Thursday, March 13, 2014

பெண்கள் வேலை:: போதனை, மருத்துவம்



பெண்கள் வேலை:: போதனை, மருத்துவம்
Source: Sage of Kanchi blog posted by MAHESH KRISHNAMOORTHY on MARCH 9, 2014

பெண்கள் வேலைக்குப் போவதில் எனக்கு அபிப்ராயமில்லை என்று தெரிந்த சில பேர் என்னிடம் வந்து ஒன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘எனக்கு அபிப்ராயமில்லை’ என்பதை, ஸொந்த ஹோதாவில் நானாகச் சிலதை ஆதரிக்கிறேன், ஆதரிக்கவில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொண்டுவிடக்கூடாது. அப்படியெல்லாம் நான் ஸொந்த ஹோதா கொண்டாடிக் கொள்ள இடமே கிடையாது. சாஸ்த்ரங்களின் அபிப்ராயம் என்னவோ, சாஸ்த்ரங்களின் வழியை நன்றாக அறிந்த சிஷ்டர்களின் அபிப்ராயம் என்னவோ, அதைச் சொல்ல மட்டுந்தான் நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஜட்ஜ், ஸொந்த அபிப்ராயம் எதுவுமில்லாமல் சட்டப் புஸ்தகத்தையும், ஏற்கனவே வந்திருக்கும் தீர்ப்புகளையும் பார்த்துப் பார்த்தே முடிவு செய்கிற மாதிரிதான், தர்மபீடங்களில் இருப்பவர்களும் சாஸ்த்ரம் என்ற சட்டப் புஸ்தகத்தையும், அதன் வழியே போகும் சிஷ்டர்களின் ஸம்ப்ரதாயத்தையும் பார்த்து அதை அநுஸரித்தே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்த அளவுக்கு அந்த மாதிரிப் பார்த்துத்தான் ஸ்த்ரீகள் உத்யோகத்துக்குப் போகவேண்டாம் என்பது. இதைப் பற்றிச் சில பேர் என்னிடம் ஒரு விஷயம் சொல்வதுண்டு.

அதாவது, “பெண் குழந்தைகளுக்குப் பெண் டீச்சர்களே டீச் பண்ணுவதுதானே நல்லது? அதுதானே பலவிதமான தப்புக்கள் நடக்காமலும் காப்பாற்றக்கூடியது? அதே மாதிரி வைத்யமும் பெண்களுக்குப் பெண்களே செய்வதுதானே உத்தமம்? அதனால் இந்த இரண்டு துறைகளில் மட்டும் அவர்கள் வேலைக்குப் போவதை நீங்கள் அநுமதிக்கத்தான் வேண்டும்” என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

அவர்கள் சொல்வதில் நியாயமில்லாமலில்லை என்றே படுகிறது.

ஆனாலும் டீச்சிங், வைத்தியம் ஆகிய இந்த இரண்டுக்கும் பெண்கள் போவது தங்களுடைய உத்யோக ஆசையைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதற்காகவோ, அதனால் கிடைக்கிற வருமானத்தைக் கருதியதாகவோ இருக்கக்கூடாது. இந்த இரண்டு உத்தேசங்களுக்காக அவர்கள் உத்யோகத்துக்குப் போவதை அநுமதிக்கலாமானால், அப்போது இதே உத்தேசங்களுக்காக அவர்கள் மற்ற ஆஃபீஸ் உத்யோகம், கம்பெனி உத்யோகம் முதலியவற்றுக்குப் போவதையும் அநுமதித்தேயாக வேண்டி வரும். அது கூடாது என்பதுதானே நான் சொல்லி வருவது?

ஆகவே, இந்த இரண்டு வேலைகளுக்கும் பெண்கள் போவதற்கான உத்தேசமே – motivation என்பதே – வேறே விதமாக இருக்கவேண்டும். அதாவது, தங்கள் மாதிரியுள்ள மற்றப் பெண்களுக்கு அறிவூட்டும் பணி, அவர்களுடைய பிணி தீர்க்கும் பணி என்பதாக் இந்த இரண்டு தொழில்களையும் ஸேவை, தொண்டு என்ற ரீதியிலேயே பார்த்து, அதற்காகவே வேலைக்குப் போவதாக அந்தப் பெண்கள் இருக்கவேண்டும், உத்யோகம் என்ற எண்ணம் போய், தொண்டு என்ற எண்ணத்திலேயே இந்தத் தொழில்களை ஏற்பவர்களாக அந்தப் பெண்கள் இருக்கவேண்டும். தொண்டு செய்ய வேண்டும் என்ற தாபமே அவர்களுடைய motivation – ஆக இருக்க வேண்டும்.

இதை வெளி மனிதர்கள் நிர்ணயம் செய்யவோ கணிக்கவோ அமலுக்குக் கொண்டுவரவோ முடியாது. இந்தத் தொழில்களுக்கு வர ஆசைப்படுகிற பெண்கள் தாங்களேதான் தங்களுக்குள் ஈச்வர ஸாக்ஷியாக ‘உத்யோகம் செய்கிற பெருமைக்காகவோ, ஸ்மபாத்தியத்துக்காகவோ இந்தத் தொழிலை எடுத்துக் கொள்கிறோமா, இல்லாவிட்டால், நம் மாதிரிப் பெண்களுக்கு உத்தம் கைங்கர்யம் செய்வதற்கு இந்தத் தொழில் உபாயமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்கிறோமா? முன்னால் சொன்னதாக இருந்தால் இதில் ஈடுபடுவது நியாமில்லை. பின்னால் சொன்னதாக இருந்தால் ஈடுபடலாம்’ என்று முடிவு செய்ய வேண்டும். செய்வார்களா என்பது வேறே விஷயம்.

பெண்களுக்குப் பெண்களே செய்வதுதான் ச்லாக்யம் என்று இருக்கிற இந்த இரண்டு தொழில்களை அவர்கள் எடுத்துக் கொள்வதற்கு இரண்டாம் பக்ஷமாக இன்னொரு motivation – ம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இல்லாமைதான் அது. ஸ்த்ரீயும் ஸ்ம்பாதித்தால்தான் முடியும் என்கிற அளவுக்கு ஏதாவது காரணங்களால் தரித்ர நிலையில் தவிக்கிற குடும்பத்துப் பெண்கள் மற்ற வேலைகளுக்குப் போகாமல் இவ்விரண்டில் ஒன்றை ஏற்கலாம்.

இந்தத் தொழில்களைப் பொருளாதார நிமித்தமாக ஏற்கவேண்டிய அவசியமில்லாத மற்றவர்கள் ஸ்ம்பாத்தியத்தில் கணிசமான பங்கை தான தர்மங்களில் செலவழிக்க வேண்டும்.

அஸாதாரணமான திறமை கொண்ட பெண்கள்

எந்த விதி இருந்தாலும் அதற்கு விலக்கும் இல்லாமல் போகாது. Every rule has its exception என்றே சொல்கிறார்கள். அப்படி, சராசரி ஜனங்களை விட மிக அதிகமான திறமை வாய்ந்தவர்களாக ஸ்த்ரீ குலத்தில் ஒவ்வொரு காலத்திலும் சில பேர் விதிவிலக்கு என்கிற மாதிரித் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் அகத்தோடேயே கட்டுப்பட்டிருப்பது என்றில்லாமல், தாங்கள் எந்தத் துறையில் திறமைசாலிகளாக இருந்தார்களோ, அதை விருத்தி செய்து கொண்டு அந்தத் துறையில் வெளியுலகத்திலேயே பெயரெடுத்து சோபித்திருக்கிறார்கள். இந்த மாதிரி அஸாதாரணமான திறமையுள்ள பெண்கள் அதை விருத்தி செய்து கொள்ள ஸமூஹமும் இடம் கொடுத்தே வந்திருக்கிறது. விருத்தி செய்து கொண்ட பின் அந்தத் துறையில் அவர்கள் வெளியுலகத்தில் பணியாற்றுவதையும் மதித்து வரவேற்றுப் பயனடைந்திருக்கிறது. அவர்களை வீட்டோடுதான் இருக்க வேண்டும் என்று அடக்கிப் போடவில்லை. இப்படித்தான் பெண்கள் க்ருஹிணிகளாக இருப்பதையே ஆதியிலிருந்து வழிமுறையாகக் கொண்ட இந்த தேசத்திலேயே அதன் ஒவ்வொரு ப்ராந்தியத்திலும், ஒவ்வொரு காலத்திலும் ஸகலமான துறைகளிலும் வல்லவர்களாக ஸ்த்ரீகளும் தோன்றியிருக்கிறார்கள். ஞானம், பக்தி, இலக்கியம், ஆடல்-பாடல் முதலான கலைகள், அரசாட்சி, யுத்தம் செய்வது உள்பட ஒரு துறை விட்டுப் போகாமல் அநேகம் ஸ்த்ரீகள் ப்ரகாசித்திருக்கிறார்கள். சரித்திரத்திலேயே அவர்களுடைய பெயர்கள் ஸ்திரமாகி விட்டன. அதே மாதிரி இன்றைக்கும் சராசரிக்கு ரொம்பவும் மேலே போன விதிவிலக்கான ஸ்த்ரீ ப்ரஜைகள் தோன்றினால் அவர்கள் வெளியுலகத்தில் சோபிப்பதற்குத் தடையில்லை. ஆனால் அதற்காக விதிக்கு உட்பட வேண்டிய பெருவாரி ஸ்த்ரீகளும் அப்படிப் போகவேண்டும் என்றால் ஸமூஹத்தில் குடும்ப வாழ்க்கையிலும் சீர் கெட்டுப் போகத்தான் செய்யும்.

No comments:

Post a Comment