அடே கோபு என்னடா அங்கே ரொம்ப சத்தம்?''
பக்கத்து வீட்டு சாமா மாமாவுக்கும் அவர் பிள்ளை கிட்டாவுக்கும் பெரிய சண்டை. மாமி வேறே ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி வையறா யாரும் அடங்கலை. நீங்க போய் சமாதனம் பண்றேளா?''
சமாதானம் அடையவேண்டியவர்களே புரிந்து கொண்டால் தான் சச்சரவு அடங்கும். நடுவிலே வருபவர்கள் போகிறவர்களுக்கு இதில் எந்த அதிகாரமோ உரிமையோ கிடையாதுடா கோபு .''
என்ன தாத்தா சொல்கிறீர்கள். விளக்குங்கள்.
சண்டை சச்சரவு என்பதே ரெண்டு பக்கமும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் தான் உண்டாகிறது. தங்கள் கருத்துகளை, சொல்ல வந்ததை தெளிவாக மற்றவரை உறுத்தாமல் சொல்ல தெரியவில்லை என்று அர்த்தம்.
பேசுவதை முதலில் அமைதியாக குரல் உயர்த்தாமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ வீணாக்கும் சக்தியை எதிர்ப்பவன் அனுகூலமாக எடுத்துக்கொள்வான். மெதுவாக அமைதியாக சொல்லும்போது எதிராளி நீ அவனுக்கு எதிரி இல்லை என்ற எண்ணம் விழும். அதுவே உனக்கு நீ உணர்த்தும் கருத்துகளை நிதானமாக அழுத்தம் திருத்தமாக எடுத்து அறிவுறுத்த சாதகமாகும். அப்படி உணர்ச்சி வசப்பட்டாலும் உன்னுடைய மானம் மரியாதை இவற்றை விட்டுக்கொடுக்காமல் உனக்கே உரித்தான சுய கௌரவத்தோடு உன் வாதத்தை முன் வைக்க வேண்டும். குரல் ஒரே சீராக உயராமல் இருப்பது அவசியம். வேகம் விவேகம் அல்ல. கை காலை எல்லாம் ஆட்டி அசைத்து உன் பேச்சு தேவையல்ல. பேசும் வார்த்தைகளும் அளவோடு இருக்கவேண்டும். உன்னுடைய உடல் அசைவுகளிலிருந்து மற்றவனுக்கு நீ ஆழமான அழுத்தமான தீர்மானமான கருத்துகளோடு வந்திருக்கிறாய் என்று புரிபடும். சண்டைக்கோழி அல்ல என்று புரிந்து கொள்வான்.
பேசும்போது யாரையும் தூக்கி எறிந்து பேசாதே. வார்த்தைகளால் சுடுவது தவறு. கோபமாக இருக்கும்போது யாருமே நிலை தடுமாறுவது வழக்கமாக நிகழ்வது தான். இதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். எதிராளி சாதாரணமாக சொல்லும் வார்த்தைகள் கூட தப்பர்த்தமாக தோன்றும். மறைமுகமாக தம்மை இகழ்வது போல் தோன்றும். இது இயற்கை.
ஒருவர் பேசும்போது குறுக்கிடக்கூடாது. அவர் சொல்வதை கவனிக்க வேண்டும். எதிர்க்க வேண்டாம். சொல்லும் உரிமை அவருக்கும் இருக்கிறதே. அவர் சொல்வதை ஆமோதிக்கவேண்டும் என்று அவசியமில்லை. அவர் மனதிற்குள் நீ புகுந்து அவர் கருத்துகளை மாற்ற உனக்கு அதிகாரம் இல்லை. முடியவும் முடியாது. எதிர்ப்பு அனாவசியம். எதிரான கருத்துகளை அமைதியாக அறிவிக்கலாம். அவமரியாதைப் படவோ, படுத்தவோ எந்த முகாந்திரமும் இல்லை.
பேச்சில் நிதானத்தை விட நியாயம், நேர்மை, தக்க ஆதாரம் இருக்க வேண்டும். இந்த பேச்சு சம்வாதத்தில் முடிவு நமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டாம். முடிவு நாம் எதிர்பார்ப்பதாக இல்லாமலும் இருக்கலாம். நாம் நினைத்ததே சாதிக்கலாம் என்பது குதிரைக்கொம்பு. அதை எதிர் நோக்கி நீண்ட கால வாத பிரதிவாதம் பிரயோசனமற்றது.
சில சமயங்களில் எதிராளி கொஞ்சமும் புரிந்து கொள்ள சக்தியற்ற, பிடிவாத, கீழ்த்தர உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்த கூடியவராக இருக்க நேரிட்டால், பேச்சை தொடர்வதில் காரணமில்லை. பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
டெலிபோனில் பேசுவதை விட நேரில் பேசுவது பல சமயங்களில் பயனுள்ளதாகும். கீழ் சிப்பந்திகளோடு பிணக்கு என்றால் அவர்களுடைய அதிகாரிகளோடு பேசுவது சமயோசிதம்.
வாதத்திற்கு முன் உன்னுடைய தரப்பில் என்ன குற்றம் குறை இருக்கிறது என்று அலசு. அவற்றை சரி செய்துகொண்டு பிறகு எதிராளியின் வழக்கை அலசு. முழுமையாக புரிந்து கொள்ளாமல் இரு பக்கங்களும் மோதுவது சர்ச்சை தீர வழி காட்டாது. மறைத்து பேசுவது வெற்றி அளிக்காது. வெற்றி நமக்கே என்பது எதிர்பார்க்க முடியாதது. தோல்வியை ஏற்கும் மனப்பக்குவமும் அவசியம்
இதெல்லாம் தான் நமது நீதிமன்றங்களில் பின்பற்றுகிறார்களா தாத்தா?''
அடே பேரா, இதெல்லாம் நியாயமாக நடந்தால் நீதி மன்றம் எதற்கு அப்பனே? . பல யுகங்களாக வழக்குகள் ஒவ்வொரு கட்சியும் தனது கருத்துகளை தவறாக பொய்யாக, ஜோடித்து, நீதிக்கு புறம்பாக, சாமர்த்திய பேச்சுகளால், எதிராளியை தவறாக எடை போடுவதால், பண பலத்தால் விலை பேசுவதால், வழக்கறிஞர்களின் பேசும் திறமையை நம்பி என்றெல்லாம் இழுத்துக்கொண்டு போகிறது என்று அறிகிறோம். தவறுகளை ஏற்றுக்கொள்ள தைர்யம், மனோ திடம், பொறுமை, பெருமை இல்லை . முள்ளாலே தீரவேண்டியது கோடாலியால் வெட்டப்பட்டு சேதம் அதிகமாகிறது.
No comments:
Post a Comment