Wednesday, March 8, 2017

இங்கே , ஆரம்பிக்கின்றது நம்மின் பழி வாங்கும் உணர்ச்சி!

இங்கே , ஆரம்பிக்கின்றது நம்மின் பழி வாங்கும் உணர்ச்சி!
பாசத்தோடு வளர்க்கும் நம் குழந்தைகளின் தவறுகளால் ஏற்படும் இழப்பைக்கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல், ஆத்திரம் மேலிட, நம் கோபத்தைக் காட்டுகின்றோமே , பிறகு , எப்படி , பிறர் நமக்குத் துன்பம் தரும் போது , அவர் வருந்தித் திருந்தும் அளவுக்கு நன்மை செய்து விடும் மனதைப் பெற முடியும் ?
நாம் பெற்றப் பிள்ளைகளின் குற்றங்களையே பொறுத்துக் கொள்ள முடியாத நம்மால் , எப்படிப்
' பிறர் நாண நன்னயம் ' செய்துவிட முடியும்? சற்று , சிந்திக்க வேண்டியதாய் இருக்கிறதல்லவா ?
எனவேதான் , நாம் இந்த நல்ல குணத்தை , முதலில் குழத்தைகளிடம் இருந்து ,  ஆரம்பிப்போம் என்கிறேன், அல்லது , நாம் குழந்தைகளாய் இருக்கும் போதே , நமக்கு இந்தப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வதற்கு , நம்மைப் பெற்றவர்களும் , பெரியவர்களும் உறுதுணையாய் இருக்கட்டும் !

புத்தகத்தில் படித்தது !

ஒரு குழந்தை ,  தன்னுடைய அப்பா புதிதாக வாங்கி வந்திருந்த விலை உயர்ந்த காரில் , எதையோ வைத்து , கிறுக்கி விடுகிறது அதற்காக ,  அவர் ஆத்திரத்தில் அறிவிழந்து , அருகில் இருந்த , ஸ்பானரை, எடுத்து அந்தக் குழந்தையின் கையில் ஓங்கி அடித்து விடுகிறார்
அது , வலி பொறுக்க முடியாமல் 'அம்மா ' என்று , அலறிக் கொண்டு , வீட்டின் உள்ளே ஓடி விடுகிறது !
அந்த இரக்கமில்லாத , தந்தை , காரில் , என்ன கிறுக்கியிருக்கிறது என்று , பார்த்த பொழுது ,  ' I Love My Dody ' என்று , அந்தக் குழந்தை தன் பிஞ்சு விரல்களால் , எழுதியிருப்பது , தெரிய வந்தது !
தன் , காட்டுமிராண்டிக் குணத்தை நினைத்துத் தந்தையால் கண்ணீர் விட்டுக் கதறி அழத்தான் முடிந்தது ! இதுதான் இன்றைய தந்தைமார்களின் நிலை !​

​----

அன்றாடம் , நம் வீட்டில் , நடக்கும் சம்பவம் !
குழந்தை தவறு செய்து விடும் ! விலை உயர்ந்த பொருளை விளையாட்டாகப் போட்டு , உடைத்து விடும் ! போனால் போகட்டும் , நம் குழந்தைதானே , ஏதோ தெரியாமல் , செய்து விட்டது என்று , பொறுமையாக இருந்து விடுகின்றோமா ? போட்டு அடி , அடியென்று, அடித்து விடுகின்றோமல்லவா ?
அங்கே , ஆரம்பிக்கின்றது , பழி வாங்கும் மனோவியாதி!
சரி , குழந்தையை நாம் அடிப்பதன் காரணம் , அது தப்பு செய்கின்றதினால், என்றால் , தப்பு செய்கின்றவர்களை , எல்லாம் , நாம் குழந்தைகளைப் போட்டு அடிப்பதைப் போல அடித்து விடுகின்றோமா ? அல்லது , அடித்து விடத்தான் , முடியுமா?
நாம் குழந்தையை அடித்தால் , குழந்தையால் நம்மைத் திருப்பி அடிக்க முடியாது ! அல்லது , அது நம்மைத் திருப்பி அடித்தாலும் நமக்கு வலிக்காது , அதனால் தானே , நாம் , அதைப் போட்டு அந்த அடி அடிக்கின்றோம் ,  அது தானே , உண்மையான, காரணம் !


எல்லாக் குழந்தைகளுமே , தங்களுடைய இளம் பருவத்தில் , பழி வாங்குவதென்றால் என்னவென்றே தெரியாமல், அன்போடும் , பாசத்தோடும் தான் இருக்கின்றன ! ஆனால் , பின்னால் , அவர்கள் , வளர , வளரத்தான் பெரியவர்களிடம் இருந்து , தான் கற்றுக் கொண்டதை தங்களின் குணங்களாகப் பிரதிபலிக்கின்றன.

மிகச் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய இந்தக் குறளுக்கு , இவ்வளவுப் பெரிய விளக்கமா ? என்று , நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது ! எல்லோர்க்கும் தெரிந்த குறள்தான் என்றாலும் , அதன் கருத்தை உணர்ந்து பின் பற்றி வாழ்பவர்கள் ( நான் உட்பட ) நம்மில் எத்துணை பேர் இருக்கின்றோம் ?
இந்த உயர்ந்த குணத்தை வளர்த்துக் கொள்வதற்காக நாம் , மீண்டும் , குழந்தைப் பருவத்திற்குப் போகமுடியாது . ஆனால் , இனிமேல், நாம் , நமக்குப் பிறக்கும் ,  குழந்தைகளிடத்திலாவது , இந்தப் பழிவாங்கும் உணர்வு ,  மேலோங்கி விடாமல் , பார்த்து வளர்த்து வரலாம் , இல்லையா ?

No comments:

Post a Comment