1931-ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அந்த சமயம் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயரின் அரசு கொடுமை மிகுந்ததாக இருந்தது. காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
இந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தால் சர்க்காரின் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று மக்கள் பயந்து கொண்டிருந்தார்கள். பொதுமக்கள், வியாபாரிகள், மக்கள் எல்லோரும் காங்கிரஸ்காரர்களைக் கண்டு நடுங்கிப் போன சமயம்.
காஞ்சி மஹானுக்கு அப்போது வயது 37. வட ஆற்காட்டில் இருக்கும் ஆரணி நகரில் முகாமிட்டிருந்தார். பக்தர்களோடு பக்தர்களாக சில காங்கிரஸ் தொண்டர்களும் அங்கே இருந்தனர். அவர்களுக்கு மஹானைச் சந்தித்துப் பேசவும் அருளுரையைக் கேட்கவும் விருப்பம்.
ஆனால் மஹானின் அருகில் மிகவும் நெருங்கி நின்ற மடத்தின் ஊழியர்கள் காங்கிரஸ்காரர்களைக் கண்டு முகம் சுளித்ததோடு அவர்களுக்குப் பேட்டி கொடுத்தாலோ அவர்களிடம் பேசினாலோ தகவல் அறியும் ஆங்கிலேயர்களின் அரசு மூலம் மடத்திற்குத் தொல்லை வரும் என்று மஹானின் காதில் போட்டு வைத்தனர். இதைக் கேட்ட மஹான் முகத்தில் எவ்விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல்,
“அவர்கள் அத்தனை பேரையும் இங்கே வரச் சொல். அவர்கள் எல்லோருக்கும் மடத்தில் சாப்பாட்டுக்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று மெதுவான குரலில் மடத்து ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார்.
மடத்து ஊழியர்கள் பயத்தோடு மஹான் இட்ட கட்டளையை சிரமேற்தாங்கிப் பணியாற்றினார்கள். இதனால் மடத்துக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. மடத்தின் மேனேஜர் மகிழ்ச்சியோடு இதை மஹானிடம் வெளிப்படுத்த மஹான் அவரை ஏறிட்டுப் பார்த்த பிறகு சொன்னார்:
“நம்மைப் பார்க்க வரணும் என்ற விருப்பம் இருக்கிறவாளை என்னவாகுமோ ஏதாகுமோன்னு கதவைச் சாத்திண்டுட்டா, ‘ஜகத்குரு’ன்னு பட்டத்தைப் போட்டுண்டு இந்த பீடத்திலே நான் உட்காரத்துக்கு அர்த்தமே இல்லை”.
அவன் நண்பனாக இருந்தால் என்ன, விரோதியாக இருந்தால் என்ன, மடத்திற்குள் வந்துவிட்டால் எல்லோரும் மஹானின் பக்தர்களே.
No comments:
Post a Comment