குரு வகுத்த பாதையில் பிறழாமல் செல்க – 1
நன்றி : ரமணோதயம் , ஜனவரி 2019.
( ஒரு சத்குருவுக்கும் தக்க சீடனுக்கும் இடையே நிகழும் முதல் சந்திப்பின் எடுத்துக்காட்டு அஷ்டாவக்ரனுக்கும் ஜனகனுக்கும் இடையே நிகழ்ந்த ஆன்மிகத் தொடர்பு. பகவான் ரமணர் இது குறித்து தனது அணுக்கச் சீடர் ஒருவருக்குக் கூறியதை அவர் எனக்கு எடுத்துரைத்ததன் வடிவம் இது. )
அஷ்டாவக்ரன் தன் உடலில் எட்டுக் கோணல்களுடன் பிறந்தான். அவனது தோற்றமே காண்பாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவனது விளையாட்டுத் தோழர்கள் “ எங்கட்கெல்லாம் தந்தை உள்ளார். நீ தந்தையை இழந்தவன் ! ” என்று பரிகாசம் செய்தனர். அஷ்டாவக்ரன் தன் அன்னையிடம் சென்று “ என் தந்தை எங்கே ? ” என்று கேட்டான். சில ஆண்டுகள் வரை , “ உன் தந்தை வெளிதேசம் சென்று இருக்கிறார் ” என்று கூறி வந்த அன்னை , இறுதியாக , “ உன் தந்தை சிறைச்சாலையில் உள்ளார் ” என்று உண்மையை கூறிவிட்டாள். அதன்பின் வார்த்தைகள் வராது , அழத் தொடங்கினாள். அதற்குமேல் அன்னையைக் கேள்வி மூலம் தொல்லைப் படுத்த விரும்பாத அஷ்டாவக்ரன் அந்த ஊரில் இருந்த முதியவரை அணுகி , இதே கேள்வியைக் கேட்டான். அவர் இந்நாட்டின் வேந்தன் , ஜனகர் , தன் கேள்விக்கு விடை அளிக்காத அனைவரையும் , உன் தந்தை உட்பட , சிறைச்சாலையில் அடைத்து விட்டார் ” என்று பதிலிறுத்தார். உடனே அஷ்டாவக்ரன் அன்னையிடம் ஓடிச் சென்று , அவள் கண்ணீரைத் துடைத்து , “ அம்மா , நான் இப்போதே ஜனகர் அரண்மனைக்குச் சென்று விடுதலை பெற்ற தந்தையுடன் திரும்புவேன் ” என்று கூறினான். அங்ஙனம் சூளுரைத்த அந்தச் சிறுவனுக்கு பத்து வயது கூட நிரம்பி இருக்கவில்லை.
அஷ்டாவக்ரன் அரசவைக்குள் நுழைந்தபோது , ஜனக மன்னர் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழியை ஆய்ந்து கொண்டு இருந்தார். உள்ளே நுழைந்த அந்த எட்டுக் கோணல் சிறுவனைக் கண்டு ஜனகர் தவிர மற்ற அனைவரும் சிரித்தனர். அரசனை நோக்கிய சிறுவன் , மிகத் துணிவுடன் , “ அரசே , உங்கள் ஐயங்களைத் தீர்க்க வந்துள்ளேன். உங்கள் கேள்வி என்ன ? ” என்று கேட்டான். அரசன் கண்டிப்புடன் அதேசமயம் அனுதாபத்துடனும் கூறினார் : “ சிறுவனே , என் கேள்வி ஒரு தீவிரமான நிபந்தனையுடன் கூடியது. அதற்கு பதிலளிக்க இயலாதவர்கள் சிறையில் தள்ளப்படுவர். எனவே , வேறு எதனையேனும் வேண்டுக. நான் மகிழ்ச்சியுடன் தருவேன். ” சிறுவன் அதே உறுதியுடன் கூறினான் : “ இந்த நிபந்தனைகள் தன் ஞானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களைத்தான் அச்சுறுத்தும். உங்கள் ஐயம் என்னவென்று கூறுங்கள். அதை நிச்சயம் உடனே தீர்த்து வைப்பேன். ” சிறுவன் பேசிய அவ்வுறுதி மிக்க வார்த்தைகள் ஒரு கட்டளை போல் ஒலித்தன. ஜனகர் எதையும் கூறுதற்கு முன்பே அதுவரை அரசன் முன்னே நின்று கொண்டு இருந்த அஷ்டாவக்ரன் கூறினான் , “ அரசே ! தற்போது எனக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எத்தகையது ! ”
அரசன் பதிலிறுத்தார் : “ நீ எனது ஆசிரியன் நிலையில் உள்ளாய். நான் உனது விடையைக் கேட்க ஆயத்தமாக உள்ளேன். ” சிறுவன் கேட்டான் , “ அப்படியென்றால் என்ன பொருள் ? ” அரசன் , “ நீங்கள் எனது ஆசான் ; நான் உனது மாணவன். ” சிறுவன் கூறினான் , “ நீங்கள் அதை வாய் வார்த்தையாகக் கூறுகிறீர்களே தவிர செயலில் காட்டவில்லையே ! ”
இந்தச் சொற்களின் ஆழம் அரசனை நேரடியாகத் தாக்கியது. அவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி சிறுவனைப் பணிவுடன் அந்த அரியணையில் அமர வைத்தார். கீழே இறங்கி , பணிவுடன் சிறுவன்முன் கைகட்டி நின்றார்.
அஷ்டாவக்ரன் வினவினான் : “ அரசே ! உனது குருதட்சணை எங்கே ? ” அரசன் பணிந்து அஷ்டாவக்ரன் பாதங்களை வணங்கி , “ எனது ராஜ்ஜியம் முழுவதையும் உங்களுக்கு தட்சணையாக அர்ப்பணிக்கிறேன். இந்த விநாடிமுதல் எனக்குச் சொந்தமான அனைத்துமே உங்களுக்குச் சொந்தம் ” இங்ஙனம் கூறிப் பணிந்த அரசர் , ஒரு பணியாளன் எஜமானது கட்டளைக்குக் காத்திருப்பதுபோல் கைகட்டிக் காத்திருந்தார்.
“ அரசே ! நம் இருவருடைய , இப்போதுள்ள நிலையாது ? ” என்று வினவிய அஷ்டாவக்ரனுக்கு “ நீங்கள்தான் சக்ரவர்த்தி , நான் குடிமகன். நீங்கள் ஆசான் , நான் சீடன் ” என்று விடையிறுத்தார் அரசன்.
வேத வேதாந்தம் அனைத்திலும் கரைகண்ட ஜனகரே ! உங்கள் ஐயம் என்னவென்று இப்போது கூறுங்கள் என்றான் அஷ்டாவக்ரன்.
ஜனகர் கூறினார் , “ உபநிஷத்தில் ஒரு வாக்யம் உள்ளது. குதிரையின்மேல் ஏற யத்தனிக்கும் ஒருவன் ஓர் அங்கவடியிலிருந்து இன்னொரு அங்கவடியில் கால் வைக்கத் தேவையான மிகச் சிறிய நேரத்தில் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். அது அவ்வளவு எளிதானது என்று கூறப்படுகிறது. இந்த வேதாந்த உண்மையை நான் நிரூபிக்க வேண்டுகிறேன். இங்கு வந்திருந்த பல்வேறு நூலறிவாளர்கள் இதனை எனக்கு அறிவுபூர்வமாக நிரூபிக்க முயன்றனர். ஆயினும் நான் அவர்களது வியாக்யானங்களில் திருப்தி அடையவில்லை. எனவே இந்த வேதாந்த வாக்யம் மெய்யானதா என்ற ஐயம் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இதனை உங்களால் விளக்க முடியுமா ? ”
அஷ்டாவக்ரன் ஒரு குதிரையைக் கொண்டு வரச் சொன்னான் , “ ஜனகரே ! என்னை இக் குதிரையின் மீது ஏற்றி அமர்த்தி , நீங்கள்கூட நடந்து வாருங்கள். உங்கள் ஐயங்களை யாரும் அருகில் இல்லாத அந்தரங்கச் சூழ்நிலையில் நான் தீர்த்து வைக்கிறேன். ” அங்ஙனமே அஷ்டாவக்ரனை குதிரைமீது அமர்த்தி , அரசன் உடன் நடந்து சென்றார். ஒரு தனிமையான இடத்தில் குதிரையை நிறுத்தி , குதிரையின்மேல் இருந்த சிறுவன் ஜனகரைக் கேட்டான் , “ ஜனகரே ! நம் இருவருக்கும் இடையே இப்போது உள்ள உறவு யாது ? ” ஜனகர் கூறினார் , “ பிரபு ! நான் உங்கள் சீடன் , உங்கள் அடிமை ! ”
“ இப்போது என்னைக் கீழே இறக்கிவிடு ! ” கீழே இறக்கப்பட்ட அஷ்டாவக்ரன் கூறினார் , “ ஜனகரே , இப்போது உங்களது இடது பாதத்தை இடது அங்கவடிமீது வையுங்கள் ” ஜனகர் அவ்வாறே செய்தார். “ இப்போது உங்கள் வலது காலைத் தூக்கி அடுத்த அங்கவடிமீது வையுங்கள் ” என்றார் அஷ்டாவக்ரன். ஜனகர் ஒருகாலைத் தூக்கி , அங்கவடியை அடைய பாதி முயற்சியில் இருக்கும்போது அஷ்டாவக்ரன் , “ ஜனகா ! நிறுத்துவாய் ! எந்த நிலையில் உள்ளாயோ அப்படியே இரு ” என்று ஆணையிட்டார். ஜனகர் அதேநிலையில் உறைந்து போனார். அவரது இடதுகை குதிரையின் முதுகிலும் , இடது பாதம் இடது அங்கவடியிலும் வலது கால் மேல் தூக்கிய நிலையிலும் இருந்தது. அஷ்டாவக்ரர் அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றார். வலது கால் மேல் தூக்கிய நிலையில் மூன்று நாட்கள் அப்படியே உறைந்து நின்றார். அவரது தேகம் பிரக்ஞை அடியோடு நீங்கி விட்டது. அப்போது திருப்பி வந்த அஷ்டாவக்ரர் , “ ஜனகரே ! உனது வலது பாதத்தை வலது அங்கவடியின்மேல் வைப்பாய் ! ” என்றார். அந்தக் கட்டளை செவியில் விழுந்த மாத்திரத்தில் ஜனகர் ப்ரக்ஞையுற்று அங்ஙனமே செய்தார். ஆனால் அந்த சிறிய இடைவேளையில் அவர் ஆத்ம ஞானத்தைப் பூரணமாக அனுபவித்தார். தன் ஆத்மாவில் முழுமையாக கரைந்தார். ஆத்மானுபவம் பெற்ற அரசர் , அஷ்டாவக்ரரின் திருவடிகளில் வீழ்ந்தார்.
அஷ்டாவக்ரர் கூறினார் , “ அரசரே ! நாம் திரும்பிச் செல்லலாம். நீங்கள் எப்போதும் சக்ரவர்த்திதான். நான் எப்போதும் துறவிதான். ஆயினும் , துறவி – அரசன் என்ற இருவேறு வியக்திகள் இல்லை. உண்மையில் இருப்பது அந்தப் பரவஸ்துவாகிய ஆத்மா ஒன்றுதான். இப்போது நீ மெய்ஞானத்தை உணர்ந்து விட்டாய். என்னுடைய தந்தையையும் மற்ற அறிஞர்களையும் சிறையில் இருந்து விடுவிடுவிப்பாய். தத்துவ நூல்கள் முற்றிலும் மெய்யானவையே. ஆயினும் அனுபவத்தில் வராதவரை அவை வெறும் சொற்களே ! அவற்றின் மெய்மையை அனுபவிக்க குருவருள் அத்தியாவசியம். குருவருள் பெற , சீடன் தன்னுடைய அனைத்தையும் ‘ சரணாகதி ’ , செயல் உட்பட எல்லாவற்றையும் குருவுக்கே அர்ப்பணிக்க வேண்டும் குருவே அனைத்தும். அங்ஙனமே பூர்ண சரணாகதி செய்த சீடனை தனது ஒப்புயர்வற்ற ஆன்ம நிலைக்கு , பரமாத்மாவுடன் ஒன்றாகும் அந்த நிலைக்கு உயர்த்துவார். அரசனே ! நீ ஆசிர்வதிக்கப்பட்டாய். பேரரசே ! இந்த ஆன்மிக ஒருமை நிலையிலேயே எப்போதும் இருந்து இந்த மாநிலத்தை ஆள்வாய் ” என ஆசிர்வதித்தார். அஷ்டாவக்ரர்.
பகவான் ரமணரே இத்தகைய சத்குரு. அஷ்டாவக்ரர் கூறுவதுபோல பகவானும் கூறுகிறார் : “ கடவுளும் குருவும் வேறு வேறு அல்லர். குருவருள் பெற்ற ஒருவன் சந்தேகத்துக்கு இடமின்றி பிறவிச்சுழல் இருந்து காப்பாற்றப்படுவான். புலிவாயில் விழுந்த இரை தப்பாததுபோல அத்தகைய சீடனும் என்றுமே சாமான்ய உலகிற்குத் திரும்ப முடியாது. ஆயினும் இந்நிலையை அடைய சீடன் சத்குரு காட்டுகின்ற நெறியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
No comments:
Post a Comment