை செவிடுபடுத்தாது.   சிலருக்கு  தாங்கள்  வெடிப்பது  எதிர்  வீடு  பக்கத்து வீடுகளுக்கு  கேட்டாலே  ஜன்ம சாபல்யம்.   மாவலி என்று  ஒன்று  அந்த காலத்தில்  உண்டு.  கரித்தூள் கந்தகம்,  உமி,  உப்பு  த்தூள்  போன்றவற்றை  ஒரு  கொட்டாங் கச்சியில்  திணித்து,  அல்லது  பணம் பழ  காய்ந்த  ஓட்டில்  திணித்து,  அதன்  வாயை  ஒரு துணியால்  கட்டி  வஸ்த்ர காயம்  பண்ணி   அதன்  ஒரு  துளை வெளியே  தெரியும்படியாக    அதன் கழுத்தில்  ஒரு  கயிறைக் கட்டி.   அந்த  துளையில்  ஒரு  சிறு  தணல்  துண்டு  வைத்து    தலைக்கு மேலே   வேகமாக சுற்றுவார்கள்.  அது  காற்றில்  பற்றிக்கொண்டு  பட பட வென்று வெடிக்கும்   நெருப்புப்  பொறி பறக்கும்.  இது  தான்  வான வேடிக்கை.   இதை  லேசில்  செய்து தரமாட்டார்கள்  தெரு  லீடர்கள்.  கெஞ்சவேண்டும்.   அதிக  பட்சம்  நாலு  சுத்து  சுத்த அனுமதிப்பார்கள். இதை   கூட்டாக செய்வார்கள்.  ஒருவன்  கரித்தூள்,  ஒருவன்  காய்ந்த  பனை ஓலை,  ஒருவன்  தேங்காய்  மட்டை,  ஒருவன்  கந்தகம்.  ஒருவன்  உப்பு  போடி.  இதெல்லாம்   பக்குவமாக சேர்த்து   தயார்  செய்ய   சில  அனுபவசாலிகள்.  

கேப்  என்று  சிறு அட்டை டப்பா  குட்டி  குட்டியாக  வரும்.  அதில்  சிகப்பாக  நடுவில் கருப்பாக  கடுகு மாதிரி  புள்ளியாக  கந்தகம்  தெரியும்.  இதை  சுட  துப்பாக்கி  எல்லாம்  கிடையாது.  ஆளுக்கு  ஒரு  சுத்தியோ  கல்லோ வைத்து  நசுக்க வேண்டும்.  கேப்   ஈனஸ்வரத்தில்  வெடிக்கும். இதில்  பரம சந்தோஷம்.  மாத்திரை  மாதிரி  ஒன்று.  அதை தரையில்  வைத்து  கொளுத்தினால்  அதிலிருந்து  ஏதோ பொங்கி வரும்.  அதை  பாம்பு  என்பார்கள்.  வெளியே எல்லாவற்றையும்  தள்ளி விட்டு  அது  அணைந்து போகும். இது  ஒரு  வாணம்.  அதை கொளுத்திய  இடம்  கரை படிந்து  லேசில்  போகாது.  திட்டு  வாங்குவோம்.  மற்றொரு  எளிதில்  நிச்சயம்  கிடைக்கக்கூடிய  பட்டாசு   ஊசி  பட்டாசு    சிறிதான  எலெக்ட்ரிக்  பட்டாசு.  பாவம்.  பாதி  சாது.   சத்தமே போடாது.  பொசுங்கி  விடும்..  கம்பி  மத்தாப்பு  எல்லோருக்கும் எண்ணி  ஒரு  ஆளுக்கு  இத்தனை  என்று  சண்டை வராமல்  தருவாள்  அம்மா.   அதில் சில  வெறும்  வெளிச்சமாக  வெள்ளையாக  எரியும்.  சில  முசுடுகள்  பூப்பூவாக விட்டு  விட்டு சிதறிக்கொண்டு  எரியும்,  சில  சமயம்  வெடிக்கும். அது  செய்யும்  அக்கிரமத்தில்  சில  சமயம்  சட்டையில்  பொத்தல்  போட்டு விடும். புது சட்டையாச்சே  ஏன்  ஜாக்ரதையாக  இல்லை என்று  அதன் அக்கிரமத்துக்கு  பழி  ஏற்று  அடிவாங்கியதும்  உண்டு.    

 எல்லார் வீட்டிலும்   நிறைய  தின்பதற்கு  கொடுப்பார்கள்.  தீபாவளிக்கு  சில நாள்  முன்பே  பட்சணங்கள்  தயாராகிவிடும். முக்கால்வாசி  வீட்டில்  ரவா லட்டு.   வாயை  கெட்டியாக அமுக்கி  பிடித்துவிடும்.  உள்ளேயும்  போகாது  வெளியேயும்  வராது. தேன்குழல்.  ஓமப்பொடி.  மனோகரம். மைசூர்பாகு.  சில  வீட்டில்  அதிரசம்.  அபூர்வமாக   கடலை  உருண்டை. பாதுஷா.    75 வருஷங்கள்  நிறைய  சாப்பிட்டதை  நினைத்தால்  ஒரு  கடை  கொள்ளும் அளவு  இனிப்பு   உள்ளே போயிருக்கிறது.கிருஷ்ணன் கிருபையால்  கடைச்சரக்கு  ஒன்றும்   இதுவரை தீங்கு நேரவில்லை. 

சத்தார்  ஒரு மாதம்  முன்பு வந்து  அளவு  எடுத்துக்கொண்டு போனாலும்   தீபாவளிக்கு  ஒரு  சில  மணி நேரங்கள்  முன்புதான்  சட்டையையும்,  நிஜாரும் கொடுப்பார். யாருடையதாவது  எங்கள்   வீட்டுக்கு வந்து விடும்.  அதை  எடுத்துக்கொண்டு  அவர்  வீட்டுக்கு  ஓடினால்  இருக்க மாட்டார். அவர் மனைவி  கதீஜா  வீட்டுக்குள் சேர்க்க மாட்டாள்.  வாசலில்  கன்றுக்குட்டி  பக்கத்தில்  நின்று காத்திருப்போம்.  வந்தவுடன்  விஷயம் கேட்டு ஒன்றுமே  நடக்காதமாதிரி  ''அப்படியா   நாளைக்கு மதியம்  வா'' என்பார்.  ஐயய்யோ நாளைக்கு  தீபாவளிக்கு  அவசியம்  வேணும்  பாய்''  என்றால்  யோசிப்பார்.   நாலு  தெரு  தள்ளி  செட்டியார் வீட்டில்  போய்  பார்க்க சொல்வார்.  மாறிப்போயிருக்கும்  போய்  பார்  என்பார்.  செட்டியார்  பையன்  குண்டன்.  எனவே  அவன்  ''இது  எனுதில்லை'' என்று  நல்லவேளை  சட்டை  நிஜார்  திருப்பி கொடுப்பான்.  அவனது எங்கே  என்று  என்னை  கேட்பான்.   நாங்கள்  பாய்  வீட்டை  காட்டினால்  அங்கு  ஓடுவான். 

எங்கள்  அளவுக்கு  என்று  சட்டை நிஜார்  கிடையாது.  என்   மூத்த சகோதரன்  அளவில்  தான் 3 பேர்க்குமே . இது  என் தந்தையின்  கட்டளை.  நாங்கள்  வளர்பவர்கள்  எனவே  மூத்தவன் அளவுக்கு  தான் இளையவர்களுக்கும்  உடை.  நாங்கள்  வளர்வதற்குள்  பல முறை  போட்டு  அவற்றை  என்  அண்ணன்  அனுபவித்து  கிழித்து விடுவான்.  வெகு காலம்  என் அளவுக்கு  நான்  உடை  தரித்ததில்லை. எல்லோருமே மறுநாள்   பள்ளிக்கூடத்திற்கு  தீபாவளி சட்டையோடு, நிஜாரோடு  தான்  போவோம்.   எங்களுக்கு யூனிபார்ம்  எல்லாம்  கிடையாது.  வருஷத்துக்கு  ஒரு தடவை  புது  ஆடை  தீவுளிக்கு தீவுளி  ஜவுளி.  

விடிகாலையிலேயே  எழுந்து  கொல்லையில்  மாமரத்தடியில்  வெந்நீர்   தவலையில்  சுடச்சுட வெந்நீர் எடுத்து ஆளுக்கு  ஒரு  பக்கெட்.  பூஜை  அறை  என்று  ஒன்று இல்லை.  ஒரு  கப் போர்டு  மாதிரி  மூன்று  பலகை  சுவற்றில்  அடித்து  அதை  பூஜை  அறையாக  மாற்றி வைத்திருப்போம்.  அதன் எதிரே  விளக்கு.  பக்ஷணங்கள்..  புதிய  ஆடைகள் குங்குமம்  தடவி  புஷ்பம்  சார்த்தி ஒரு பலகை மேல்.   எதிரே  மணையில்  ஒவ்வொருவராக   அமர்ந்து   முன் தலை, பின் தலை  உச்சியில்  சற்று  சுட சுட  காய்ச்சிய  நல்லெண்ணெய் அம்மா  வைப்பாள். .  கையில்  கொஞ்சம்  இனிப்பு.  தின்று விட்டு  ஒரு  ஸ்லோகம்  சொல்லிவிட்டு  எழுந்திருந்து  பின் கட்டுக்கு  போய்  ஒவ்வொருவராக  கங்காஸ்நானம் பண்ணி.   மீண்டும் உள்ளே  வந்து அப்பா  அம்மாவுக்கு    நமஸ்காரம் பண்ணி விட்டு அவர்கள் நெற்றிக்கு இட்டுவிட்டு,  எடுத்து கொடுக்கும்  ஆடையோடு  சென்று அணிந்து கொண்டு  தெருவுக்கு  சென்று  எங்கள்  தீபாவளி  பட்டாசு வானம் (மேலே  சொன்னது)  வெடிப்போம்.   பிறகு  ஒவ்வொரு தெருவாக  சென்று வேடிக்கை.  பட்சன  வேட்டை.  கண்டிப்பாக  அம்மா  ஒவ்வொருவருக்கும்  தீபாவளி  மருந்து  கொடுத்து  கண்ணெதிரே  சாப்பிட சொல்வாள்   இல்லாவிட்டால்  நைசாக வெளியே  சென்று  வாயிலிருந்து துப்பிவிடுவோம்.   அவளுக்கு  தெரியும்.  கண்ட  கண்ட  பக்ஷணங்கள்  உள்ளே  போகப்போகிறது.  நிச்சயம்  ஜீரண மருந்து  அவசியம்  என்று.   இப்போது   டிவியில்  நிகழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டிருக்கும்  பெற்றோர்களுக்கு  இதற்கெல்லாம்  எங்கே  நேரம்?  

No comments:

Post a Comment