Thursday, March 13, 2014

மஹாபெரியவாளும் அன்னதான சிவனும்

மஹாபெரியவாளும் 
அன்னதான சிவனும்
Source-----மஹாபெரியவாள் விருந்து
Author----ஸ்ரீ ரா. கணபதி.
Publishers----திவ்ய வித்யா ட்ரஸ்ட்.

“சாதம்னா அப்படியே வெள்ளைவெளேர்னு ஹிமயமலை மாதிரி குவிச்சிருக்கும். ஸாம்பார் அண்டாவுல யானையே முழுகிப்போனாக்கூடத் தெரியாது. ஹிமாசல சிவன் மதுரை மீனாக்ஷி கல்யாணத்தில குண்டோதரனுக்காக அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்னு சொல்லுவாளே, அதையே இந்த ஏழைப் பிராமண சிவன் பண்ணாரோன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார்.”


அந்த ‘அவர்’ தேப்பெருமாள்நல்லூர் ராமஸ்வாமியாகப் பிறந்து அன்னதான சிவன் என்று உலகம் போற்றி வணங்கிய உத்தம ஜீவன். அவரைப் பற்றிக் குழந்தைக் குதூஹலத்துடன் கூறிக் களிப்பவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபெரியவாள்.


அன்னமய கோசத்தை அற்ப மாயையாக ஒதுக்கி, ஆனந்த மயமான அத்வைத ஆனந்த மோனத்தில் அநுபூதி கண்ட மஹாபெரியவாள் என்றோ நடந்த அன்னதான வைபவங்களைச் சொல்லி ஆனந்திக்கிறார். அந்த அன்னதானங்களைச் செய்த சிவன் அதுவே தன் ஜன்மப்பணி என்று எவரிடமிருந்து ஆதேசம் பெற்றாரென்றால் அவரது ஜன்ம ஸ்தலமான தேப்பெருமாள்நல்லூர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஞான மோன மூர்த்தியான தக்ஷிணாமூர்த்தியிடமிருந்துதான்!
சோற்றாலடித்த சுவர், அதைக் குட்டிச்சுவராக பாவித்து நொறுக்க வேண்டுமென்று கூறும் ஞானியரில் பலர், விந்தையாக மக்களுக்கு அன்னம் படைப்பதில் அசாதாரண ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். த்வைதத்திலிருந்து அத்வைதத்திற்குப் பாலமிடும் அன்னையின் அன்பு விளையாடல்தான் பிரம்ம ஞானத்திலிருந்து அன்னதானத்தை விளைவிக்கும் விந்தையை நிகழ்த்துகிறது. பொருத்தமாக அவளுடைய ஸஹஸ்ரநாமத்தில், ‘நிர்த்வைதா’, ‘த்வைத வர்ஜிதா’, ‘ப்ரஹ்ம—ஆத்ம—ஐக்யஸ்வரூபிணி’ என்ற அத்வைதப் பெயர்களுக்கு இடையிலேயே அவளை அன்னபூர்ணேஸ்வரியாகக் காட்டும் ‘அன்னதா’ என்னும் திருநாமம் வருகிறது.


காமகோடி பீடத்தின் அதிஷ்டான தேவதையான காமாக்ஷி அன்னபூர்ணேஸ்வரியின் மலர்ச்சி கண்ட பரிணாமமேயாவாள். காத்யாயன ரிஷிக்கு மகளான காத்யாயனியாகத் தோன்றிக் காசியில் அன்னபூர்ணியாகிப் பஞ்ச காலத்தில் பசியாற்றியவளே காஞ்சிக்கு வந்து காமாக்ஷியானாள். அதனால்தான் அவளுடைய கருவறை வாயிலில் அன்னபூரணி ஸன்னிதி இருக்கிறதென்று ஸ்ரீ மஹாபெரியவாள் எடுத்துக்காட்டியிருக்கிறார்.


 ‘இருநாழி நெல் கொண்டு அவள் இயற்றும் எண் நான்கு அறங்’களில் அன்னதானம் முக்கியமானது. இதே காஞ்சியில் மணிமேகலை அமுதசுரபியிலிருந்து அக்ஷயமாக அன்ன தானம் செய்ததை மஹாபெரியவாள் எடுத்துக் காட்டியிருக்கிறார். ‘காஞ்சி என்பதும் மணிமேகலை என்பதும் ஒன்றே. மணி கட்டிய ஒட்டியாணத்திற்குத்தான் அப்படி இரண்டு பேர்’ என்றும் அற்புதமாகப் பொருத்தம் காட்டியிருக்கிறார்.


காஞ்சி காமாக்ஷியின் அன்னப் பாலிப்பைப் போற்றியும் பரமசிவனைப் பரிஹாஸம் செய்தும் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியதை மஹாபெரியவாள் மிகவும் சுவைத்துக் கூறுவது வழக்கம். காஞ்சியில் உள்ள பல ஆலயங்களில் ஓணகாந்தன்றளி என்பது ஒன்று. ஓணன், காந்தன் என்ற இரண்டு அஸுரர்கள் ஈசனை வழிபட்ட ஆலயம் அது. 


அங்கேயிருந்த பிக்ஷாடன மூர்த்தியை சுந்தரமூர்த்திகள் பார்த்தார். 

பார்த்தவுடன் என்ன பாடினாரென்று, மஹாபெரியவாள் வாய்மொழியாகவே கேளுங்கள். “லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா புராதனமான இந்தக் காஞ்சிபுரத்திலே, ‘கச்சி மூதூர்’லேயே இருக்கா. அவ போட்டு சாப்பிட்டா வயிறு ரொம்பறது மட்டுமில்லே,உயிரும் ரொம்பி விடும்.

 ‘ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி’ ன்னு ஆசார்யாள் (அன்னபூர்ணியிடம்) பிரார்த்திச்சுண்டபடியே, அவ கையால வாங்கி சாப்பிட்டா ‘உய்நெறி’ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும் இப்படி ஒர்த்தி இந்த காஞ்சிபுரத்திலேயே, காமகோட்டத்துல இருகிறப்போ, ஏ பிச்சாண்டி ஸ்வாமி! நீர் ஏங்காணும் இப்பிடி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சை எடுத்துண்டு திரியறீர்?’ன்னு ஸுந்தரர் ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமாகக் கேலி பண்றார்.”


தையலாள்உல குய்யவைத்த
காரிரும்பொழிற் கச்சிமூதூர்க்
காமகோட்டமுண் டாகநீர்போய்
ஊரிடும்பிச்சை கொள்வதென்னே,
ஒணகாந்தன் றளியுளீரே?

விருந்து தொடரும்……………………….. 



மஹாபெரியவாளும் 
அன்னதான சிவனும்
PART 3

எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாதுன்னு அவர் என்ன பண்ணுவாராம்னா, பத்து மூட்டை, இருபது மூட்டை வடிச்சு அதை அப்படியே நீள நீளப் பாய்லே பரத்திக்கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கிற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெல்லிசா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடு கிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து இருபது மூட்டை ஈரப்பச்சரிசியை, ஆமாம் பச்சையா இருக்கிற அரிசியாவேதான் பரத்திக் கொட்டிட்டு,அதுக்கு மேலே கெட்டிக் கோணியாப் போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடி வரையில் அதை ஓரளவு இறுக்கமாச் சொருகி மூடிப்பிடுவாராம். காமணியோ அரைமணியோ கழிச்சுக் கோணியை எடுத்தா அத்தனை அரிசியும் புஷ்பமா சாதமாயிருக்குமாம். அதாவது சாதம் வடிக்கிற கார்யத்தில் பதி மிஞ்சும்படி இப்படி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்.

“இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடனும்னா அத்தனை பாலுக்கு எங்கே போகிறது? இந்த மாதிரி பெரிய உத்ஸவ சமாராதனைகளில் சிவன் அதுக்கும் ஒரு யுக்தி கையாண்டிண்டிருந்தார். ரிஃப்ரிஜிரேடர், அது இதெல்லாம் இல்லாத நாளில் அவர் ஒரு புது மாதிரி ரிஃப்ரிஜிரேடர் கண்டுபிடிச்சிருந்தார்! ஸமாராதனைக்குப் பல வாரம், மாஸம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார். சேர சேரப் பெரிய மரப் பீப்பாய்கள்ல அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும் வாயை மெழுகால அடைச்சு, அப்படியே, ஆழமான கொளங்களுக்கு அடியில் தள்ளிப்பிடுவார். அப்பறம் எப்ப தேவைப்படறதோ அப்ப தொறந்தா மொத நா ராத்ரிதான் தோச்ச மாதிரி தயிர் சுத்தமா இருக்கும். கொளத்தோட குளிர்ச்சி மாத்திரந்தான் காரணம்னு சொல்லறதிக்கில்லே, அவரோட மனஸு விசெஷமும் சேந்துதான் அப்படி இருந்திருக்கணும்.”

1921, 1933 ஆகிய இரு மஹாமகங்களில் குறிப்பிட வேண்டிய ஒரு விசேஷமுண்டு. 1919ல் ஸ்ரீ மஹாபெரியவாள் கங்கா யாத்திரை செய்வதாக சாஸ்திரோக்த ரீதியில் சங்கல்பம் செய்துகொண்டு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டார். பின்னர் கிராமம் கிராமமாக அவர் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கங்கை போய் திரும்புவதற்கு இருபத்தோராண்டுகள் பிடித்தது. இக்காலகட்டத்திற்குள்ளேயே அவ்விரு மாமாங்கங்களும் வந்தன. ஸ்ரீராமன் பதினான்கு ஆண்டுகளுக்கு வனவாச சங்கல்பம் மேற்கொண்டதால், தான் அது முடியுமுன் நகரங்களான கிஷ்கிந்தாபுரிக்குள்ளும், லங்காபுரிக்குள்ளும் பிரவேசிக்க மறுத்து லக்ஷ்மணனைக் கொண்டே அவ்விரு இடங்களில் சுக்ரீவனுக்கும், விபீஷணனுக்கும் முடிசூட்டு நடத்தினார். அறக்கட்டுப்பாடுகளை அதே செவ்வியுடன் அநுஸரிக்கும் நம் ஆசாரியப் பெருமானும் இவ்விரு மாமாங்கங்களின் போது கும்பகோணம் மடத்தில் முகாமிடாமல் முறையே ஊருக்கு வெளியேயுள்ள பட்டீசுவரத்திலும், திருவிடைமருதூரிலுமே தங்கினார். அவ்விடங்களிலிருந்து நேரே மஹாமகக்குளம், ஆலயங்கள் முதலியவற்றுக்குச் சென்று திரும்பினார். சரியாக 1933ல் ஸ்ரீமடத்தின் ஜீரணோத்தாரணத் திருப்பணியும் பூர்த்தி அடைந்திருந்தது. முழுக்கவும் கருங்கற் திருப்பணியாகவே அதைச் செய்து முடித்திருந்ததும் அன்னதான சிவனேதான். ஆயினும்கூட, அவருடைய திருப்திக்காக ஸ்ரீ மஹாபெரியவாள் வீதியிலிருந்தவாறே மடத்தின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிட்டாரேயன்றி உள்ளே பிரவேசிக்கவில்லை.

ஆயினும் முதல் நாளிரவு அவருடைய அருட்சக்தி புரட்டிக்கொண்டு பெருகி ஓர் அற்புதம் நடந்ததால்தான் மறுநாள் லக்ஷம் மக்களின் உதரத்தில் அன்னலக்ஷ்மி பிரவேசிக்க முடிந்தது.

அப்படி என்ன நடந்தது?

சிவனின் அன்னதானங்களில் ஒரு விசேஷம், முதல் நாள் மாலை வரையில் ‘இங்குதான் பல்லாயிர மக்களுக்கு விருந்து தயாரிக்கப்படப்போகிறது’ என்பதற்கு எந்த அறிகுறியும் இராது. இரவிலிருந்துதான் சாமான்கள் வரத்தொடங்கும். அந்த 1933 மாமாங்கத்தில் என்னவாயிற்று என்றால் இரவு நள்ளிரவாகி மேலும் ஒன்றரை மணி கடந்த பின்பும் கூட ஒரு சாமான் வண்டி கூட வந்து சேரவில்லை. நிலைகுலையாத சிவனும் கலங்கிவிட்டார். ‘சாமான்களை இறக்கிப் பாகுபடுத்தவே சில பல மணிகளாகுமே! அப்புறம் எப்போது சமைத்து எப்போது பரிமாறுவது?’

மஹாபெரியவாள் முகாமுக்கு விண்ணப்பம் பறந்தது.

அடுத்தே ஒவொவொரு வண்டியாகச் சமையற்களத்திற்கு வரவும் தொடங்கின.

அதுவரை ஏன் வரவில்லையென்றால், போக்குவரத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து சிவன் ஸமாராதனைக்கு வரும் வண்டிகளுக்கு மாத்திரம் விலக்குத் தருவது வழக்கம் என்பது அவ்வாண்டு பணி புரிய வந்த போலீஸ் படையினருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனவே அவ்வண்டிகளையும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தி விட்டார்கள். மஹாபெரியவாளின் திருச்செவியில் விஷயம் விழுந்த அந்தப் பின்னிரவு ஒன்றரை மணிக்கு ஸர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குத் திடுமென்று பொறி தட்டிற்று—சிவன் ஸமாராதனை வண்டிகளுக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்களிப்பது வழக்கமாச்சே என்று! அப்புறம் என்ன? ஊருக்கு வெளியே ‘நிப்பாட்டப்’பட்டிருந்த நூற்றுக்கணக்கான வண்டிகள் சாரி சாரியாக உள்ளே வந்தன. அசுர வேகத்தில், இல்லை, அனுக்ரஹ வேகத்தில் சாமான் இறக்கப்பட்டு, பங்கீடு ஆகி, காலை ஐந்து மணிக்கே கோட்டையடுப்புக்களை மூட்டிக் காலம் தப்பாமல் லக்ஷம் ஜனங்களுக்கு அறுசுவை அன்னம் படைக்க முடிந்தது.

மாமாங்க சமாராதனைகள் தவிரவும் ஸ்ரீ மஹாபெரியவாளின் ‘சிவ ஸங்கல்பம்’ அன்னதான சிவனின் கைங்கர்யமாக அமோக உருக்கொண்ட இரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட வேண்டும். ஒன்று 1923ல் மஹாபெரியவாள் ஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்குச் செய்த தாடங்கப் பிரதிஷ்டை வைபவம், மற்றது 1916 நவராத்ரியில் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் நடத்திய லக்ஷ பிராமண போஜனம். நடமாடும் சிவனும், அன்னம் போடும் சிவனும் ஒன்று சேர்ந்த விமரிசையில் லக்ஷம் என்பது இரண்டு லக்ஷமாகவே விஸ்வரூபம் கொண்டது என்று தோராயக் கணக்கு சொல்வார்கள்.

இரண்டு சிவன்களுமே இந்த மஹத்தான சமாராதனைகளில் ஒரு பருக்கைகூட ருசி பார்த்ததில்லை! அந்த அற்புதத் தியாகமும் அவர்களுடைய அதிசயப் பிரேமையுடன் சேர்ந்த விசேஷத்தால்தான் அச் சமாராதனைகள் அவ்வளவு மஹத்தாக நடக்க முடிந்தது. சந்த்ரமௌளீஸ்வரருக்கு நிவேதித்த அவற்பொறி போன்ற வெகு எளிய உணவு வகை சிலவே மஹாபெரியவாள் உட்கொள்வார். அதுவும் அடிக்கடி நிகழும் உபவாஸ நாட்களிலொன்றாக அந் நாள் இல்லாமலிருந்தால்தான்! அன்னதான சிவனோ, எவரேனும் ஒரு அன்பரின் வீட்டுக்குச் சென்று நாலு கவளம் மோருஞ்சோற்றை உண்பார். அன்னதானம் செய்யாத தினங்களிலும் பழைய சொற்றைத்தான் தன்னுடைய இஷ்டாவான தக்ஷிணாமூர்த்திக்கு மானஸீகமாக் நிவேதித்து விட்டு உண்பார்!

விருந்து தொடரும்….. 

No comments:

Post a Comment