உருவாய் அருவாய் உளதாய் ....நானும் நீயும் ஒண்ணுதான்"
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
"நானும் நீயும் ஒண்ணுதான்"
வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா
எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம் நன்கறியும்.
ஒரு சதஸ் நடக்கிறது. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை
குறித்து ஒரு பண்டிதர் மூன்று மணி நேரம் பேசினார்.
அது முடிந்ததும் பெரியவா, "எதைப் பற்றி பேசினாய்?"
என்று கேட்டார். "சின்முத்திரையின் தாத்பர்யம்!"
என்றதைக் கேட்டு, "ஒரு சின் முத்திரையில் இத்தனை
விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே.....எல்லாரும்
புரிஞ்சிண்டாளா?" என்றார்.
"புரிஞ்சிண்டாளா இல்லையான்னு எனக்கெப்படித் தெரியும்?"
என்றார் அவர். அதற்குப் பெரியவா, "நாம் சொல்வதை
சரியாக புரிந்து கொள்கிறார்களா,இல்லையா என்பதைக்
கேட்பவர் முகபாவத்தைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.
அது தெரியாமல் பேசிக்கொண்டே போவதில் பயனில்லை.
கேட்பவர் திறமையை எடை போட்டு அதற்கு ஏற்றாற்போல்
பேச வேண்டும்!" என்றெல்லாம் அறிவுரைகள் தந்தார்.
அதன் பிறகு, "நீ இப்ப சொன்னயே சின்முத்திரை-அதற்கு
எனக்குத் தெரிந்த அர்த்தம் சொல்லட்டுமா..." என்று
அடக்கமாக கேட்டு விட்டுத் தொடங்கினார்.
"அடுத்தவாளைக் காட்டும் ஆள்காட்டி விரலும்,
'நான்' என்ற எண்ணத்தைக் காட்டுவது போல் தனித்துத்
தடித்து நிற்கும் கட்டை விரலும் சேர்ந்து-
"நானும் நீயும் ஒண்ணுதான்!"
என்று தட்சிணாமூர்த்தி ஸ்வாமி சொல்வதாகக்
கொள்ளலாமா?" என்றார்.
கேட்ட பண்டிதர் அவர் காலடியில் விழுந்து.
"இதுதான் சரியான பொருள்!" என்று சொல்லிச் சொல்லி
உருகினார்."இனிமேல் நான் பேசக் கத்துக்கணும்...
எனக்கு சரியாக வெளியிடத் தெரியவில்லை,
அனுக்கிரகம் பண்ணணும்!" என்று வேண்டிக் கொண்டார்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
விளக்கம் : உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும் வந்து அருள் புரிவாய்.
இந்த பாடலை பற்றி ஒரு ரசமான, ஹாஸ்யமான சம்பவம் :
ஒரு நல்ல அந்தணர் (சங்கீத வித்வான்), காஞ்சி பெரியவாளை – சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க வந்து இருந்தார். வறுமை நிலையில் குடும்பம். அந்த நிலையை போக்க, செல்வத்தை பெருக்க, ஏதாவது மந்திரம், தந்திரம், பிரார்த்தனை உண்டா என்று பெரியவாளிடம் வினவினார்.
பெரியவா : நான் சொல்வான் ஏன், உனக்கே தான் தெரியுமே, நீ தான் சங்கீத வித்வான் ஆச்சே
அந்தணர் : இல்லையே. நான் ஏதோ பாட்டு தான் பாட்டுவேன். மந்திரம், தந்திரம் எல்லாம் தெரியாது !
பெரியவா : திருபுகழ்ல உனக்கு பரிச்சியம் உண்டில்ல, நோக்கு கந்தர் அநுபூதி தெரியுமோ ?
அந்தணர் : ஓ, மனப்பாடமா, நான்னா தெரியும்…..
பெரியவா : அநுபூதியிலே அருணகிரிநாதரே அத கேக்குராரே !
அந்தணருக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது, கந்தர் அநுபூதியோ ஞான மயமான நூல், அதில் இகத்துக்கு (பணத்துக்கு) என்ன கேட்டு இருக்க போறார்…..
அந்தணர் : எனக்கு புரியலையே, பெரியவாள் புரியற மாதிரி சொன்னால் சுபம்.
பெரியவாள் : எங்க கடைசி பாட்ட பாடு…
(எங்கும் நிசப்தம். வெண்கல குரல். ஸ்வரம், லயம் சேர்த்து அந்தணர் மேலே உள்ள பாடலை பாடுகிறார்….. நல்ல சாரீரம். கண்ணை மூடி ஆழ்ந்து ரசித்தார் பெரியவாள்)
பெரியவா : எங்க கடைசி வரிய சொல்லு…
அந்தணர் : குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
பெரியவாள் : பாத்தியா இதுல இருக்கு பாரு
அந்தணர் : …….!?!……. (அவருக்கு இன்னும் புரியல)
பெரியவாள் : மெல்ல கடைசி வரிய, ஒரு ஒரு வாரத்தையா திருப்பி சொல்லு.
அந்தணர் : குருவாய்….. வருவாய்….. அருள்வாய்….. குகனே!
பெரியவாள் : பாத்தியா ‘வருவாய் அருள்வாய் குகனே, வருவாய் அருள்வாய் குகனே’ அப்பிடீன்னு கேக்குறார்
அவர்க்கு ஆச்சரியமாக இருந்தது, நமக்கும் தான் !!! பதத்தை பிரித்து படியுங்கள், ’குருவாய்…, வருவாய் அருள்வாய் குகனே!’ {குருவாய், நீ வந்து வருவாய் (பணம்) தருவாய் குகனே}
பெரியவா : அவர் எப்படி வேணாலும் சொல்லி இருக்கட்டும், ஆனா நாம இப்படி கேக்கலாம்ல… அதே குருவான சுவாமிநாதன், நமக்கு பரத்துடன், இகத்தையும் கொடுத்து விட்டு போறார். அதுனால, இதுக்கு மேல என்ன பெரிய மந்திரம் வேணும். இதையே திரும்ப திரும்ப சொல்லி வா… உன்னுடைய கஷ்டம் எல்லாம் தீரும்
*!*!*!*!*!*!*!*
இந்தப் பாடலை பல முறை பாடியும்/உணர்ந்தும் மகிழ்ந்து உள்ளேன். குறிப்பாக அந்த கடைசி வரி எனக்கு மிகவும் பிடிக்கும். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்‘ என்பது வேதம். இங்கு கடவுளையே நாம் குருவாக வந்து அருள் செய்ய வேண்டுகிறோம். என்ன ஒரு அழகான சிந்தனை, என்ன ஒரு அழகான (தேன் தமிழ்!) வார்த்தைகளின் பிரயோகம்! சத்தியமாக, சொக்க வைக்கும் தமிழ்!
ஆனால், ஒரு முறை கூட, காஞ்சி பெரியவாள் மாதிரி யோசித்தது இல்லை. இது தான் கவிதையின் சிறப்பு. வெளிப்படையாக ஒரு விளக்கம், உள்ளே பொதிந்துகிடப்பதோ பல அருமையான கருத்துகள், சிந்தனைகள், விளக்கங்கள். ஆழ்ந்து, அதனுடன் சென்று ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் இதையும், எதையும்.
No comments:
Post a Comment