பள்ளிக்கூடம் முக்கால் வாசி கூரைக்கட்டு தான், திறந்தவெளியில் மரத்தடியில் தான் வகுப்பு. மாணவர்கள் மாணவியர்கள் மண் தரையில் தான்.
போர்டு கிடையாது. ஓரே ஒரு நாற்காலியில் உபாத்யாயர். மேஜை கிடையாது. அவர் புத்தகத்தை பார்த்தோ, பார்க்காமலோ சொல்வார். கேட்போம்.
எழுதிக்கோ என்றால் எழுதிக்கொள்வோம். பேசமாட்டோம். மரத்தில் ஒரு கிளையில் கட்டித்தொங்கும் தண்டவாலத்துண்டில் அப்பாதுரை ஒரு இரும்புத்துண்டால் அடித்தால் வகுப்பு களையும். அடுத்த உபாத்யாயரோ அவரேயோ மீண்டும் வந்து வேறு பாடம் நடத்துவார்.
கன்னத்தை கிள்வது, தலையில் குட்டுவது, பிரம்பால் கையில் அடிப்பது போன்ற தண்டனைகள் உண்டு. பெற்றோர் கண்டுகொள்ள மாட்டார்கள். வாத்யார் அடித்தார் என்று சொன்னால் ''நீ ஏதாவது தப்பு செய்திருப்பாய்'' என்று வாத்யாருக்குத்தான் சப்போர்ட் வரும்.
எங்களுக்கு சீருடை (யூனிபார்ம்) என்னவென்றே தெரியாது. இருக்கும் அரை நிக்கர், அறிக்கை சட்டை தோய்த்து தோய்த்து போட்டுக்கொல்வதோடு சரி. சலவை கிடையாது. தெரியாது.
எங்களுக்கும் முற்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம். ஆசிரியர் வீட்டுத்திண்ணையில் சட்டையின்றி மாணவர்கள். மாணவிகள் கிடையாது. முக்கால் வாசி குடுமி, அறைக்குடுமி. காதில் கடுக்கன் சில பேருக்கு. சிறிய பழுப்பேறிய முழங்கால் உயர துண்டு தான் இடையில். பாடம் ஆங்கிலத்தில் கிடையாது. தமிழில் அதுவும் செய்யுள் ரூபத்தில் ஆசிரியர் சொல்லும் விளக்கத்துடன். மனப்பாடம் செய்ய வேண்டும். அர்த்தம் சொல்வார். மணலில் எழுதவேண்டும்.
ஆசிரியர் வீட்டில் சகல வேலைகளும் மாணவன் செய்யவேண்டும். அது வழக்கம். எப்போது உபத்த்யாயருக்கு முடிகிறதோ அப்போது தான் பாடம். அவரவர்கள் வீட்டிலிருந்து காய் கறிவகைகள், பழங்கள், அரிசி, நெல் எண்ணெய் நெய் வெல்லம் மிளகாய், பருப்பு வகைகள், கீரைகள், கொண்டு வந்து கொடுப்பதுதான் காணிக்கை, சம்பளம்.
எங்களுக்கும் எங்கள் முன்னோர்களுக்கும் ஆசிரியர்களைப் பிடித்திருந்தது. அவர்களுக்கும் எங்கள் மேல் ஒரு தனி பாசம். ஒரு பிணைப்பு இருந்தது. அது இன்னும் மறக்கவில்லை.
இதற்கெல்லாம் முன்பு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே, மாணாக்கன் எப்படி நடப்பான் தெரியுமா?
திட்டினாலும், ரத்தம் வருகிறமாதிரி அடித்தாலும், நாக்கே கூசும்படியாக வைத்தாலும், இகழ்ந்தாலும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வான்.
நீதான் அப்பா, நீதான் என் அம்மா என்று வாத்தியாரை போற்றுவான்.
என்ன கடின வேலை கொடுத்தாலும் மனம் கோணாமல் செய்வான். நாயாய் உழைப்பான்.
உடல் பொருள் ஆவி எல்லாம் ஆசிரியர் பணிக்கே அர்ப்பணிப்பான்.
பகலோ, இரவோ அவனுக்கு பணிபுரிய நேரமே தனியாக ஒதுக்குவது என்பது கிடையாது.
ஆசிரியர் காலடியே அவனுக்கு அடைக்கலம்.
இப்படிப்பட்ட மாணவனை ஆசிரியர் விடுவாரா? அவரும் பரிவோடு அவனுக்கு கல்வி கற்பிப்பார். உபதேசிப்பார்.
அவனை சான்றோனாக்குவது கடமை என்று குருவும் அருள் புரிவார்.
No comments:
Post a Comment