''போடா புண்ணாக்கு'' இந்த வார்த்தை புதிதா? இல்லவே இல்லை. தமிழ் நாட்டில் இந்த வார்த்தை ஒருவன் மேல் உபயோகித்தால் அந்த ஆசாமி உபயோகமில்லாதவன், முட்டாள், என்று பொருள் படுகிறது. உண்மையில் புண்ணாக்கு ரொம்ப புரதச்சக்தி வாய்ந்தது. கிராமங்களில் குழந்தைகள் இவற்றை தின்பண்டமாக உண்பதை பார்த்திருக்கிறேன்.
மண்ணீரல் நோய்களை எள்ளு புண்ணாக் கிலிருந்து செய்த சில மருந்துகள் குணப்படுத்துமாம். கால்நடைகள், கோழி போன்றவை இந்த சிறந்த தீவனத்தால் வளர்ந்து பயன் தருகின்றனவாம்.
இது புண்ணாக்கு பற்றிய சாதாரண விஷயம் அல்ல. இதற்கும் மஹா பெரியவாளுக்கும் சம்பந்தம் உண்டான சமாசாரம். ஒரு விறுவிறுப்பான அபூர்வ நிகழ்ச்சி இதில் ஆரம்பமாகிறது.
பெரியவா மேல் அதீத பக்தி கொண்ட ஒருவர அமெரிக்காவில் வேலையாயிருந்தார். ஆண்டுகள் சில சென்று, விடுமுறை கிடைத்தது. குடும்பம் மதராசிலிருந்தது . (அப்போதைய சென்னையின் பெயர்) குடும்பத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலைவிட ஒரு படி அதிகமாக ஒரு உந்தல் மனதில். மீனம்பாக்கத்தில் (அப்போதைய விமான நிலையம்) விமானம் வந்து எப்போது இறங்கும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த மனிதர். ஒரு வண்டியைப்பிடித்து காஞ்சிபுரம் விரைந்தார். பெரியவா அப்போது காலையில் வழக்கமாக நிர்வாகஸ்தர்களோடு பேசிக்கொண்டிருந்தவர் இன்றைக்கு மடத்தில் என்ன சாப்பாடு என்று கேட்டு, சில அயிட்டங்களை சொல்லி இதெல்லாம் பண்ணினால் கூட நன்றாக இருக்குமே என்று அபிப்ராயம் சொன்னார். அவர் சாப்பாடு விஷயம் பற்றி எப்போதுமே பேசாதவர் ஏன் இன்று இதெல்லாம் கேட்கிறார் என்று சிப்பந்திகள் அதிசயித்தனர்.
அமெரிக்க பக்தர் பெரியவா முன்னால் போய் நின்றவர் சாஷ்டங்கமாக நமஸ்காரம் செய்தார். புன்முறுவலோடு பெரியவா அவருக்கு ஆசீர்வாதம் பண்ணி ஒன்றுமே அவருடன் பேசாமல் முதலில் போய் சாப்பிட்டு விட்டு வா என்று ஒருவருடன் அனுப்பினார். அவர் சந்தர்ப்பணைக்கு சென்றார் .
பெரியவா அருகிலிருந்தவர்களிடம் '' இப்போ அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரே அவர் கிட்டே மடத்துக்கு என்ன கேட்கலாம் சொல்லுங்கோ?'' என்றார். பெரியவா யாரிடமும் எதையும் கேட்பதுமில்லை, பெறுவதுமில்லை. அவர் என்ன அதிசயமாக இன்று இப்படி நம்மை கேட்கிறாரே என்று அவர்கள் விழித்தனர்.
பக்தர் சாப்பாடு முடிந்து பெரியவரிடம் வந்தார்.
''உன்னுடைய சங்கல்பம் நிறைவேறியதா.?
அந்த மனிதர் உடைந்து போனார். அப்படியே தடார் என்று தரையில் விழுந்தார். கண்களை கங்கை காவிரி. வார்த்தை வரவில்லை..நாக்கு தழுதழுத்தது.
பெரியவாளே மற்றவர்களிடம் சொன்னார். ''இதோ இருக்காரே இவர் .ஏறக்குறைய ஒருநாள் பூரா விமான பயணம் செய்து அலுத்து வந்திருக்கிறார். மனுஷன் ப்ளேன் ஏறினதிலிருந்து என்னைப்பார்க் காம ஒண்ணுமே சாப்பிடுவதில்லை என்று ஒரு சங்கல்பம். அதான் முதல்லே போய் சாப்பிட சொன்னேன். அவருக்கு பிடித்த சில காய்கறிகளையும் இன்றைய சமையலில் சேர்க்க சொன்னேன்.
அந்த கண்கள் மட்டும் சுனையாக ஊற்றெடுக்க சிலையாக நின்றார். கூப்பிய கரம் கீழே இறங்கவில்லை.பேச்சே இல்லை.
அதுசரி இவரை அழைத்துக்கொண்டு போய் அவர் கைங்கர்யமாக மடத்துக்கு நிறைய எள்ளுப்புண்ணாக்கு வாங்கிக்கோங்கோ. பக்தருக்கு ஆச்சர்யம். பெரியவாளே தனக்கு ஒரு கட்டளையிட்டு மடத்துக்கு ஒரு கைங்கர்யம் பண்ண சொல்கிறாரே என்று சந்தோஷ வானில் பறந்தார். பெரியவாளுக்கும் மடத்துக்கும் தன்னாலியன்ற ஒரு கைங்கர்யம் செய்ய வேண்டும் அவருக்கு ஒரு ஆசை. அதை வெளியிடுவதற்கு முன்பாகவே பெரியவா கட்டளையிட்டது மட்டற்ற மகிழ்ச்சி.
அவர்கள் போனதும் பெரியவா மற்றவர்களிடம் சொன்னது
கடல் கடந்து போனவா கிட்ட ஸாஸ்த்ரப்ரகாரம் தானம் வாங்கறது உசிதமாகாது. அப்படி வாங்கற தானம் பசுவுக்கு தான் முதல்லே போய் சேரணும். அப்போ தான் பாபம் விலகும். அவரோ எனக்கு ஏதோ பண்ணனும்னு ஆசைப்படறார். ஒத்தைக்கல்லுலே ரெட்டை மாங்கா அடிக்கத்தான் எள்ளுப்புண்ணாக்கு வாங்கிண்டு வா ன்னு அனுப்பிச்சேன். பசுவுக்கு ஆகாரம். அதுனாலே பசுகிட்டேர்ந்து கிடைக்கற பால் எனக்கும் சேரும்.. அந்த நல்ல பக்தருக்கும் நான் அவரோட ஆசையை நிறைவேற்றினேன்னு ஒரு சந்தோஷம் கிடைக்கும் இல்லையா. சாஸ்திரத்தையும் மதிச்சு பரிகாரம் கோ வுக்கு ஆகாரம் பண்ணினாப்பலே ஆச்சு.
No comments:
Post a Comment