Source: Sage of Kanchi blog - BY MAHESH KRISHNAMOORTHY on MARCH 10, 2014
க்ருஹிணியாக அகத்தோடு இருந்து கொண்டிருக்கிற பெண் மத்யானப் பொழுது முழுதையும் எப்படிக் கழிப்பது? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வது போக பாக்கி டயம் இருக்குமே!
அதில் அகத்துக்கான பக்ஷணம், பொடி வகைகள், ஊறுகாய்கள் பண்ணலாம். அப்படிப் பண்ணுவதில் தேஹாரோக்யத்துக்கு உதவுகிற உழைப்பு ஒரு பங்கு என்றால் அதைப் போலப் பத்து பங்கு மனஸுக்கு ஆரோக்யம் தருவதான ஆத்ம ஸிந்துஷ்டி – ‘நம் கை பிடித்தவனுக்க்கும் வயிற்றில் பிறந்ததுகளுக்கும் நம் கையாலேயே பண்ணிப் போடுகிறோம்’ என்ற உள்ள நிறைவு.
உள்ளத்துக்கு நேராகவே நல்லது செய்கிற இன்னொன்றும் பகல் பொழுதில் ஸ்த்ரீகள் செய்யலாம்; செய்யவேண்டும் என்றே சொல்லணும். நம் தேசத்தில் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் இருக்கிற மதப் புஸ்தகங்களுக்கும், நேராக மத விஷயம் என்று சொல்ல முடியாத காவ்யங்களுக்கும் கணக்கு வழக்கேயில்லை. இன்றைக்கு உத்யோகத்தில் ஆலாப் பறந்து கொண்டிருக்கிற புருஷ ஸமூஹத்துக்கு அவற்றையெல்லாம் கவனிக்கப் பொழுதேயில்லை. அவர்கள் செய்கிறதையே தாங்களும் செய்வது என்று பெண்கள் காப்பி அடிப்பதைவிட, அவர்களால் செய்ய முடியாத இந்தக் கார்யத்தைச் செய்ய வேண்டும்.
தமிழிலோ, ஸம்ஸ்க்ருதத்திலோ, இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சமோ, மத விஷயமாகப் புராணம், ஸ்தோத்ரம், மஹான்கள் சரித்ரம், உபதேசம் என்று ருசி ருசியாக இருக்கப்பட்டவைகளைப் படிக்க வேண்டும். பாராயணம் பண்ணக் கூடியதை அப்படிப் பண்ண வேண்டும். படிக்கப் படிக்க ருசி கூடுமே தவிர திகட்டாதுதான். தான் மாத்திரம் அப்படிப் பண்ணுவதைவிட நாலு ஸகாக்களை, ஸகிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு சேர்ந்து செய்வதே கூட்டாஞ்சோறு சாப்பிடுகிற மாதிரி கூடுதலான ஸந்தோஷம் கொடுக்கும். ஸ்த்ரீகள் சேர்ந்தால் வீண் வம்பும் தும்பும்தான் என்கிற அபக்யாதிய மாற்றி இப்படி ஆத்ம ரக்ஷைக்காக, தர்ம ரக்ஷைக்காக ஒன்று சேர வேண்டும்.
ஆதம விஷயமாகவும் தர்ம விஷயமாகவும் ஒரு க்ருஹிணி, ‘இல்லத்தரசி’ என்றே உயர்த்திச் சொல்லப்படுபவள் விழித்துக்கொண்டு விட்டால் போதும். முற்றத்தில் ஏற்றி வைத்த விளக்கு கூடம், தாவாரம் எல்லாவற்றையும் ப்ரகாசப்படுத்துகிற மாதிரி அவளுடைய ‘ரேடியேஷ’னே க்ருஹத்திலுள்ள எல்லோருக்கும் ஒரு பரிசுத்தியைத் தந்துவிடும்.
மதப் புஸ்தகம் படிப்பது மட்டுமில்லாமல், அதில் உள்ளபடி விரதாநுஷ்டானங்கள் நியமமாகப் பண்ணுவதும் க்ருஹிணிகளாலேயே – housewife என்றே இருக்கிறவர்களால்தான் – முடியும். வேலைக்குப் போய்க் கொண்டே விரதாநுஷ்டானம் பண்ணுவது என்பதில் அநேக ‘காம்ப்ரமைஸ்’கள் பண்ணிக் கொள்ள நேரிடும். ‘அன்காம்ப்ரமைஸிங்’காகப் பண்ணுவது என்று ஆரம்பித்தாலும் வேலையின் அலைச்சல்-திரிச்சல், உபவாஸம் போன்ற நியமங்களின் கண்டிப்பு இரண்டுமாகச் சேர்ந்து ரொம்பவும் ‘ஸ்ட்ரைன்’ ஆகிவிடும். அப்படியில்லாமல், ஆயாஸமில்லாமல் வ்ரதங்கள் அநுஷ்டித்து ச்ரேயஸை அடைய க்ருஹத்தோடு இருப்பதுதான் உதவும்.
வ்ரதா நுஷ்டானத்துக்கு உதவுகிற வீடேதான் அநுஷ்டானமே கூடாத நாட்களுக்கும் உரிய இடமாக இருப்பது. தீட்டு நாட்களைத்தான் சொல்கிறேன். இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்த்ரீகள் ஆஃபீஸுக்கும் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. ‘அட்மாஸ்ஃபைரிக் பொல்யூஷன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக்காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள். அந்தப் ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்த்ரீகள் தீட்டே. அது செய்கிற கெடுதல் வெளியிலே தெரியாததால் அதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். கவனிக்கிறவர்களையும் ஆசாரப் பைத்தியங்கள் என்று ஒதுக்குகிறார்கள். வாஸ்தவத்திலோ இந்தத் தீட்டு அமங்கள சக்திகளையெல்லாம். இழுத்துக்கொண்டு வரும். அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்கவிட்டால், ஜனங்களுக்கு எத்தனைதான் வரும்படி வந்தாலும், கவர்மெண்ட் எத்தனைதான் five year plan போட்டாலும், தேசத்தில் துர்பிக்ஷமும் அசாந்தியும் வியாதியுமாகத்தான் இருக்கும்.
அந்த விஷயம் இருக்கட்டும். அகத்தோடு இருந்து கொண்டு அங்கங்கே பெண்கள் சின்னச் சின்ன க்ரூப்களாக மதப் புஸ்தகங்கள் படிப்பதோடு மட்டும் நிறுத்திச் கொள்ளச் சொல்லவில்லை. Classical என்று உயர்த்தியாகச் சொல்லக்கூடிய காவிய-நாடகக் கதைப் புஸ்தகங்களிலும் எத்தனையோ அழகுகள் உண்டு. குற்றமில்லாத ஸந்தோஷத்தை வாழ்க்கைக்கு ஊட்டி, அறிவையும் ஹ்ருதயத்தையும் வளர்க்கிற தன்மை அவற்றுக்கு உண்டு. அவை உபதேசம் என்று வறட்சியாக இல்லாமல் ரஸவத்தாக இருந்துகொண்டு நம்மை மேம்படுத்தக் கூடியவை. உதாரணத்திற்கு இரண்டு சொன்னால், ஸம்ஸ்க்ருதத்தில் சாகுந்தலம் – காளிதாஸர் எழுதினது; தமிழில் இளங்கோ செய்த சிலப்பதிகாரம். இந்த மாதிரிப் புஸ்தகங்களைப் பெண்கள் பகல் பொழுதில் படிக்கலாம். இவை எல்லாம் நமக்கும் அர்த்தம் புரிகிறமாதிரி விளக்கவுரையுடன் இப்போது கிடைக்கின்றன. இல்லாவிட்டால், பல பேர் சேர்ந்து இப்படிப் பண்ணுவதால் இம்மாதிரிப் புஸ்தகங்கள் நன்றாகப் படித்தறிந்தவர்களைப் வரவழைத்து அவர்களை ‘க்ளாஸ்’ மாதிரி நடத்தச் சொல்லிக் கேட்கலாம். இப்போது ‘ஸெளந்த்ர்ய லஹரி’, ‘அபிராமி அந்தாதி’ க்ளாஸ் எடுக்கிற ஸ்த்ரீகள் இருக்கிறார்கள் அல்லவா? அப்படி, நாம் தேடினால் மற்றவை கற்பிக்கவும் கிடைப்பார்கள். நமக்கு மட்டும் மனஸிலிருந்து தாபத்தோடு தேடினால் போதும் – புஸ்தகம் கிடைக்கும்; அதைச் சொல்லிக் கொடுக்க ஆளும் கிடைக்கும்.
வீட்டோடு இருக்கிற பெண்களின் பொழுதும் வீணாகப் போகப்படாது; ரத்னச் சுரங்கங்களாக நமக்கு இருகிற ஸமய இலக்கியம், இலக்கியம் என்றே இருப்பது ஆகியவையும் வீணாகப் போகப்படாது – அதுதான் என் மனஸில் இருப்பது
No comments:
Post a Comment