Friday, June 7, 2013

பெரியவா

சர்வக்ஞன்!

ஒருவர் ஒரு மூட்டை கருணைக் கிழங்கை மடத்துக்குக் கொடுத்தார். அதை எடுத்து மசியல் செய்தாயிற்று. சாப்பிட வந்தவர்கள் சிறிது வாயில் போட்டதுமே இலையில் அப்படியே ஒரு பக்கம் ஒதுக்கி விட்டனர். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லையே.. எப்படி சாப்பிடுவார்கள் ? இது பெரியவாளுக்குத் தெரிய வந்தது.

-
சமைத்தவர் கையைப் பிசைந்து கொண்டு, “எனக்குத் தெரிந்த வரையில் கழு நீரில் அலம்பி, புளிவிட்டுக் கொதிக்க வெச்சுத் தான் பண்ணினேன். அதுக்கெல்லாம் மசியவில்லையே – அதான் மசியல் வீணாகி விட்டது!” என்றார்.

பெரியவா சொன்னார், ‘கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். அதன்படியே மறுநாள் செய்யப்பட்ட கருணைக் கிழங்கு எல்லோரும் விரும்பிச் சாப்பிடும்படி அமைந்தது.

பெரியவா வேத வேதாந்தம், பாஷ்யம் முதலியன தெரிந்து சொல்வது போலவே, எளிய சமையல் கலையும் தெரிந்து வைத்திருக்கும் சர்வக்ஞன் என்பதற்கு இது ஒரு சான்று.
 

Monday, June 3, 2013

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!


இடம்: ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.

“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).

உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளீக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.

“கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது------ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!

பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். “ பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு என்ன விபரீதம்?’ க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?”
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: “ பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!”

நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளீ எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் ‘ஸவாரி” கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.

விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் “கிறீச், கிறீச்” கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் ‘கிரீச்’ எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ‘ மதுர ஸ்வர’ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் ‘ரிபீட்’ ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.

பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.

‘ பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்’ என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளீ வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து---ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்---உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை ‘கப்சிப்’ என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.

பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.

போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!

கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத ‘க—போகிற’ திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!

விஷயமறிந்த பாட்டியம்மை விலவிலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?

மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ர்ஸன்ன முகராக ஸ்ரீசரணர்,” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?” என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

பெரியவாள்

கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தாள் .

பெரியவாள் எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்து கொண்டிருந்தது.

"என்ன வேலை பண்றே?"

"வயல் வேலைக்கு போறேன், சாமி. ஆறு பசங்கள். மாமியா, என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி.."

பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.

"சாமி கும்பிடனும்னு நினைகிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!

"காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு.

"நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் - சகல புண்யமும் கிடைச்சிடும்.."

பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். "சூரியனை கும்பிடு - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!" என்ன ஆறுதல்! என்ன கருணை!

பெரியவாள் பல வகையான பழங்களை அந்த பெண்மணிக்கு கொடுக்க சொன்னார்கள். தீனமாக வந்த மங்கை, திரும்பி போகும்போது, அரசியாக - மங்கயர்கரசியாக போனாள்.

பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!





மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் .

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை - 28



பெரியவாளிடம் பக்திபூண்டு பணிசெய்து வந்தவர்களில் ஒருவர் பெயர் ஆஞ்ஜநேயர் – குடும்ப வாழ்க்கை நடத்தியவர்.
அவருடைய பெற்றோர்கள் காலமாகிவிட்டார்கள்; மனைவியும் போய்விட்டார். ஒரே மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாகிவிட்டது.
உலகக் கடமைகள் இனி ஏதுமில்லை.

”எனக்கு சந்யாசம் கொடுக்கணும்“ என்று பெரியவாளிடம் பலதடவை விண்ணப்பித்துக் கொண்டார். அவர் கோரிக்கையை, பெரியவா தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்கள்.

ஆஞ்ஜநேயருக்குப் பொறுக்கவில்லை.

“எனக்குக் கடமை – பொறுப்பு என்று எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டேன்.”

“உனக்கு இன்னும் ஒரு பொறுப்பு இருக்கு…”

என்ன பொறுப்போ? எப்படிக் கேட்பது? யாரைக் கேட்பது?

ஆஞ்ஜநேயருக்கு ஒரு சகோதரர். அவர் பிரும்மசாரி, உஞ்சவிருத்தி எடுத்து, பாகவதோத்தமராக, புனிதமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.
பகவன்நாமாவை சொல்லிக்கொண்டே, ஒருநாள், உடலை நீத்தார் அவர்.கர்மாக்களை யார் செய்வது? ஆஞ்ஜநேயரைத் தவிர வேறு உறவினர் இல்லை.
தகவல் கிடைத்ததும், ஆஞ்ஜநேயர் சென்று, அந்திமக் கிரியைகளைச் செய்துவிட்டு வந்தார்.

பின்னர் ஒருநாள், “உன் கடமையெல்லாம் முடிஞ்சு போச்சு. சந்யாஸம் வாங்கிக்கலாமே?” என்றார்கள் பெரியவாள்.

பெரியவாள், தன் கோரிக்கையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்ததன் காரணம் அப்போதுதான் ஆஞ்ஜநேயருக்குப் புரிந்தது!
சில நாட்களுக்குள்ளேயே, அவர், அனந்தானந்த ஸ்வாமிகள் ஆனார்!

பெரியவாளுடன் கூடவே இருந்து, அவர்கள் சொன்னதையெல்லாம் எழுதி வைத்து, பின்னர், ‘தெய்வத்தின் குரலு’க்கு ஏராளமான விஷயங்களைக் கொடுத்துள்ளார்.

கடல் கடந்து போவது… பெரியவா!

கடல் கடந்து போவது…

Maha Periyavaa May 27, 2013 Balhanuman


பிராம்மணர்கள் கடல் கடந்து போவது ஆசாரகாவலரான ஆசார்யனுக்கு உகந்ததல்ல என்று அறிந்த ஒரு அந்தண அடியார், சீமை சென்று திரும்பிய பின், அங்கும் தமது ஆசாரங்களை வழுவாது பின்பற்றியதை பெரியவாளிடம் தெரிவித்தால் அதை அவர்
ஏற்று கொள்வார் என்று எண்ணினார்.

“இங்கிலாந்தில் கூட விடாமல் அமாவாசை தர்ப்பணம் பண்ணினேன்”

“அதாவது…..நீ போனது போறாதுன்னு, ஒன்னோட பித்ருக்களையும் சீமைக்கு வரவழைச்சுட்டியாக்கும்?” என்று சிரித்துகொண்டே ஒரு வெட்டு வெட்டினார் பெரியவா!


ஒருமுறை திருமதி M S ம் திரு சதாஸிவமும் கச்சேரிக்காக வெளிநாடு
சென்றுவிட்டு திரும்பியதும் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார்கள். பூஜை
முடிந்து எல்லாருக்கும் தன் கையாலேயே தீர்த்தம் குடுத்துக்
கொண்டிருந்தார் பெரியவா. அந்த வரிசையில் சதாஸிவத்துக்கு பின்னால் திரு
ரா.கணபதி நின்று கொண்டிருந்தார்.

சாதாரணமாக கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணனுக்கு பெரியவா தன்
கையால் சந்திரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்ர விரோதமாகையால்
சதாசிவத்துக்கு பெரியவா கையால் தீர்த்தம் கிடைக்காது என்பது ரா.கணபதிக்கு
நிதர்சனமாக தெரிந்திருந்தது. ஆனால், சதாசிவத்துக்கு இந்த விஷயம்
தெரியாதாகையால் ரொம்ப சந்தோஷமாக இவரோடு பேசிக்கொண்டே கியூவில் முன்னேறிக்கொண்டிருந்தார்.

ரா.கணபதிக்கு ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. “பெரியவாளே கதி” என்று நகர்ந்து
கொண்டிருந்தார். இதோ! சதாஸிவம் பெரியவா முன்னால் தீர்த்தத்துக்காக கையை
நீட்டிவிட்டார்…….

பெரியவா உத்ரணியை பாத்திரத்துக்குள் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த
தேங்காயை எடுத்து தரையில் தட்டி உடைத்தார்……

“இன்னிக்கி ஒனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” இளநீரை சதாசிவத்தின் கைகளில்
விட்டார்! சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்! ரா.கணபதிக்கோ
நிம்மதி பெருமூச்சு!

“பாத்தியா? இன்னிக்கி பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷல்..லா தீர்த்தம்
குடுத்துட்டார்!…”

சாஸ்த்ரத்தையும் மீறாமல், பிறர் மனஸ் நோகாமல் தீர்வு காண தெய்வத்தால்
மட்டுமே முடியும்!

Sunday, June 2, 2013

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள்

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை - 28.



சென்னையில் தங்கியிருந்த காலகட்டத்தில், தம்புச் செட்டித் தெருவிலிருக்கும் சங்கரமடம், திருவொற்றியூர் கோயிலிலுள்ள சிலா சாஸனங்கள், சுவர்ச் சித்திரங்கள் ஆகியவற்றைப் படம் எடுக்கச் சொல்லி உத்தரவாயிற்று.

‘ஆதிசங்கரர், காஞ்சி க்ஷேத்திரத்தில் ஸர்வக்ஞ பீடாரோஹணம் செய்து, கடைசிவரை அங்கேயே தங்கியிருந்தார்’ என்பதற்கான பல சான்றுகளுடன், திரு.ரமேசன் (இ.ஆ.ப.) எழுதிய புத்தகத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றன.

பெரியவாள், சென்னையை அடுத்த காட்டுப் பள்ளியில் தங்கியிருந்த காலம்.

பெரியவாளுக்குக் கனகாபிஷேகம் செய்யப்பட்ட போது, தங்கத்தாலான வில்வங்களை அபிஷேகம் செய்தார்கள். அதில் ஒரு வில்வத்தை வாங்கிக்கொண்டு வந்திருந்தார் என் தாயார். பெரியவாள் கையில் கொடுத்து, அவர்கள் ஆசீர்வாதத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர விருப்பம்.
பெரியவாளிடம் அந்தத் தங்க வில்வத்தை சமர்ப்பித்தார் என் தாயார்.

“இதை எனக்கே கொடுத்துவிடேன்!...”

என் தாயாருக்கு உடம்பு சிலிர்த்தது.

“பதிலாக, நான் உனக்கு ஒரு புஷ்பம் தருகிறேன்..!”

பெரியவா கொடுத்த புஷ்பத்தை, நவரத்தினமாகக் கருதி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என் தாயார்.

இவ்வாறு பல பேர்களிடம், குந்துமணி குந்துமணியாகத் தங்கம் பெற்று, ஒரு சொம்பு செய்து, அதில் தேனை நிரப்பி, பூஜை – மந்திர ஜபம் செய்யச் செய்து (ஆஞ்ஜநேய மந்திரம் என்று நினைவு). பாரதநாட்டின் வடமேற்கு எல்லையில் நடந்து கொண்டிருந்த போரில், பாரத வீரர்களுக்குத் தைரியம் ஊட்டுவதற்காக அனுப்பி வைத்தார்கள். அந்தப் போரில் நமக்கே வெற்றி கிடைத்தது.

ஸ்ரீ மஹா பெரியவா..

காஞ்சி மடத்திலேயே தங்கி இருந்ததால் பெரிய மனிதர்கள் வந்து போவதை அதிகம் காண முடிந்தது.
கடவுள் இல்லை என்று கூறி வந்த ஒரு கட்சி பிரமுகர் விடியற்காலை நான்கு மணிக்கு சென்னையிலிருந்து வந்து பெரியவாளை தரிசித்து சென்றது மறக்க முடியாது. R M வீரப்பனை பெரியவர் வீரப்ப ஆழ்வார் என்றே அழைப்பார்.

ஒரு முறை பெரியவரை தமிழக எல்லையில் வரவேற்க வந்த R M வீரப்பனிடம் "உங்க கிட்டக்க MLA இருக்கற மாதிரி என் கிட்டகையும் ஒரு MLA இருக்கான் தெரியுமா? " என்று கேட்டு சந்திராவை கை காட்டினார். (சந்திரா விற்கு MLA என்ற ஒரு பெயரும் உண்டு.

அதே போல் மன நலம் குன்றிய குழந்தைகளிடம் பரிவு உண்டு. அந்த குழந்தைகளிடம் ஒரு சிறு குச்சியை கொடுத்து "இந்தா இங்க ஒரே கூட்டமா இருக்கு யாரும் ஒழுங்கா வரிசைல வரமாட்டேங்கறா நீ இருந்து கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு " என்பார்.

"அவன் சந்திரா தம்பி ராம்ஜி இங்கதான் இருக்கான் படிப்ப முடிச்சுட்டு , பாண்ட்ஸ் லேந்து நாராயணன் வந்திருக்கார் பெரியவா உத்தரவு கொடுத்தா அவா கம்பனில சேத்துக்க செய்வா" என்றார் பாலு அண்ணா
" உங்க கம்பெனில வேலை ஏதாவது காலியா இருக்கா? " என்றார் நாராயணனிடம், "இருக்கு எடுத்துக்கலாம் "
"அவன் தகுதிக்கு எதாவது வேலை காலியா இருந்தா முயற்சி பண்ணி பாரு" என்றார் பெரியவர்

நாராயணன் மாமா நடுவில் அமர்ந்திருக்க சுற்றி நிறைய பேர் இருந்தனர்.
(மடத்திலேயே தங்கி இருந்தவர்கள் - பெரியவருக்கு உதவியாளர்கள்) அப்ளிகேஷனை கொடுத்தேன் .

என்னுடைய கேம்பஸ் இண்டர்வியு மடத்திலேயே நடந்தது.

"சந்தியாவந்தனம் ஒழுங்கா பண்றயா?"
"மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிண்டு அபிவாதயே சொல்லு "
"அப்பா அம்மாவ கடைசி வரையிலும் ஒழுங்கா வெச்சி காப்பத்தனும் "
என்று என்னை சுற்றி இருந்த அணைத்து சாஸ்திரிகளும் கேள்வி கேட்டார்கள் - நாராயணன் அவர்களை தவிர .

Interview வில் முன்பே மனபாடம் செய்து கொண்டு போன படி உடனேயே ஒப்பித்தேன்.

"My Name is Ramkumar and my father's name is Venkataraman. I have completed my BA in AVC College Mayavaram.in the year..." என்று கட கட என சொல்ல ஆரம்பித்தேன் .

"இதெல்லாம் நாங்க உன்ன கேக்கவே இல்லையே . எல்லாம்தான் உன்னோட அப்ப்ளிகேஷன்ல இருக்கே? இங்க வேலைல சேர சம்மதமா?" என்றார் அப்போதைய GM

ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளால் மட்டுமே எனக்கு பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்தது.(1985/07/05). முதல் முதலாக பாண்டிச்சேரியில் போஸ்டிங் போட்டார்கள்.

ஒரு மாதம் போனதே தெரிய வில்லை . முதல் மாத சம்பளத்தை ஒரு கவரில் போட்டு கொடுத்தார்கள்.

அந்த வாரமே அந்த கவரை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் போனேன்
ஒரு தட்டு நிறைய பழங்கள் வாங்கிக்கொண்டேன் . சந்திராவிடம் போய் சொன்னேன் . என்னை வேதபுரி அழைத்துப்போனார்.
பழத்தட்டை பெரியவர் முன் வைத்தேன் அதன் மேல் என்னுடைய முதல் மாச சம்பளத்தை வைத்தேன்.

"என்ன ?" என்பது போல் வேதபுரி மாமாவை பார்த்தார் பெரியவர்.
"சந்திரா தம்பி வந்திருக்கான் உங்க ஆசிர்வாததால வேலை கிடைச்சது.
முத மாச சம்பளம் கொண்டு வந்திருக்கான்."

பெரியவர் அதனை தன் கைகளால் தொட்டு கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.

." அந்த கவர் பெரியவாளுக்கு தானாம்" என்று வேதபுரி கவரை தொட்டு காண்பித்தார்.
பெரியவர் சிரித்துக்கொண்டே "எனக்கா?" என்று கேட்டார்.
"ஆமாம் "என்று வாயை பொத்திய படி தலையை ஆட்டி....

தலையில் பிறை போல் செய்கை காட்ட .."சந்திராவுக்கு உத்தரவாறது வர சொல்லு .." என்று குரல்கள் பறந்தன. சந்திரா ஓடி வந்தான்.

"உன் தம்பி அவனோட முதல் மாச சம்பளத்த எனக்கு கொடுத்திருக்கான். நீ என்ன பண்ற அதுலேந்து தெனைக்கும் அந்த காசு தீரர வரைக்கும் நான் ராத்திரி சாப்பிடறதுக்கு பால் வங்கி தர .." என்று அவனுக்கு உத்தரவு போட்டார்.

எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .நான்கு முறை நமஸ்கரித்து விட்டு உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

"டேய் சந்திரா உந்தம்பிக்கு பெரிய உத்தியோகம் ஆகி இருக்கமே ?எவளோட சம்பளம் ?" என்றார்கள் அங்கே தங்கி இருந்தவர்கள்.

சந்திரா மகிழ்ச்சியுடன் கூறினான்

"575" 1985 ல்.... என்றார் சந்திரா