மஹானை எப்போதுமே பார்த்தும் கேட்டும் இராத ஒரு பரம பக்தனுக்கு அந்த மனிததெய்வம் அருளிய ஒரு அதிசய சம்பவம்.
விழுப்புரம் பக்கத்தில் ஒரு கிராமம். அங்கே ஒரு நரிக்குறவன். தன் குடும்பத்தில் நீடித்து நிலைத்த தீராத பிரச்னையால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்து விட்டான். தன் ஊர் பக்கம் போகும் ரயிலின் முன் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வது என்கிற எண்ணத்தில் ரயிலின் வரவை எதிர்நோக்கி ஸ்டேஷன் ஓரத்தில் படுத்திருந்தான்.
அப்படியே தூங்கிப் போனவன் கனவில் ஒரு சாமியார் போன்று அவனுக்குத் தெரிந்தது.
“நீ சாக வேண்டாம். என்னை வந்து பார்” என்று அந்த உருவம் சொல்வது போல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்த அவன் மனதில் புத்துணர்ச்சி. தற்கொலை எண்ணத்தை அப்போதே விட்டு விட்டு அங்கிருந்து அகன்றான்.
தன் கனவில் காட்சி தந்த அந்த சாமியார் யார்? அவர் எங்கே இருக்கிறார்? இதுவரை அவனோ அவன் கூட்டத்தாரோ எந்த சாமியாரையும் பார்த்ததுமில்லை, பழகியதுமில்லை. அதனால் யார் அந்த சாமியார் என்றே அவனால் யூகிக்க முடியவில்லை.
எப்படியாவது தேடிக்கண்டு பிடித்துப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஏக்கம் அவன் மனதை வாட்ட தன் கையில் இருந்த தங்க மோதிரத்தை விற்றுப் பணமாக்கிக் கொண்டு கிளம்பிவிட்டான். எவ்வளவோ சாமியார்களைப் பார்த்தும் கனவில் வந்தவரைக் காணவில்லை. தேடலை அவன் நிறுத்தவே இல்லை.
மஹாபெரியவா வேலூர் பக்கத்திலுள்ள ஏகாம்பர குப்பம் என்ற இடத்தில் இருந்த சமயம். அந்தப் பாமரனுக்கு மஹானின் அருளைப் பெறும் வாய்ப்பு கிட்டியது.
ஒரு மாலைப் பொழுதில் அந்தப் பக்கம் வந்த பரமபக்தன் மஹாபெரியவாள் என்னும் பரமேஸ்வரனைப் பார்த்து விட்டான்.
“ஓ சாமி….இதே சாமிதான்.. என்னை நீ தானே வரச்சொன்னே வெளியே வா” என்று குதூகலத்தோடு கூச்சலிட்டான். அவன் விடாமல் குரல் கொடுக்க பரம காருண்ய மூர்த்தியான் மஹான், ராஜம்மாள் என்னும் பக்தையை அழைத்து, “நீ போய் அந்த ஆளை என்னன்னு விசாரிச்சு ஆகாரம் ஏதாவது சாப்பிடக்கொடு, நான் நாளைக்கு அவனைப் பார்க்கிறேன்” என்று அனுப்பினார்.
அந்த அம்மாளும் அவனிடம் சென்று,
“நீ யாரப்பா? உனக்கு இப்போ சாப்பிட சாப்பாடு தர்றேன். உன்னை சாமி காலையிலே பார்த்துப் பேசுவாங்க” என்றார்.
“நல்லது தாயி. நான் ரெண்டு பொண்டாட்டிக்காரன். அவங்களோட ஓயாத சண்டை. மூணாவது ஒரு பெண்ணை கட்டிகிட்டேன். அவ எனக்கு சாப்பாட்டுலே விஷம் வச்சதைப் பார்த்துட்டேன். அதனாலே மனசு ஒடிஞ்சுபோய் சாவலாமுன்னு இருந்தேன். அப்போதான் இந்த சாமியார் சாமி என் கனவிலே என்னை சாகவேணாமுன்னு காப்பாத்தினாங்க… என்னை வந்து பாருன்னும் சொன்னாங்க”…” என்று தன் கதையை கண்களில் நீர் வழிய விவரித்தான்.
இதைக்கேட்ட ராஜம்மாளுக்கு வியப்பு. மஹாபெரியவாளின் அருள் எங்கெங்கெல்லாமோ வியாபித்திருக்கிறதே என்று நினைத்துக் கொண்டார்.
மறுநாள் காலை அந்த நரிக்குறவனுக்கு மஹாபெரியவா வெளியே வந்து காட்சி தந்து அருளினார்.
“சாமி உன்னைப் பாத்தா என் தாய் மாதிரி இருக்கு…. நான் உன் கூடவே இருந்துடறேன். போற இடத்தில் எல்லாம் குப்பையைக் கூட்டுகிறேன்” என்று கண்ணீர் மல்கக் கூறினான்.
“நீ கவலைப் படாமே ஊருக்குப் போ. இனி எல்லோரும் நல்லபடியா நடப்பாங்க. என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நினைச்சுக்கோ எல்லாம் சரியாப் போகும்” என்று அந்தப் பக்தனை ஆசீர்வதித்து பழங்களைத் தந்து அங்கிருந்தோரிடம் பணம் வசூல் செய்து அவனுக்குக் கொடுக்கச் சொல்லி வலிய ஆட்கொண்ட பரம பக்தனை அனுப்பி வைத்தார் கருணாமூர்த்தி.
No comments:
Post a Comment