காஞ்சி மஹா பெரியவாள்: பக்தர்களின் தரிசன அனுபவங்கள்
கவிதை வடிவில்
ரமணி
01. ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி
ரமணி 14/09/2012
கல்யாண சுந்தரம் பெரியவாளின் ’முரட்டு’ பக்தர்களில் ஒருவர்.
காசிக்குச் சென்று தந்தைக்கு ஷ்ராத்தம் செய்திட விழைந்தார்.
காசியில் சங்கரமடம் கேள்விப் பட்டுப் பயணம் திட்டமிட்டார்.
பெரியவாள் அனுக்ரஹத்துடன் காசிபோய்க் காரியங்கள் பண்ணினார் திருப்தியாக.
ஒருநாள் காசி விஸ்வநாதர் அன்னபூரணி தரிசனம் செய்தார்.
ஒருசின்ன சந்து வழியே மடம்நோக்கி நடந்து வந்தார்.
கையிலொரு பெரிய பையில் சின்னதாக மஞ்சள் துணிப்பை.
அதிலொரு நெகிழிப்* பையில்பணம் பயணச்சீட்டு பத்திரமாக.
காம கோடீஸ்வரர் தரிசன மானபின் பிரகாரத்தில் அமர்ந்தார்.
அடுத்தென்ன செய்யலாம் என்றெண்ணிப் பையைத் திறந்து பார்த்தார்.
’சர்வேஸ்வரா! மஹாப்ரபோ!’ -- வாய்விட்டு அலறினார் தேஹம் பதற.
பெரிய பைக்குள் மஞ்சள் பையைக் காண வில்லை!
உடலெல்லாம் நடுங்கிடக் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
இனியென்ன செய்வது? அடுத்த வேளை ஆஹாரம் எப்படி?
வேறு சல்லிக் காசு கையில் இல்லாமல் தவித்தார்.
கண்கள் இருட்டிக் கொண்டுவரத் தூணில் சாய்ந்தார் மனமுடைந்து.
குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால் நிலைமை தெரிய வில்லை.
’உன்னை நம்பி வந்ததற்கு என்னை நிர்க்கதியா விட்டுட்டியே!’
பெரியவர் பகவானிடம் அரற்றுவதாக வழிச்சென்றோர் எண்ணிச் சென்றனர்.
குடும்பத் தினரும் தவிக்க இரண்டு மணிநேரக் குழப்பம்.
பெரியவாளின் அனுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்தது இப்போது.
சத்தமே இல்லாமல் வந்து நின்றதொரு சைக்கிள் ரிக்*ஷா.
லுங்கி அணிந்த வயதான பெரியவர் ஒருவர் இறங்கினார்.
கையில் மஞ்சள் பையுடன் கல்யாண சுந்தரத்திடம் வந்தார்.
ஏற்கனவே அறிமுக மானவர்போல் ஹிந்தியில் கேட்டார் உரிமையுடன்:
"ஹே-மித்ர! துமாரா-ஹ இஸ்-தைலா? கஹீன்-இஸே சோட்-தியா ஹை-க்யா?"*
மஞசள் பையைத் தந்துவிட்டுச் சொன்னார்: "சுரக்ஷித்-ரக்லோ ப்விஷ்ய-மேய்ன்!"
வந்தவர் மாயமாய்க் கூட்டத்தில் கரைந்து சுவடின்றி மறைந்தார்!
நெகிழிப் பையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருந்தது.
வெகுநேரம் கழித்து வந்தவர் உடனே மறைந்தது எப்படி?
கண்ணீர் பெருகிடக் காஞ்சித் திசைநோக்கி நமஸ்காரம் செய்தனர்.
அழுவது தவிர அப்போதைக்கு அவர்களால் வேறேதும் முடியவில்லை!
பெரியவாள் ஆத்மஸ்வரூபன். எங்கோ இருப்பதாக எண்ணுவோர்க்கு அவர்நிலவு.
எங்கும் இருப்பதாக எண்ணுவோர்க்கு ஹஸ்தாமலகம்: உள்ளங்கை நெல்லிக்கனி.
குறிப்பு:
நெகிழி = ப்ளாஸ்டிக்
பெரியவர் ஹிந்தியில் சொன்னதின் தமிழாக்கம்:
"நண்வனே! உன்னுடையதா இந்தப் பை? எங்கேயோ விட்டுவிட்டாயா?
...இனிமேலாவது பத்திரமாக வைத்துக்கொள்."
[Courtesy: Religious | Take off with Natarajan
’மஹாபெரியவா அருள்’]
No comments:
Post a Comment