Tuesday, December 15, 2015

சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.
அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்."ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?' என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.
அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.""ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,'' என்றார்.மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான். மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள்.'' என்றார்.
மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான். ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.
இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்றுஉணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி!'' என்றார்.தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்.

கைதட்டலுக்கு அவ்வளவு சக்தி!

திருடர் தலைவன் ஒரு நாள் சர்க்கஸ் பார்த்துக் கொண்டிருந்தான்.
மிகச் சிறிய வளையத்திற்குள் கலைஞன் ஒருவன், மொத்த அரங்கமும் கைதட்ட, சுலபமாக நுழைந்து வந்தான்.
தலைவனுக்கு கலைஞனைத் தனது திருட்டு தொழிலில் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று தோன்றிற்று.
எக்ஸாஸ்டர் ஃபேன் துளையிலோ, புகைபோக்கி வழியிலோ, கண்ணமிட்ட ஓட்டையிலோ அவனை உட்புகச் சொல்லி, பூட்டிக் கிடக்கும் வீடுகளில் சுலபமாக கொள்ளை அடிக்கலாம் என்பது அவனது திட்டம்!
அதிக பணத்திற்கு ஆசைப்பட்ட சர்க்கஸ் கலைஞனும் திருடனின் திட்டத்திற்கு உடன்பட்டான்.
திருடும் நாளும் வந்த்து. கலைஞனுக்கு திருடவேண்டிய விஷயங்களைத் தெரிவித்தபின் செல்லவேண்டிய வழியைக் காட்டினான் திருடன்.
ஓட்டையில் உட்புகாது சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்து தயங்கியபடியே நின்றான்!
என்ன முழிக்கிறாய் விரைந்து சென்று களவாடி வா என விரட்டினான் திருடன்.
மன்னிக்க வேண்டும் முதலாளி, இந்த ஓட்டை அப்படி ஒன்றும் மிகச் சிறியது அல்ல, நான் நுழைந்துவிடுவேன் எளிதாக! ஆனால் யாராவது நூறு பேர் கைதட்ட வேண்டும். அப்போதுதான் என்னால் இந்த ஓட்டைக்குள் நுழைய முடியும்! அதற்கு ஏற்பாடு செய்துவிட்டு எனக்கு சொல்லி அனுப்புங்கள, நான் உள் நுழைந்து வேலையைச் சுலுவாக முடித்து வருகிறேன், என்று சொல்லி நடையைக் கட்டினான் கலைஞன்.
அப்படிச் செய்தால் திருடனின் கதி என்னாகும் என்பது நாமெல்லாம் அறிந்ததுதானே!
கைதட்டலுக்கு அவ்வளவு சக்தி! கைதட்டல்களால் எந்த வேலையும் சுலுவாகும் என்பது இந்தக் கதைமூலம் நாம் கற்கும் பாடம்!
அரைமணி நேரக் கைதட்டல் 21 நாள் அதிகமாக நம்மை வாழவைக்கிறதாம்! கைதட்டுவோமா?!

பழைய கதை! புதிய பார்வை!


ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்ள வெகு நாட்களாக ஆசை.
முயலின் வேகத்துக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியாது, உன் தகுதியை மறந்து ஆசைப் படாதே என்று மற்றவர்கள் கேலி செய்ய, ஆமைக்கு ஒரே அவமானமாக போய் விட்டது.
சரி,விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு,முயற்சி எதுவுமே செய்யாமல் இருப்பதை விட முயன்று தோற்பது ஒன்றும் அவமானம் இல்லை என்று நினைத்த ஆமை முயலுடன் போட்டி போட தயாரானது.
போட்டி நாள் அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க, போட்டி நேரமும் வந்தது, போட்டியை துவக்க நடுவர் கொடி அசைத்த நொடியில் முயல் ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.
பொறுமை கதை முடியவில்லை!.
தன் தகுதிக்கு ஆமையை ஒரு முறை வெல்வது எப்படி பெருமையாக முடியும் என்று நினைத்த முயல், ஆமையை அவமான படுத்தும் கர்வத்தோடு மீண்டும் வேறு ஒரு பாதையில் போட்டிக்கு அழைக்க, தன்னம்பிக்கை கொண்ட ஆமையும் சம்மதித்தது.
இந்த முறை கடந்த முறை வெற்றி பெற்ற கர்வத்தில் போட்டி நடிவில் முயல் ஒரு மரத்து அடியில் படுத்துத் தூங்க மனம் தளாரத ஆமை மெது மெதுவாக ஓடி வெற்றி இலக்கை அடைந்தது.
கண் முழித்த முயலுக்கு அவமானமாக போய் தான் என்ற கர்வத்தால் வந்த வினையை நினைத்து வருந்தியது, அதனால் ஆமையை மீண்டும் ஒரு முறை முயல் போட்டிக்கு அழைத்தது, ஆமையும் சம்மதித்தது.
நண்பர்களே . நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு கேட்கிறது.
பொறுமை பொறுமை! கதை இன்னும் முடியவில்லை!.
இந்த முறை மீண்டும் அதே பாதையில் போட்டி துவங்க, தோல்வியின் அவமானத்தை மறக்காத முயல் முன் போல் சுறுசுறுப்பாக ஓடி வெற்றி இலக்கை அடைந்து ஆமையை கேவலமாக பார்த்தது.
ஆமை சற்றும் மனம் தளராமல், நாம் ஏன் மீண்டும் ஒரு முறை போட்டியை வைத்துக்கொள்ள கூடாது? என்று கேட்க!ஆமையின் மன உறுதியை பார்த்து முயலோடு சேர்ந்து அனைவருமே வியந்துவிட்டார்கள்.
முயலும், நீ தோல்வி அவமானத்தில் உளறுகிறாய்.
எதோ ஒரு முறை நான் தூங்கி விட்டேன், இனி எத்தனை முறை போட்டி வைத்தாலும் என்னை உன்னால் வெற்றி பெறவே முடியாது. இதை உனக்கு நிருபிக்கவே மீண்டும் போட்டிக்கு நான் சம்மதிக்கிறேன் என்று சொன்னது.
முயல் ஆணவத்துடன் சொன்னதை பொறுமையாக கேட்ட ஆமை, கடந்த இரண்டுமுறை நீ ஓடு பாதையை தேர்ந்து எடுத்தாய், ஆகவே இந்த முறை நான் ஓடு பாதையை தேர்ந்து எடுக்கட்டுமா? என்று அமைதியாய் கேட்க, முயலும் சம்மதித்தது.
ஆக, ஆமை தேர்வு செய்த பாதையில் மூன்றாவது முறை போட்டி தயாரானது, போட்டி ஆரமித்ததும் ஓடு தளத்தில் வேகமாக ஓடிய முயல் உடனே வந்த திருப்பத்தில் திரும்பியதும் திகைத்து நின்றது.
காரணம் பாதையின் குறுக்கே ஓடிக்கொண்டு இருந்த ஆறு!, எங்கே இறங்கி நீந்தினால் ஆற்றில் அடித்து கொண்டு போய்விடுவோமோ என்ற பயம், மெதுவாக வந்த ஆமை அழகாக ஆற்றில் இறங்கி நீந்தி கரையில் இருந்த வெற்றி இலக்கை அடைந்தது.
தன் பலத்தை மட்டுமே நினைத்திருந்த முயலுக்கு இப்போது ஆமையின் பலமும் தன் பலவீனமும் புரிந்தது.
பொறுமை! பொறுமை! கதை இங்கும் முடியவில்லை!.
ஆமையின் தனம்பிகையும் புத்திசாலி தனமும் புரிந்தாலும், முயலுக்கு ஒரு ஆமையிடம் தன் தோல்வியை தாங்க முடியவில்லை.
சரி, இரண்டுக்கு இரண்டு என்று சம வெற்றியில் இருக்கும் நாம், கடைசியாக ஒரு போட்டியை வைப்போம்.
இதுவே "பெஸ்ட் ஆப் பைவ்" இதன் வெற்றியை பொறுத்து நம்மில் யார் இறுதி வெற்றியை அடைவது என்பது முடிவாகட்டும் என்று ஆமையிடம் சொன்னது.
சற்றும் மனம் தளராத ஆமை, அதே போல் இந்த முறை ஓடு பாதையையும் முன்பு போல் இல்லாமல் இருவரும் சேர்ந்து தீர்மானிப்போம் என்றது.
உடனே கடந்த முறை அனுபவத்தை மனதில் கொண்ட முயல், சரி ஆகட்டும், ஆனால் இப்போது நாம் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டதால் என் பாதையில் நான் உன்னை என் முதுகில் தூக்கிக்கொண்டு ஓடுகிறேன், அதே போல உன் பாதை வந்ததும் நீ என்னை முதுகில் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும் சம்மதமா? என்றது.
ஆமையும் சம்மதித்து, போட்டி ஆரமிக்க, முதுகில் ஆமையை சுமந்த படி முயல் பாதையில் ஓடியது, வழியில் காட்டு ஆறு வர, ஆமை இறங்கி முயலை சுமந்த படி ஆற்றில் நீந்தியது.
மறு கரைக்கு சென்று ஆற்றில் இருந்து ஆமையும், ஆமை முதுகில் இருந்து முயலும் தரையில் காலை வைக்க அங்கு வெற்றியின் எல்லை கோடு இருந்தது.
இருவருமே சமமாக வெற்றியின் எல்லை கோட்டை தொட்ட சந்தோசத்துடன், இனி என்றும் நாம் இணை பிரியாத நண்பர்களாக இருப்போம் என்று முடிவெடுத்தன.
இப்படி முடிகிறது நான் படித்த கதை.
அன்பு நண்பர்களே, ..
பலமும் பலவீனமும் எல்லா இடத்திலும் சமமாகவே இருக்கிறது. இன்று மற்றவருக்கு நீ செய்ததை, நாளை உனக்கு வேறொருவர் செய்வார் என்பதே உலக தத்துவம்.
அது நல்லதா கெட்டதா என்பதை முதலில் நீயே தீர்மானிக்கிறாய் என்பதே இங்கு என் கருத்து.
அது கணவன் மனைவி குடும்பமாகட்டும், வேலை இட சக ஊழியர்களாகட்டும் அல்லது நண்பர்களாகட்டும், ஒருவரின் பலவீனத்தில் குத்தி நம் பலத்தால் அவர்கள் மனதை காய படுத்துவதை விட, நம் பலத்தை கொண்டு அவர்களின் பலவீனத்தில் உதவி, நம் பலவீனத்தில் அவர்கள் பலத்தின் உதவியை தயங்காமல் கேட்டு வாங்கி வாழ்கையை நகர்த்தினால் எல்லாமே மாறிவிடும்.

ஸ்ரீ கிருஷ்ணன்


மஹாபாரதக் கதையின் கதாநாயகன் யார் என்று கேட்டால், விதவிதமான பதில்கள் கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன், கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து, ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு ஒரே ஒரு கதாநாயகன் தான் மனதில் தோன்றுவார். யார் அவர்.?
சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்.

மஹாபாரதக் கதையின் முடிவில் வருவது பாரதப் போர். 18 நாள் யுத்தம். வெற்றி பாண்டவர்களுக்கு என்பது தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள், கெளரவர்கள் பக்கத்தில் —
பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல். இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்..? ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் "வேலை" இருந்திருக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய திட்டம், Master Plan என்ற பாராட்டைப் பெறும்.?
1) ஜயத்ரதன்,
2) பீஷ்மர,
3) துரோணர் கர்ணன்,
4) ஜயத்ரதன்,
5) துரியோதனன்
6) விதுரர்...
அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீ கிருஷ்ணன் தீட்டிய யுக்தி தான் சரி என்று நினைப்பார்கள். இன்னும் சில பேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்று நினைக்கலாம். இதே மாதிரிதான், பீஷ்மர், துரோணர் - இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்.
ஆனால் சரியான விடை விதுரருக்காகத் தீட்டிய திட்டம்தான்.
இது என்ன புதுக் கதை? விதுரர் எங்கே சண்டை போட்டார்.? அவரை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் ஏன்
திட்டம் போட வேண்டும்.?
கேள்விக்கு விடை சொல்லும் முன் ஒரு சிறு பயணம் .
யார் இந்த விதுரர்.?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி (Step Brother) என்றும், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும்
சித்தப்பா என்றும் அவருடைய தாயார் ஒரு பணிப்பெண் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரியும். மகாநீதிமான், தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர் அவர், என்பது மஹாபாரதத்தில் நடந்த அநேக சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீ கிருஷ்ணன் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் . பீஷ்மருக்குப் பெண்களுடன் போராட
முடியாத மனநிலை. துரோணருக்குப் புத்திர பாசம்.
கர்ணனுக்கு அவனுடைய தயாள குணம். மேலும் இவர்கள் எல்லாரும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்று நியதி.
சாஸ்திரம் சொல்கிறது. எல்லா சமயங்களிலும் அப்பாமார்களும், சகோதரர்களும், கணவன்மார்களும்,
மச்சினர்களும், பெண்களை கெளரவித்து, அவர்களை உயர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன வீரர்கள் யாராவது இதன்படி நடந்துகொண்டார்களா.?
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்அதற்கான தண்டனை — யுத்தத்தில் மரணம்.
சரி, இப்போது கேள்வி. விதுரருக்காக ஏன் திட்டம் தீட்ட வேண்டும்.?
விதுரர் அப்பழுக்கில்லாதவர். மற்ற பெரியவர்கள் செய்த பிழையை அவர் செய்யவில்லை. துணிந்து, துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் கண்டித்து திரெளபதிக்காக வாதாடினார். அதனால் தருமம் தவறாத அவரை எப்படி யுத்தத்தில் சாகடிக்க முடியும்.
மேலும் பாண்டவர்கள் பக்கத்தில் தரும புத்திரர் (எமனின் மகன்) எதிர்பக்கம், அவர் தந்தை - தர்மராஜர் (விதுரர்) சமநிலை சரியாக வராதே.?
எவ்வளவு அவமானப்பட்டாலும் யுத்தம் என்று வந்தால், மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் - போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக., துரியோதனனுக்காகத்தானே போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவார். முன்னமேயே சொல்லியிருக்கிறோம். அவர் வில் எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. இப்பொழுது புரிகிறதா.?
விதுரர், கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம் இல்லை.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகிஇருக்க வாய்ப்பு உண்டு. அதனால் எல்லோரையும்விட
மிக முக்கயமான நபர், விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போராடக் கூடாது.
எப்படி தடுப்பது.?
இதோ ஸ்ரீ கிருஷ்ணனின் யுக்தி ....
ஸ்ரீ கிருஷ்ணா், விதுரரை கெளரவர்களிடமிருந்து விலக்கிவைக்கப் போட்ட திட்டம், ரொம்ப ரொம்ப சிம்பிள். Human Psychologyஐ நன்கு பயன்படுத்தி
செயல்பட்டார். எல்லோருக்கும் தெரிந்த கதை ஸ்ரீ கிருஷ்ணன் தூது. பாரதப் போரைத் தடுக்க, ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான். அவன் வருகிறான் என்று தெரிந்த திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின
இரவு, ஸ்ரீ கிருஷ்ணன் யார் வீட்டில் தங்குவார் என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரோ., “நான் தூதுவன். என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம். தனக்கு பிரியமான கிருஷ்ணன் தன் விருந்தினராக
வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். இரவு பொழுது நன்றாகவே இருந்தது — விதுரருக்கும் கிருஷ்ணருக்கும்.
மறுநாள், அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக வாதாடினான். துரியோதனன் ஒரு ஊசி முனை
நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி கிருஷ்ணனையும் அவமதித்துப் பேசினான்.
கிருஷ்ணனும் "யுத்தம் நிச்சயம்" என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார். திரும்பும்முன்,
கிருஷ்ணருடைய சாரதி கேட்டான். சுவாமி, எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்.?” என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், என் மனதில் ஒரு திட்டம் இருக்கிறது. அது நடக்குமா.? என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று சிரித்தார்.
கிருஷ்ணன் சென்ற பின் துரியோதனன் சபையில் எல்லோரும் அவனிடம் கெஞ்சி, கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துரியோதனனுக்கு விதுரர்மேல் ஒரு கடுப்பு.
அவர் பாண்டவர்கள் கட்சி என்று ஒரு நினைப்பு. போதாக்குறைக்கு விதுரர் பாண்டவ தூதரான கிருஷ்ணனை தன் வீட்டில் உபசாரம் செய்தது. விதுரர் பேச்சைக் கேட்டவுடன், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப் படுத்திப் பேசினான். குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான்.
(ஏற்க்னவே இருந்த மாண்டவ்யர் சாபம் முற்றிலும் பலித்து விட்டது)
விதுரருக்கு கோபம், வருத்தம். சபையோர்கள் நடுங்க சபதமிட்டார். எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை. அழிவு காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. என்னை அவமானப் படுத்திய இந்த துரியோதனனுக்காக நான் என் வில்லை எடுத்துப் போராட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்ல மாட்டேன்” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும்வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை என்பது வேறு கதை.
இப்பொழுது உங்களுக்கு
புரிந்து இருக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன், விதுரர் வீட்டில் தங்காமல் இருந்தால்,
விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா.? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா.?
விதுரர் வைத்திருந்த வில் மஹாவிஷ்ணுவின் வில். கோதண்டம் எனப்படும் அந்த வில்லை எவராகவும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. காண்டீபம் என்பது அதன் பெயர். போர் என்று வந்து விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது.! இதனை அறிந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தான் விதுரர் மாளிகையில் தங்கி, துரியோதனனுக்கு சினமூட்டி அவனை அப்படிப் பேச வைத்து., விதுரர் வில்லை முறிக்க வைத்து விட்டார். இதுவும் பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது..!!
இதுதான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹா தந்திர யுக்தி.....
படித்து ரசித்து பகிர்ந்தேன் ........

(ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்)

தெய்வத்தின் நிழல் ரா.கணபதி!
(ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்)
(இரண்டு அற்புத சம்பவங்கள்-நான்கு நாள் முன்பு பிறந்த நாள்
01-09-2015 கொண்டாடிய ரா.க.விற்கு ஓர் அஞ்சலி)
1) சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு
2)"இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா''
ஸ்ரீதர் சாமா-தினமணி ஏப்ரல் 26-ல் வந்த கட்டுரை
1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்
எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.
இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய "ஜய ஜய சங்கர' தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா ""உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி'' என்றாராம்.
பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் - ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த "தெய்வத்தின் குரல்' தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. "தெய்வத்தின் குரல்' தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் "ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்'என்று ஆங்கிலத்திலும்(Voice of God ) மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை "ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்' என்று புகழ்ந்திருக்கிறார்கள்.
மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை ""ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா'' என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் ""பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ'' என்றாராம். ""இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்''என்றார் இவர்.
""சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா'' என்று பீடாதிபதி கேட்டதற்கு ""எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே'' என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள "காமகோடி' என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். ""காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்''என்றாராம்.
ரா.கணபதியின் "மைத்ரீம் பஜத' புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். ""காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது'' என்று அழுதாள்.
""நீ எவ்வளவு எழுதினாய்'' என்று பெரியவர் கேட்டார்.
""8,500 நாமம் எழுதினேன்''.
""பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?''
""பொய் சொன்னேன்''.
""அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?''
என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.
""இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது. இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா''?
அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:
""நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்'' என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.
என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?
"கருணைக் கடலில் சில அலைகள்' என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் ""தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,
ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை "தண்டச் சோறு' என்று திட்டுகிறார்கள்'' என்று சொல்லி அவரிடம் அழுதான்.
அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி ""இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா'' என்று கேட்க அவர் அதிர்கிறார். ""ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்''.
""உத்தரவு பெரியவா''.
அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். ""உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.
இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ஷை. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ஷை. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.
இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை'' என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.
ரா.கணபதியின் ஏழாவது "தெய்வத்தின் குரல்' தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். "ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது'' என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். ""அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா'' என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.
ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஹோமம் செய்வதா? வேண்டாமா?
(அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?)
நன்றி - கச்சிமூதூர் கருணாமூர்த்தி,
ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலு மாமா
ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். 'எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்'.
பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர். 'ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது' என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள்.
பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.
பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் 'பெரியவா சரியான முடிவு சொல்லலையே?'என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.
பெரியவா சொன்ன பதில்....
1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.
2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.
3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும். -
இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது. அந்த சீடர், பக்தரிடம் போய், 'உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது' என்று பக்குவமாக சொன்னார்.
பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார். 'பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்'.
பெரியவாள் மனம் உருகி போய்விட்டது.
'க்ஷேமமா இரு'.
அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?

2016 -இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்ன

01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது.

இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும். இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும்.
ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்!
மேஷ இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும். 5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும். புதிய தொழில் துவங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், ஜாமீன் கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை.  ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
ஸ்ரீதுர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்கிழமை இராகுகாலத்தில் ஸ்ரீதுர்கைக்கு எழுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.
ரிஷப இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். ம-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.
மிதுன இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
கடக இராசி அன்பர்களே..
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
சிம்ம இராசி அன்பர்களே..
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.
கன்னி இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : 
திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.
துலா இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.
விருச்சிக இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும். தனுசு இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய பைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.
மகர இராசி அன்பர்களே…
அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.
கும்ப இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் :
புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.
மீன இராசி அன்பர்களே…
இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன்,  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்