Saturday, October 11, 2014

ஒரு ஆட்டின் கதை


கோபாலசாமி  சிலம்பம்  ஆடுவான்  தெம்மாங்கு  பாடுவான்.   ஊரிலே  எங்காவது  அம்மன் கோவிலில்  தீமிதி  விழா என்றால் புலி வேஷம்  போடுவான்.   பார்ப்பதற்கு  வாட்ட சட்டமாக இருப்பான்.   அவனுக்கு   3 நண்பர்கள்.  அவர்கள்  கோபாலசாமியை  இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து வானளாவி அவனை  உயரத்த  அவன்  அவர்களை  ஆத்ம நண்பர்களாக சேர்த்துக்கொண்டான்.  தனது வீட்டில்  அவர்கள்  வசிக்க  இடம் கொடுத்தான்.  பெண் கொடுத்து  உறவினர்களாக  ஆக்கிக்கொண்டுவிட்டான்.

கோபாலசாமி புகழ் அண்டை அசல்  கிராமங்களில்  பரவி  அவன்  பிரபலமாகிவிட்டான்.  கொட்டாம்பட்டி  தலைவர்  இறந்தவுடன்  அந்த  ஊர்  பஞ்சாயத்துக்கு  அவன்  தலைவன்  ஆகிவிட்டான்.  அவன்  நண்பர்கள்  பல கேசுகளில் நாட்டாமைபண்ணி  அவன்  பெயரில் நிறைய   புஞ்சை நஞ்சை  சேர்த்துவிட்டார்கள். தெரிந்தோ  தெரியாமலோ  கோபாலசாமி  இதெல்லாம்  கண்டுகொள்ளவில்லை.   சேர்வை ஆறுமுகம்  ஊரில்  மதிப்பு உடையவர்.  கோபால சாமியோடு  புலிவேஷம் போடுபவர் என்றாலும்  அவன்  மேல்  அரசல் புரசலாக  கொள்ளை அடிக்கிறான்  என்று கேள்விப்பட்டு  பிராது கொடுத்தார்.   கோபாலசாமி காதுக்கு  இது போனாலும்   என்ன பண்ணிடுவார்கள்   நம்மை இவர்கள்   என்று  நண்பர்கள்  உறவினர்கள்  கொடுத்த  தைர்யத்தில்  சும்மா இருந்துவிட்டான்.  

ஆடு திருடினது.  மாடு பிடிச்சது.  கிணற்றை  இடித்து  குடிசை  போட்டுக்கொண்டது  என்று பல  பிராதுகள்  கோபாலசாமி மீது  பதிவாகி   உள்ளூர் தாணாக்காரர்  மீசைக்கார முத்து  கோபாலசாமியை  பிடிக்க  வந்தார்.  கோபாலசாமி  டிமிக்கி  கொடுத்துவிட்டு எப்படியோ  நழுவி விட்டான்.  பத்து  பன்னிரண்டு  மாசம்  ஆகியும்  அவனை நெருங்க முடியவில்லை.  ஏதாவது  ஜனங்களுக்கு  கீரை  கொடுப்பான்,  வாய்க்கால்  தண்ணீரை  வெட்டி   வேறு  பல  வயல்களுக்கு  விடுவான்.  மாங்காய் தோட்டத்தில்  இருந்து  மூட்டை மூட்டையாக மாம்பழம்  எடுத்துவந்து   ரெண்டனா  பழத்தை  அரையணாவுக்கு  கொடுப்பான்.  இதெல்லாம்  ஜனங்களுக்கு பிடித்ததால்  தாணாக்காரர்  அவனை  நெருங்க முடியவில்லை.   அவனுக்கு  சப்போட்டு  ஜாஸ்தி. 

அவன் உறவினனோ நண்பனோ  ஒரு  கறுப்பாடு திருடிவிட்டான்.  அது  கோபாலசாமி வீட்டில் கட்டியிருப்பதை பார்த்து விட்ட  ஆட்டுக்காரன்  தாணாக்கார முத்து விடம்  போய்  அழுதான். மீசைக்கார முத்து  மதுரை ஆள்.  புதுசு.  ரொம்ப  கெடுபிடியானவன்.    இந்த தடவை  கோபாலசாமி மீது  ஆடு திருடிய   வழக்கு அயனாக  போட்டு  அவனை கெட்டியாக  இறுக்கிவிட்டான்  மீசைக்கார முத்து.   பஞ்சாயத்துக்கு  பல  மாசம் கேசு  போயும்  ஒன்னும்  இதுவரை  பண்ணலையே.  இதுலே  மட்டும்  என்ன  பண்ணமுடியும்  என்று  அசட்டையாக  இருந்த கோபாலசாமி  வகையாக  மாட்டிக்கொண்டான்.  வழக்கு  ரொம்ப  நாள்  இழுத்துக்கொண்டே  போனது.  ஆடு மட்டும்  தான்  பேசவில்லை.   மற்ற எல்லோரும்  பேசி  கோபாலசாமி ஆடு திருடியதை நிலை நாட்டிவிட்டார்கள்.  கோபாலசாமி உண்மையில்  ஆடு தேடவில்லை.  திருடவில்லை  ;என்றான்.  நண்பர்கள்  உறவினர்கள்  அவன் வீட்டில் அதை  கொண்டுவந்து  கட்டி  ரெண்டுநாளில்  அதை  சமையல் செய்து சாப்பிட உத்தேசம்  பண்ணினார்கள்.  அந்த பொல்லாத  ஆட்டின் அதிர்ஷ்டம் அதன் உயிர் கெட்டி.  அவனை  ஆடு திருடிய கள்ளனாக  திரு திருவென   விழிக்க வைத்துவிட்டது.  

எங்கேய்யா  ஆடு திருடினே?

நான்  எங்கேய்யா திருடினேன்?

பின்னே  உன் ஊட்டிலே  எப்படி  ஆடு  வந்தது.?

அதை  ஆட்டுக்கிடேயே கேளுங்க?

ஆடு எப்படிய்யா  பேசும்,  உன்  மச்சான்  கவுத்தை  அவுத்து  அதை  ஆட்டுக்காரன்  வீட்டிலேருந்து இட்டாந்ததை  4 பேர்  பாத்திருக்கான்களே''
...

உன் வீட்டிலே கொண்டாந்து கட்டினதையும்  பார்த்தாங்க.  நீ  பல்லு குத்திக்கிட்டு  காவாக்கரைலேருந்து  இதெல்லாம்  பாத்ததையும்  ரெண்டு  ஆளுங்க  பாத்திருக்காங்கய்யா. 

சரி  இப்ப  என்னா பண்ணனும்.?

ஆடு காசு, நஷ்ட  ஈடு,  விவகார செலவு  பஞ்சாயத்து பணம்  எல்லாம்  கட்டு.

எவ்வளோ? 

ஆயிரம்  ரூபா''.

அவளோ பணம்  என்கிட்டே  எது.  ஆடுக்கு  வேணா அம்பது நூறு  தரேன்.''

செனை ஆடு.  மூணு குட்டிங்க  கத்திக்கிட்டு வேறு இருக்கு.  தூக்க மில்லே  ஆட்டுக்காரன் வீட்லே.  சாமிக்கு வேண்டிக்கிட்டது எல்லாம்  வேறு  இருக்கு.''

''இதோ பார்  கோபாலசாமி நீ  பண்ணது தப்புன்னு  உனக்கு தெரியும்.இது வரை  தப்பிச்சுக்கிட்டே. இதுலே  முடியாது.  உன் ஆளுங்க தப்பு பண்றாங்கன்னு உனக்கு  தெரியும்.  தெரியாட்டி கூட  எல்லோரும்  சொல்றது உன் காதிலே  உழுவலியா?  உன்னை  வச்சி குளிர் காயரானுங்க.  அவனுங்களோடு  நீயும்  டவுன் போலிசுக்கு போய்  களி  துண்ணப்போறே.  நீ  கீரை,  மாம்பழம்  தண்ணி  எல்லாம்  குடுத்தே  யார் இல்லன்னது.  அதுக்காக ஆட்டுக்காரன்  உட்டுடுவானா?''.

கோபாலசாமி டவுனுக்கு  உறவினர்களோடு  கூட்டிப்போகபட்டான்.

No comments:

Post a Comment