Wednesday, October 29, 2014

''பள்ளிக்கூடம்?''

   ''பள்ளிக்கூடம்?''

'' தாத்தா  நீ  ஒரு  நோட்டில்  எழுதி வைத்திருந்தாயே  ''பள்ளிக்கூடம்???''  என்று  ஏதோ ஒரு  வார்த்தை.   அதை  நேற்று  எங்கள்  டீச்சர்  மதனகோபால் பார்த்து விட்டு  உங்கள் தாத்தாவை  பார்க்க வேண்டும்  என்று சொன்னார்.  இப்போது வருவார்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மதனகோபால்  வந்துவிட்டார்.  தாத்தாவை  வணங்கி விட்டு  தீபாவளி  பக்ஷணங்கள்  கொடுத்தார்.  

சார்.  உங்கள்  பேரன்  கோபு  அடிக்கடி  நீங்க  சொல்றதை எல்லாம்  வகுப்பில்  வந்து  என்கிட்ட சொல்வான். நானும்  ரொம்ப ரசித்து  மற்ற  பிள்ளைகளுக்கு  பாடங்களுக்கு  நடு நடுவே  பொருத்தமாக  சொல்வது  அவர்களுக்கும்  விருப்பமாக இருக்கிறது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  வளருகிறது.

''ஏதோ  ''பள்ளிக்கூடம்?''  என்று  கேள்விக்குறியோடு  ஒரு  இடத்தில்  எழுதி வைத்திருக்கிறீர்களே  அது  என்ன  என்று யோசித்தேன்   புரியவில்லை.  உங்களையே  நேரில்  கேட்க  ஆவல். ''

தாத்தா  சிரித்தார்.   ஒன்றுமில்லை சார்.  நமது ஜன்மாவை  நினைத்து  அப்பப்போ  யோசிக்கும்போது தோன்றும் சில  விஷயங்களை  தான்  அப்படி  குறித்து வைத்தேன்.

''கொஞ்சம்  விவரமாக சொல்லுங்களேன்?''
தாத்தா  ஒரு  டம்பளர்  வெந்நீர்  குடித்து விட்டு  தொண்டையை கனைத்துக்கொண்டு  மெல்லிய  குரலில் சொன்னது: 

''இந்தா''  என்று நாம்  கேட்பதற்கு முன்பாகவே  கொடுக்கப்பட்டது  இந்த  உடம்பு.  அதாவது  நீங்க  தான்  சார்.  இதை  பாதுகாப்பாயோ,  கெடுத்துக்கொள்வாயோ  எல்லாம்,   உனது  புத்தி போனபடி தான்.  . கடைசி  வரை உன்னோடு நீ  விரும்பினாலும் இல்லாவிட்டாலும்  இருப்பது  இது. இதை  உன்னிடம்  காசு  வாங்காமல்  கொடுத்திருக்கிறான் ஒருவன்.

நீ  பாடம் கற்றுக்கொள்ள  பீஸ் வாங்காத  பள்ளிக்கூடம்  ஒன்றை வேறு கொடுத்திருக்கிறான் இந்த உடம்பைக்  கொடுத்த  கிருஷ்ணன். அந்த பள்ளிக்கூடம் எல்லோருக்கும்  இலவசமாக  எந்த  கட்டு திட்டமும்  இல்லாமல் அளித்திருக்கிறான்.  அந்த  பள்ளிக்கூடத்தின் பெயர்  ''வாழ்க்கை''.

இங்கே  மார்க்  கிடையாது.  தப்பு  சரி  என்று  எதுவும்  கிடையாது.  பாடங்கள் எங்கு நோக்கினும் நிறைய இருக்கும். வாத்தியார்  இல்லாத  இந்த பள்ளிக்கூடம்உன்னை  மாணவனாகவும்  நீயே  கற்றுணர்ந்த  வாத்யாராகவும்  உன்னை  வளரவைக்கும்.  ஒரு பாடத்தை  இவ்வளவு  வருஷம்  படிக்கவேண்டும்  என்ற  நிபந்தனை  இல்லை.  அதை புரிந்துகொண்டு  அடுத்த பாடத்திற் கு  நீ  தாயாராகும் வரை  அது  உன்னை விடாது. விழுந்து வாரி, முண்டியடித்து  வளரவேண்டியது  உன் பொறுப்பு. சோதனைகள்  நிறைய  அதில்  தேறுவதும் தேராததும்  திரும்ப  திரும்ப முயற்சிப்பதும்  உனது  கையில்.  இந்த  பாடத்தில்  தோல்வி கண்டவன்  வெற்றி அடைய  சந்தர்ப்பம் நிறைய  கொடுக்கப்படும்.

பாடம்  எல்லோருக்கும்  ஒரே மாதிரி  அல்ல.  ஒவ்வொருவரும்  வித விதமான  பாடம்  கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்ளும் வரை  பாடம்  திரும்ப  திரும்ப தயாராக  இருக்கும். கற்று முடித்தபின்  தான்  அடுத்த பாடம் எதிரே  வந்து நிற்கும்.

கற்றுக்கொண்ட  பாடம்  முடிவு  பெறாது.  இந்த  உடம்பு, அதாவது  நீ,  இருக்கும் வரை  பாடம்  வெவ்வேறாக  மாறி மாறி  வந்து கொண்டே இருக்கும்.  படித்த பாடம்  புதிது புதிதாக  மாறும்  அதிசயம் இந்த பள்ளிக்கூடத்தில் மட்டுமே.

உன்னோடு  பாடம்  படிக்கும்  ஒவ்வொருவரும் (மாணவரும்)  உனது   முகம்  காட்டும்  கண்ணாடி.  அவர்களையோ அவர்கள்  கற்றுக்கொண்ட  பாடத்தை பற்றியோ நீ  விமர்சிக்க  உனக்கு  அதிகாரம் இல்லை.  ஏன்  என்றால்  உன்னையே  நீ  விமர்சிப்பது  அது  என்று அல்லவோ  ஆகிவிடும்.  நீ  பார்ப்பது  முகம் கட்டும்  கண்ணாடி  என்றேனே.    நீ  அவர்கள்  என்று  நினைத்து உன்னையே  தான்  வேறு வேறு  ரூபத்தில்  பார்த்துக்கொள்கிறாய்.  எனவே  மற்றவர் படிப்பினை  உனக்கு  தான் முதலில்.


இந்த பள்ளிக்கூடத்தில்   உன்னை  பரிசோதனைக்  கூடத்தில்  விட்டிருக்கிறார்கள்.   நீ  எந்த  உபகரணத்தை  எடுத்து  என்ன பரிசோதனை  செய்கிறாயோ அதன்  விளைவு  எப்படி இருக்கவேண்டுமோ  அப்படி  அமையும்.  அதனால்  உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும்  உபகரணம்,  பொருள்கள் எல்லாவற்றையும்  உபயோகப்படுத்தும் முன்  அது பற்றி  யோசி. 

இந்த பள்ளிக்கூடத்தில்  கேட்கப்படும்  கேள்விகள்  எல்லாவற்றிற்கும்  விடைகள்  உங்களிடமே  தான்  சார் கொடுக்கப்பட்டிருக்கிறது. பதிலை யோசித்துவிட்டு  கேள்வியை  தொடுங்கள்.  இதில்  தேவை உங்கள்  கவனம், நம்பிக்கை, பொறுப்பு,  மனசாட்சி. 

ஒன்று  முக்யமாக  நினைவு கூற வேண்டும்.  இந்த பள்ளிக்கூடத்தில்  உங்களை  போடும்போது உங்களிடம் ஒரு முக்யமான  பொருள்  --  பேனா, பென்சில், பலகை,  போல --  கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதன்  பெயர்  புத்தி.  பென்சிலை கூறாக தீட்டிக்கொண்டு  தான்  எழுத உட்காருவோம்.  அதுபோல்  இந்த  புத்தியை  தீட்டி வைத்துக்கொண்டு,  இது பேனாவாக இருந்தால்  அதற்கு  தேவையான  மசி வேண்டுமே  அது போல் ஒரு மசியும் பள்ளிக்கூடத்திலேயே  நிறைய  வைக்கப்பட்டிருக்கிறது. அந்த  மாசியின் பெயர்  அறிவு,  ஞானம்.  அதை  புத்தியில்  நிரப்பிக்கொண்டு  பள்ளியில் பாடம் படித்தால், தேறினால்   தூர  நம்மை  கவனித்துக்கொண்டிருக்கும்  வாத்யார்  (கிருஷ்ணன்) நம்மை  அருகிலே  அழைத்துக்கொள்வார்.  அது தான்  பாடம் படித்த பிறகு  கிடைக்கும்  ப்ரமோஷன். ''

நாம்  எல்லோரும்  மதன  கோபால் தானே ? - யோசிப்போமா?       

No comments:

Post a Comment