Wednesday, September 17, 2014

"நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்"

எப்போது நினைத்தாலும் என் கண்களில் நீர் வருவதை தடுக்க முடியாது. எங்கள் பரம்பரையில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை திருவரங்கனுக்குத்தான் அவர்தான் எங்கள் பரம்பரை குடிபாட்டு தெய்வமாம் (என் தந்தை என்னிடம் கூறியது) குடிபாட்டு தெய்வம் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கவும்).
2001 ம் வருடம் எனக்கு அப்பொ மாத சம்பளம் ரூ.950/- மட்டுமே.நான் என் வறுமையின் பிடியில் சிறுக சேர்த்து ரூ.400/- வைத்து இருந்தேன், வருடம் ஒரு முறையாவது அரங்கனை தரிசித்து விடுவது வழக்கமான குடும்ப நடைமுறை, நான், என் மனைவி, என் 1 1/2 வயது பெண் குழந்தையுடன் கரூரில் இருந்து பஸ்ஸில் அதிகாலை 3.30க்கு கிளம்பினோம் என் சட்டையில் பாக்கெட் இல்லாததால் (கோவிலுக்கு செல்லும் போது வேஸ்டி அணிவது என் வழக்கம்) என் மனைவி ரூ.400/- வைத்து இருந்தார் அதை தவிர எந்த ஒரு பைசாவும் என்னிடம் இல்லை. வழக்கம் போல 80% பெண்களை போல பணத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து இருந்தார் 6 மணியளவில் அம்மா மண்டபத்தை அடைந்து காவேரில் குளிக்க தயார் ஆனோம்.
என் மனைவி பணம் நாங்கள் குளிக்க தயாரான இடத்தில் விழுந்து விட்டது, எங்கள் உடமைகளையும் அங்கேயே வைத்து விட்டு என் மனைவியை உடமைகளை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, நான் குளித்து விட்டு வந்து என் மனைவியை குளிக்க போக சொன்னேன். இதற்கிடையில் ஒரு பணக்கார குடும்பம் (கழுத்து ஃபுல்லா நகை, 10 விரலும் மோதிரம், உயர் ரக ஆடைகள் , சொகுஸு கார் இதெல்லாம் இருந்தா பணக்கார குடும்பம் தானே) நான் நிற்கும் இடத்திற்கு அருகில் தங்கள் உடைமைகளை வைத்தனர் அவர்களில் ஒருவர் தன் சட்டயை கழற்றி என் காலடியில் போட்டார், அவர் மனைவி "என்னங்க ஈரத்துல சட்டய போடுறிங்க என்றார்".
அதற்கு அவர் கொஞ்சம் சும்மா இருடி என்று அதட்டியாவாறு கிழே குனிந்து சட்டயை எடுத்து சுருட்டி மடித்தார். இதற்குள் என் மனைவி குளித்து விட்டு வந்து பணத்தை காணவில்லை என்றார். என் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது வேறு பணம் இல்லை,கோவிலுக்கு போக வேண்டும் தேங்காய் பழதட்டு வாங்க வேண்டும், துளசி தாமரை வாங்க வேணும், முக்கியமாக கரூர் திரும்ப வேணும், 80 கிலோ மீட்டர் கையில் குழந்தை வேறு என்ன செய்வேன்.
"என் அரங்கா, பச்சை மாமலைபோல் மேணியனே என் குழந்தைக்கு பசிக்குமே அதற்கு பால் வாங்க கூட என்னிடம் பணம் இல்லையே ஆயர் பாடி கோபாலா, என்று என் உள்ளம் கதறியது, என் மனைவி ரங்கா ரங்கா என்று கதறினாள் என் குழந்தை மட்டும் சிரித்தது அப்போதுதான் கவனித்தேன் எங்களிடம் இருந்த ஒரே நகை என் குழந்தையின் கால் கொலுசு என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் ஆறுதல் சொன்னேன் இந்த கொலுசை எங்காவது விற்று விட்டு அரங்கனை தரிசிப்போம் என்றேன். என் மனைவி சொன்னார் "அப்பாடா அப்போ சாமிய பார்த்துடலாம்" அவரை பொருத்தவரை சாமிய வெரும் கையுடன் பார்க்க முடியாதே என்ற கவலை மட்டுமே.
வாழ்க்கை முழுவதும் உணவளிப்பவருக்கு ஒரு தேங்காய் கூட உடைக்க முடியாதே என்ற கவலை மட்டுமே, இதற்கிடையில் என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் குளிக்க சென்று இருந்தார், அரங்கனின் ஆணைப்படி காவேரி அன்னை அவரின் 2 விரல்களில் இருந்த 2 பவுன் மோதிரங்களை தன்னுடன் எடுத்து கொண்டாள், நாங்கள் ஆடை மாற்றி கிளம்பிய போது, என் காலுக்கு அடியில் ஈரத்தில் சட்டை போட்டவர் மனைவி ஓடி வந்து இதுவரை நீங்கள் அழுததை பார்த்தேன் இந்தாங்க உங்க பணம் என் கணவர்தான் சட்டய போட்டு எடுத்தார் இதற்கு பதிலாக 2 பவுன் மோதிரம் தண்ணில போச்சு என்றார் உங்க பணத்தை எடுத்ததுக்கு நீங்க சாமிகிட்ட சொல்லி மண்ணிக்க சொல்லிடுங்க 2 பவுனோட போகட்டும் பெரிசா எதுவும் ஆகிட போகுது என்றார்.நாங்கள் அரங்கனை தரிசித்து அவருக்காக மன்னிப்பு வேண்டி ஊருக்கு நல்ல முறையில் வந்து சேர்ந்தோம். "நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம்"

No comments:

Post a Comment