Tuesday, July 23, 2013

திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் .பெரியவா

 திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்வா. 

முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!

ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா.

 ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!

யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி, பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.

எல்லாத்தையும் கேட்டுண்ட பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார் ".
 

1 comment:

  1. அன்புடையீர்,
    இதை எழுதியவர் யார் என்பதை தெரிவிக்கமுடியுமா? நன்றி.
    ரங்கனாதன்.

    ReplyDelete